மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 27 ஜூலை 2021

பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளிக்கல்வி: நேரடி கள ஆய்வும் அதன் பரிந்துரைகளும்!

பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளிக்கல்வி: நேரடி கள ஆய்வும் அதன் பரிந்துரைகளும்!

பேரா. நா.மணி

‘கொரோனா காலத்தில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்து விட்டார்கள்’, ‘பெற்றோர்களால் பணம் கட்ட முடியவில்லை. எனவே, அரசுப் பள்ளிகளுக்கு மாறி வந்து விட்டார்கள்’, ‘இணையவழிக் கல்வி, கல்வி தொலைக்காட்சி எதுவும் பெரிய அளவில் போய்ச் சேரவில்லை’... இப்படிப் பரவலாக பேசப்படுகிறது. விவாதப் பொருளாகிறது. ‘பள்ளிகள் பூட்டிக்கிடப்பதால் பிள்ளைகளுக்கு ஜாலிதான். பெற்றோர் பாடுதான் திண்டாட்டம்’, ‘விளையாடிப் பழகிய குழந்தைகள் பள்ளிக்கூடம் திறந்தாலும் போவது கஷ்டம்தான்’... இப்படியும்கூட பலவாறாகப் பேசப்படுகிறது.

இதில் எது உண்மை? எது தவறு? இது உண்மை... இது தவறு என்று தெரிந்தாலும், எது எந்த அளவுக்கு உண்மை? இவையெல்லாம் தெரிந்தால்தானே அரசும் சிவில் சமூகமும் ஏதேனும் செய்ய முயற்சி செய்ய முடியும்?

இப்படி சிந்தித்து உண்மைநிலையைத் தெரிந்துகொள்ள களத்தில் இறங்கியது தமிழ்நாடு அறிவியல் இயக்கம். ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாகவும் கவலையளிக்கும் விதமாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டின் 35 மாவட்டங்களில் 187 தன்னார்வலர்கள், 200 இடங்களில் இந்த ஆய்வை மேற்கொண்டனர். 63 கேள்விகள் அடங்கிய ஒரு கேள்வித்தாள் பட்டியலைத் தயார் செய்து, மாணவர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர் இருவரையும் உடன் இருத்தி, கேள்வித்தாள் பட்டியலைப் பூர்த்தி செய்ய சராசரியாக 25 நிமிடங்கள் தேவைப்படுகிறது. 2,137 மாணவர்களிடம் இவ்வாறு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்கள் 90 விழுக்காடு. அரசுப் பள்ளி மாணவர்கள் அல்லது சிரமத்துடன் சிறிய தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள். இந்த ஆய்வை மேற்கொள்ள, மொத்தமாக 800 மணி நேரம் செலவழித்துள்ளனர், அறிவியல் இயக்கத்தின் தன்னார்வலர்கள்.

ஆய்வு முடிவுகளும் அரசு செய்ய வேண்டியதும்..

குழந்தை தொழிலாளர்கள்:

இந்த ஆய்வின்படி 12.9 விழுக்காடு குழந்தைத் தொழிலாளர்களாக மாறியுள்ளார்கள். இவ்வாறு குழந்தைத் தொழிலாளர்களாக மாறியுள்ள இவர்கள், 54 விழுக்காடு சேவைத்துறை வேலைக்குச் செல்கின்றனர்.‌ விவசாய வேலைகளில் கூலிப் பணியாளர்களாக செல்வோர் 24 விழுக்காடு. தொழிற்சாலைகளிலும் சுயவேலை செய்துவரும் பெற்றோருக்கு உதவியாக 10 விழுக்காடு குழந்தைகள் வேலை செய்கிறார்கள்.

குழந்தை தொழிலாளர்கள் வேலை நேரமும் கூலியும்:

4 மணி நேரம் வரை வேலை செய்யும் குழந்தைகள், 4 முதல் 6 மணி நேரம் வரை வேலை செய்யும் சிறார்கள், 6 முதல் 8 மணி நேரம் வேலை செய்யும் குழந்தைகள், 8 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்யும் குழந்தைகள்... இப்படிப் பல நிலைகளில் இவர்கள் வேலை செய்கிறார்கள். இதில் 8 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்யும் குழந்தைகள் 10 விழுக்காடு என்பது அதிர்ச்சியளிக்கிறது.

இப்படி உழைக்கும் குழந்தைகளில், 50 ரூபாய் வரை மட்டுமே கூலி கிடைக்கும் குழந்தைகள் - 35 விழுக்காடு. 50 ரூபாய் முதல் 100 வரை கூலி வாங்கும் குழந்தைகள் - 25 விழுக்காடு. 100 ரூபாய் முதல் 200 வரை கூலி கிடைக்கப்பெறும் குழந்தைகள் எண்ணிக்கை - 25 விழுக்காடு. நாளொன்றுக்கு 200 ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் குழந்தைகள் - வெறும் 14 விழுக்காடு மட்டுமே.

பள்ளியில் இருந்து விடுபட்ட குழந்தைகள்:

2020ஆம் ஆண்டு, மார்ச் 24ஆம் தேதியன்று முழு முடக்கம் அறிவிக்கப்பட்டது. இன்றுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. பள்ளி மூடலின்போது தொடக்க நிலை வரை மட்டுமே இருக்கும் பள்ளியில் படித்த சில குழந்தைகள் அப்படியே இருக்கிறார்கள். வேறு பள்ளிக்கு மாறிச் செல்லவில்லை. அதேபோல், நடுநிலைப் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்த குழந்தைகளை உயர்நிலை அல்லது மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கவில்லை. இதைவிட அதிர்ச்சி அளிக்கும் விஷயம், பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், 12ஆம் வகுப்புக்கு அதே பள்ளியாக இருந்தாலும், புதிய சேர்க்கை போன்ற நடைமுறைகளைப் பின்பற்றி 11ஆம் வகுப்பில் சேர்க்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டும் என்று பல பெற்றோர்களுக்குத் தெரியவில்லை. இவ்வாறு ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு கொரோனா காரணமாக மாறிச்சென்று சேரத் தெரியாமல், பள்ளிகள் மூடித்தானே கிடக்கிறது; மீண்டும் திறக்கும்போது பார்க்கலாம் என்று ‌பள்ளியில் இருந்து விடுபட்ட அல்லது தற்காலிக இடை நிறுத்தம் மட்டுமே 11 விழுக்காடு என்பது பேரதிர்ச்சி.

மனம் இருந்தும் மார்க்கம் இன்றி தவிக்கும் குழந்தைகள்:

மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது பள்ளிக்குச் செல்ல தயாராக இருக்கிறீர்களா என்று கேட்டால், ‘ஆம்’ என்று ஒற்றைக் குரலில் 95 விழுக்காடு குழந்தைகளிடமிருந்து பதில் வருகிறது. 5 விழுக்காடு மாணவர்களிடமிருந்து மட்டுமே ‘இல்லை’ என்று பதில் வருகிறது. அடுத்து, ‘பள்ளிகள் திறக்கப்படும்போது பள்ளி செல்ல ஏதேனும் தடை இருக்கிறதா?’ என்று அடுத்த கேள்வியை கேட்கும்போது, ‘ஆம்... பிரச்சினை இருக்கிறது’ என்று 12 விழுக்காடு மாணவர்கள் கூறுகின்றனர். இவ்வாறு பதில் கூறும்போது அவர்களது பெற்றோரும் உடன் இருக்கின்றனர். இந்த 12 விழுக்காட்டில், ‘ஏன்... பள்ளி செல்வதில் என்ன தடை?’ என்று கேட்டால், ‘குடும்பத்தின் பொருளாதார நிலை’ என்று சொல்பவர்கள் மட்டும் 5 விழுக்காடு. ஆக, ஆய்வில் பங்கெடுத்துக்கொண்ட மாணவர்களில் இடை விலகல் அபாய கட்டத்தில் இருப்பவர்கள் 12 விழுக்காடு. அதிலும் குறிப்பாக, மிக மிக அதிக இடை விலகல் அபாயம் உள்ளவர்கள் 5 விழுக்காடு என்று தெரியவருகிறது.

இடை நிற்றலைத் தடுக்க அரசு என்ன செய்ய வேண்டும்?

1) பள்ளிகள் திறக்கப்பட்டதும், ஒவ்வொரு பகுதியில் உள்ள பள்ளிகள் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், தங்கள் பள்ளி சார்ந்த குடியிருப்புப் பகுதிகளில் உள்ள அனைத்து குழந்தைகளும் மீண்டும் பள்ளிகளில் சேர்ந்துவிட்டார்களா என்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும்.

2) மேல் வகுப்பு செல்லாமல் பள்ளி இடைநின்ற மாணவர்கள் அனைவரையும் வயதுக்கேற்ற வகுப்பில் சேர்ப்பதற்கு ஏற்ப வழி வகை செய்ய வேண்டும். அது, 14 வயது கல்வி உரிமை சட்டப்படி மட்டும் அல்லாமல், அதைத் தாண்டியும் சிறப்பு விதிவிலக்கு அளித்து, வயதுக்கு ஏற்ற வகுப்பில் சேர்க்க அரசு ஆணையிட வேண்டும்.

3) வறுமையின் காரணமாக வேலைக்குச் சென்றே ஆக வேண்டும் என்று சூழ்நிலை இருக்கிற 5 விழுக்காடு மாணவர்களைப் பள்ளிகளில் தக்கவைத்துக்கொள்ள அவருடைய குடும்பத்துக்குக் கூடுதல் உணவுப் பொருட்களை நியாயவிலைக் கடைகளில் வழங்குதல் உள்ளிட்ட சலுகைகளைத் தர அரசு ஆலோசனை செய்ய வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது

அரசு செய்ய வேண்டியது என்ன?

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய நேரடி கள ஆய்வில், அரசுப் பள்ளிகளில் 5 விழுக்காடு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து உள்ளது என்பது தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 7 விழுக்காடு மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளதை ஒப்பிட்டு உத்தரவாதம் செய்ய முடிகிறது. தற்போது அரசுப் பள்ளிகளுக்கு வந்துள்ளார்கள், இதைச் சிறந்த பள்ளிகள் என்று கருதி வரவில்லை. கொரோனாவால் வேலை மற்றும் வருமானம் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் இப்படிக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள், கற்றல் செயல்பாடுகள், ஆசிரியர் மாணவர் விகிதம் ஆகியவற்றை மேம்படுத்தி, ஏற்கனவே அவர்கள் படித்த தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அரசுப் பள்ளிகள் தரமானவை என்ற நம்பிக்கையை அரசு உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்க தவறினால், அவர்கள் மீண்டும் தனியார் பள்ளிகளுக்கே திரும்பி விடுவார்கள். எனவே, அரசு கற்றல் கற்பித்தல் தரத்தை, உட்கட்டமைப்பு வசதிகளை, கல்விச் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மேலும் தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்களை அரசுப் பள்ளிகளை நோக்கி ஈர்ப்பது சாத்தியம்.

அதிகபட்ச முன்னுரிமை கொடுத்து உடனடியாக சத்துணவுக்கு தர வேண்டும்:

தினந்தோறும் ஒரு முட்டை. உண்ணும் உணவு சலிப்பைத் தரக் கூடாது என்று தினம் ஒரு கலவை சாதம், காய்கறிகள் என்று தமிழ்நாட்டில் சத்துணவு மேம்பட்டு இருக்கிறது. இத்தகைய உணவு நல்ல ஊட்டத்தை, எளிய வீட்டு குழந்தைகளுக்கு வழங்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பள்ளிகள் மூடப்பட்ட பின்னர், முற்றாக நிறுத்தப்பட்டது. பின்னர், உலர்பொருட்கள் என்று கொடுக்க தொடங்கியது அரசு. இது நிச்சயம் முன்னர் சாப்பிட்டு வந்த சத்துணவுக்கு ஈடாகாது.

அதோடு மாதம் ஒன்றுக்குச் சராசரியாக 20 முட்டைகள் சாப்பிட்டு வந்த குழந்தைகளுக்கு இப்போது 10 முட்டைகளே வழங்கப்படுகின்றன. அதில் அந்தக் குழந்தைக்கு எத்தனை விழுக்காடு போய் சேரும்? கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட கல்வி பாதிப்பைக் காட்டிலும் இது பெரும் பாதிப்பு. ‘சத்துணவு இல்லாமையால் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு இருப்பதாக உணர்கிறீர்களா?’ என்ற கேள்விக்கு 38 விழுக்காடு பெற்றோர்கள் ‘ஆம்’ என்றே பதில் கூறியுள்ளனர். இது பெரும் கவலைக்குரியது. எனவே, அரசுப் பள்ளிகள் திறக்க காலதாமதம் ஆகலாம். சத்துணவு வழங்க தாமதம் கூடாது. உடனே அங்கன்வாடி மையங்களில் அந்தந்த குடியிருப்புகளில் சத்துணவு வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

பெற்றோர் இருவரும் வேலை மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு:

கிராமமோ, நகரமோ பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் ஆண் குழந்தைகளைப் போல சாதாரணமாக விட்டுச் செல்ல முடிவதில்லை. சாதாரண பள்ளி விடுமுறை நாட்களிலேயே, பெண் குழந்தைகளின் பெற்றோர்களுக்குப் பிள்ளைகளை விட்டுச் செல்ல பிரத்யேக ஏற்பாடுகள் தேவைப்படும். இந்த ஒன்றரை ஆண்டுக் காலத்தில் அவர்களது கஷ்டம் சொல்வா வேண்டும்?

66 விழுக்காடு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பொறுப்பிலும், உறவினர் வீடுகளில் 25 விழுக்காடு பெற்றோரும் விட்டுச் செல்கின்றனர். இந்த இரண்டு வசதிகளும் இல்லாதவர்கள் தங்கள் குழந்தைகளைப் பணித் தளத்துக்கே அழைத்துச் சென்று விடுகிறார்கள். பெண் குழந்தைகளை தனியாக விட்டுச் செல்ல முடியாது தொடரும் அவலத்தை என்னவென்று சொல்வது?

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்கள்:

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களில், 1.1 விழுக்காட்டினர் கொரோனா பெருந்தொற்றால் இயற்கை எய்தியுள்ளனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களின் பெரும் பகுதி உழைக்கும் மக்கள்தான். இவ்வாறு அவர்கள் பெற்றோரை இழக்கும்போது, பள்ளிக் கல்வியை முடிப்பதே பெரும் சவாலாக முடியலாம்.

தமிழ்நாடு அரசு, கொரோனாவில் மரணமடைந்த குடும்பங்களுக்கு நிதி உதவியை வழங்கி வருகிறது. அதோடு, இவ்வாறு பெற்றோரை இழந்த பள்ளி வயதுக் குழந்தைகளுக்கு, பள்ளிக் கல்வி முடியும் வரை சிறப்புக் கல்வி உதவித்தொகை வழங்கினால் பள்ளிக்கல்வியை தடையின்றி முடிக்க ஏதுவாக இருக்கும்.

நம்பிக்கை அளிக்கும் ஆய்வு முடிவுகள்:

‘பள்ளிகள் மூடிக்கிடப்பதால் வருத்தமா?’ என்று கேட்கும் கேள்விக்கு ‘ஆம்’ என்று 87 விழுக்காடு மாணவர்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள். ‘பள்ளிக்கூடம் திறக்கப்படும்போது பள்ளி செல்ல தயாராக இருக்கிறோம்’ என்று கூறும் மாணவர்கள் 95 விழுக்காடு. ‘அதிக மகிழ்ச்சி தரும் இடமாக உள்ளது வீடா? பள்ளியா?’ என்று கேட்டால், ‘சந்தேகம் என்ன... பள்ளிதான்’ என்று 77 விழுக்காடு மாணவர்கள் பதில் அளித்துள்ளனர். வீட்டில் இருக்கும் 76 விழுக்காடு குழந்தைகள், தங்கள் நேரத்தை விளையாடி கழிக்கின்றனர். இதில், 73 விழுக்காடு குழந்தைகள் குழு விளையாட்டுகளில் அதிக ஆர்வம்காட்டி வருவதும் ஆரோக்கியமான செய்தியே. பெற்றோருக்கு உதவி செய்யும் பிள்ளைகள் 28 விழுக்காடு குழந்தைகள் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர்.

பள்ளிகள் திறக்கப்பட்டால், இழந்த பாடங்கள் அனைத்தையும் ஈடு செய்ய வேண்டுமா?

‘பள்ளிகள் திறந்தவுடன் இழந்த பாடங்கள் அனைத்தையும் சொல்லித் தரப் போகிறோம் என்று புறப்பட்டால் அது ஒரு பேரிடர்’ என்கிறார் கல்வியாளர் விஞ்ஞானி இராமானுஜம். இதைத்தான் குழந்தைகளும் வேறு வழிகளில் சொல்கின்றனர்.

பள்ளிகளில் திறந்ததும் நேரடியாகப் பாடம் போதித்தல் கூடாது. குறைந்த பாடங்களே தொடக்கத்தில் நடத்திட வேண்டும். விளையாட்டு அதிகம் இடம்பெற வேண்டும். சிறிது காலம்‌ பாடத்திட்டம் சாராத பாடங்களை நடத்தலாம். இணைப்பு வகுப்புகள் நடத்தி, பின்னர் பாடங்களைத் தொடங்கலாம். மகிழ்ச்சியான போதனை முறைகளைப் பின்பற்றலாம். இப்படிப் பல ஆரோக்கியமான அம்சங்கள் பட்டியல் இடப்பட்டுள்ளன. இவையும் மிகுந்த நம்பிக்கை ஊட்டும் முடிவுகளே!

ஆசிரியர்கள் மாணவர்கள் சந்திப்பு:

‘இந்த 16 மாதங்களில், நீங்கள் உங்கள் ஆசிரியரைப் பார்க்க முடிந்ததா?‌’ என்று கேட்டபோது, ‘ஆம்’ என்று 65 விழுக்காடு மாணவர்கள் பதில் அளித்து உள்ளனர். அதிலும், ‘ஆசிரியர்கள் சந்தித்து என்ன பேசினார்கள்?’ என்று கேட்டுக் கொண்டபோது, 76 விழுக்காடு ஆசிரியர்கள் பாடம் தொடர்பாக தங்களைச் சந்தித்ததாகக் கூறுகின்றனர்.

பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் எவ்வளவு தூரம் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கு அசீம் பிரேம்ஜி நிறுவனம் ‌சுமார் 16,000 பேரை சந்தித்து ஓர் ஆய்வை மேற்கொண்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தியிருக்கும் இந்த ஆய்வு இந்தியாவில் விரிவாக நடத்தப்பட்ட கள ஆய்வு என்று குறிப்பிடலாம். கொரோனாவின் தாக்குதல் பள்ளிக்கல்வியின் மேல் எவ்வாறு இருக்கிறது என்பதை மட்டுமே இந்த ஆய்வு ஆராய்ச்சி செய்திருக்கிறது. அறிவியல் இயக்கத்தினர் ‌அரசுக்கு முன்வைத்துள்ளனர். இதை அரசு பரிசீலனை செய்து அதற்குத் தகுந்தாற்போல் நடவடிக்கைகளை மேற்கொண்டால், பாதிப்புகளைப் பெருமளவில் தடுத்து நிறுத்த முடியும்.

கட்டுரையாளர்: பேரா. நா.மணி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் தலைவர். இந்த ஆய்வு முடிவுகளைத் தொகுத்து பகுப்பாய்வு செய்தவர்.

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்: முதல்வர் ...

8 நிமிட வாசிப்பு

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்:  முதல்வர்  ஆக்‌ஷன் என்ன?

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

6 நிமிட வாசிப்பு

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

நான் வழக்குப் போட்டேனா? திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

4 நிமிட வாசிப்பு

நான்  வழக்குப் போட்டேனா?  திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

செவ்வாய் 27 ஜூலை 2021