மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 27 ஜூலை 2021

வன்னியர்களுக்கு 10.5%: உறுதிப்படுத்திய ஸ்டாலின்

வன்னியர்களுக்கு 10.5%:  உறுதிப்படுத்திய ஸ்டாலின்

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தின் கடைசி சட்டமன்றக் கூட்டத் தொடரில், தேர்தல் ஆணையத்தின் சட்டமன்றப் பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளிவருவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னதாக, “வன்னியர்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டில் 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி” தீர்மானம் நிறைவேற்றினார் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த இட ஒதுக்கீட்டை இப்போது உறுதிப்படுத்தி அரசாணை வெளியிட்டிருக்கிறார் இப்போதைய திமுக ஆட்சியின் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அப்போதைய திமுக தலைவர் ஸ்டாலின், “திமுக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றால் வன்னியர்களுக்கு எம்பிசி 20% இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும்”என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் அதை அப்போது ராமதாஸ் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, 2020 டிசம்பரில் இருந்தே வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கேட்டு போராட்டங்களை நடத்தத் தொடங்கியது. அதன் அடுத்த கட்டமாக ஸ்டாலின் கூறிய உள் இட ஒதுக்கீடு கோரிக்கையையே பாமகவும் கையிலெடுத்தது.

சட்டமன்றத் தேர்தலில் வட மாவட்டங்களில் பாமகவின் தயவு அதிமுகவுக்குத் தேவை என்பதை உணர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி...இதுகுறித்து ராமதாசுடன் அதிமுக அமைச்சர்களை பேச்சுவார்த்தைக்கு அனுப்பினார். இட ஒதுக்கீடு அளித்தால்தான் கூட்டணி என்று ராமதாஸ் வெளிப்படையாக அறிவித்த நிலையில்... பிப்ரவரி 26 ஆம் தேதி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வன்னியர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். “`இது தற்காலிகமானதுதான். சாதிகள் குறித்த புள்ளிவிவரங்கள் சேகரித்த பிறகு 6 மாதம் கழித்து மசோதா மாற்றியமைக்கப்படும்” எனவும் பேரவையில் அறிவித்தார்.

இந்த இட ஒதுக்கீட்டால் எம்பிசி பட்டியலில் இருக்கும் தென் மாவட்டத்திலுள்ள குறிப்பிட்ட பிரிவினர் அதிமுகவை எதிர்த்தார்கள். இதையடுத்து தேர்தல் களத்திலேயே, “வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீட்டு என்பது தற்காலிகமானதுதான்” என்று அப்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அப்போதைய அமைச்சர் உதயகுமார் போன்றோர் தென் மாவட்டங்களில் பகிரங்கமாக அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில்,சட்டமன்றத் தேர்தலில் வட மாவடங்களில் கணிசமான இடங்களை திமுக கைப்பற்றியது. பாமக வெறும் 5 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.

திமுக அரசு பொறுப்பேற்று 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்ற நிலையில், பாமக தலைவரும், பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.கே.மணி,

” தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள்ள 20 விழுக்காடு ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “இவ்விவகாரம் தொடர்பாக, இரண்டு நாட்களுக்கு முன்பு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இவர் மூலமாக ஒரு கடிதத்தை எனக்கு அனுப்பினார். அதில் அவர், பல்வேறு பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி, இதனுடைய முக்கியத்துவத்தை, இதிலுள்ள பிரச்சினைகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, நிறைவாக, 'தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதற்கான தமிழ்நாடு சட்டம் எண் 8/2021-ஐ விரைந்து செயல்படுத்தும்படியும், அதற்குத் தேவையான அரசாணைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உடனடியாகப் பிறப்பிக்கும்படியும்' குறிப்பிட்டிருந்தார்.

நான் இதையெல்லாம் அடிப்படையாக வைத்து இங்கே சொல்ல விரும்புவது, ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து கொரோனா தொற்றைக் குறைப்பதற்காக இரவு பகல் பாராது கவனம் செலுத்தி, இப்போதுதான் கொஞ்சம் மூச்சு விட ஆரம்பித்திருக்கிறோம். எனவே, உறுப்பினருடைய கோரிக்கை குறித்துச் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய துறையினுடைய அதிகாரிகளோடு விரிவாக ஆலோசனையும், ஆய்வும் நடத்தி, நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்” என்று உறுதி அளித்தார்.

இதற்கிடையே வன்னியர் சமுதாயத்திற்கு மட்டும் உள் ஒதுக்கீடு வழங்கப்படுவதால் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே வேலை மற்றும் கல்வியில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும். உரியக் கணக்கீடு இல்லாமல் 10.5 சதவிகித ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டது. இந்த வழக்குகளை கடந்த ஜூலை 2ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் 10.5% உள் ஒதுக்கீட்டுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

நேற்று (ஜூலை 26) முதல் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் அதில், மாணவர் சேர்க்கையில் நடைமுறைப்படுத்தப்படும் இட ஒதுக்கீட்டு முறை குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை.

இதுகுறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ், நடப்பாண்டு பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் வன்னியர் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தப் பின்னணியில்தான் நேற்று (ஜூலை 26) இரவு, “சட்ட வல்லுநர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு... அரசுப் பணி நியமனங்களிலும் கல்வி வாய்ப்புகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சீரமரபினருக்கு வழங்கப்பட்டுள்ள 20% இட ஒதுக்கீட்டுக்குள்ளாக வன்னியர்கள், சீர் மரபினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட சிறப்பு ஒதுக்கீட்டை 26-2-2021 முதல் செயல்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டு இன்று (ஜூலை 26) முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதுமட்டுமன்றி இந்த ஆண்டு முதல் தொழில்கல்வி உள்ளிட்ட அனைத்து கல்வி சேர்க்கைகளும் மேற்கூறிய புதிய சிறப்பு ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்படும்” தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் டாக்டர் ராமதாஸுக்கு 83 ஆவது பிறந்தநாளை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் வாழ்த்திய நிலையில் நேற்று ராமதாஸுக்கு பிறந்தநாள் பரிசாகவே இந்த அரசாணையை வெளியிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

நேற்று இரவு அரசின் அறிவிப்பு வெளிவந்த சில நிமிடங்களிலேயே அதற்கு வரவேற்பும் நன்றியும் தெரிவித்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.

“தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டை 26.02.2021 முதல் நடைமுறைப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ஆணையிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முதலமைச்சருக்கு உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10.50% நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதால் மிக மிக பின் தங்கிய நிலையில் உள்ள வன்னிய மக்களின் நிலைமை படிப்படியாக மேம்படும்” என்றவர்,

மேலும், “வன்னியர்களின் கல்வி - வேலைவாய்ப்புகள் மேம்பட வழிவகுக்கும் இந்தச் சட்டத்தை இயற்றிக் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோருக்கும் நன்றிகள்”என்று குறிப்பிட்டுள்ளார்.

-வேந்தன், கவிபிரியா

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

செவ்வாய் 27 ஜூலை 2021