மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 27 ஜூலை 2021

அரசியல் களத்தை நோக்கி சூர்யா: பயணம் அரங்கேறுமா?

அரசியல் களத்தை நோக்கி சூர்யா:  பயணம் அரங்கேறுமா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் படத்துக்கு 'எதற்கும் துணிந்தவன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதே தலைப்பில் 1977-ல் இந்தப் படத்தின் கதாநாயகன் சூர்யாவின் தந்தை சிவகுமார் நடிப்பில் படம் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து 2D என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாராகி வரும் படத்துக்கு 'ஜெய்பீம்' எனப் பெயரிடப்பட்டு அதன் முதல் பார்வை வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் கெளரவத் தோற்றத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், காட்சிகள் அதிகரிக்கப்பட்டு படம் முழுவதும் சூர்யா வருகிற வகையில் படம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகத் தற்போது கூறப்படுகிறது.

அரசியல் நுழைவுக்கு அடித்தளமா?

தமிழக அரசியல் களம் திமுக - அதிமுக - பாஜக என அதகளமாகிக் கொண்டிருக்கும் நிலையில் சூர்யா நடித்து வெளிவர இருக்கும் இரண்டு படங்களின் தலைப்புகளும் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளின் பார்வையும் நடிகர் சூர்யாவை நோக்கித் திரும்ப வைத்துள்ளது.

இது, விஜயகாந்த், கமல்ஹாசனைத் தொடர்ந்து தமிழக அரசியலில் நுழைவதற்கான அடித்தளம் அமைக்கப்படுகிறதா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது

கணக்கு கேட்டதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ராமச்சந்திரனைத் தனது குளோனிங் குழந்தையாகத் தமிழக அரசியலில் வளர்த்துவிட்டது அன்றைய இந்திரா காங்கிரஸ். எம்.ஜி.ஆர் ஆட்சியில்தான் கல்வி, மருத்துவம் இரண்டும் வியாபார பொருளாக்கப்பட்டு அசுர வளர்ச்சி அடைந்து சாமான்ய மக்களுக்குக் கல்வியும், மருத்துவமும் எட்டாக்கனியாகி, பெரும் சுமையாக மாறி அடித்தட்டு மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

கலைஞர் கருணாநிதியின் புகழ்பாடி வந்த திரைக் கலைஞர் விஜயகாந்த் ஆசையாக தன் பெற்றோர் பெயரில் ஆசைப்பட்டுக் கட்டிய திருமண மண்டபம் திமுக ஆட்சியில் மேம்பாலம் - சாலை விரிவாக்கம் காரணமாக ஒரு பகுதியை இடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதை மாற்றியமைக்க முயலாத திமுக மீது கொண்ட கோபத்தில் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கி திமுக - அதிமுக கட்சிகளின் மாற்றாக விஸ்வரூபமெடுத்தார்.

தேர்தல் அரசியலில் தன் வெற்றிக்கு இவரைப் பயன்படுத்திக்கொண்டு ஆட்சி அதிகாரத்தைத் தேர்தல் மூலம் கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்தவுடன் தேமுதிகவை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தி நிலைகுலைய வைத்தது அதிமுக. இதனை திமுக சுயநலம் கருதி வேடிக்கை பார்த்தது. விஜயகாந்த் உடல் நலமின்மை, அக்கட்சி தலைமையின் சுயநலமிக்க பேர அரசியல் தேமுதிகவைத் தமிழக அரசியலிலும், தேர்தல் அரசியலிலும் படுகுழிக்குள் தள்ளிவிட்டது மீளமுடியாமல் தத்தளித்து வருகிறது தேமுதிக.

ஜெயலலிதா - கருணாநிதி இருவரது மரணங்கள் ரஜினிகாந்த்தின் நீண்டநாள் ஆசையான அரசியல் கட்சி தொடங்குவது நேரடியாக முதல்வர் பதவியில் அமரும் ஆசைக்கு எண்ணெய் ஊற்றிப் பற்றவைத்தது பாஜக. ஆனால் அது அற்ப ஆயுளில் அமல்படுத்த முடியாமல் அமரர் ஆகிப்போனது.

தூய்மை அரசியலை, கார்ப்பரேட் நடைமுறையில் தமிழகத்தில் அரங்கேற்ற ஆட்சியைப் பிடிக்க மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கினார் கமல்ஹாசன். தமிழகத்தில் தன் ரசிகர் மன்றம் மூலம் நடைமுறைப்படுத்திய நலத்திட்டப் பணிகளும், தான் முன்வைக்கும் தூய்மை அரசியலும் தன்னை தேர்தல் களத்தில் கரை சேர்க்கும் என்று நம்பிய கமல்ஹாசனுக்குத் தமிழக மக்கள் ஆதரவை வழங்கவில்லை. கமல்ஹாசனால் சட்டமன்றத் தேர்தலில் கரைசேர முடியவில்லை என்கிறபோது நாமெல்லாம் எம்மாத்திரம் என அவரது கட்சி கூடாரம் கார்ப்பரேட் நடைமுறைகளைக் குறைசொல்லி நெல்லிக்காய் மூட்டையாகச் சிதறி சின்னாபின்னமாகி வருகிறது.

திமுக - அதிமுக என்கிற பங்காளிகளின் பாசறைக்குள் அரசியல் கட்சி தொடங்கி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது கனவில்கூட கைகூடாது என்கிற நிலையில் நடிகர் சூர்யாவின் கடந்தகால செயல்பாடுகளும், அவரது திரைப்படத் தலைப்புகளும் தொலைநோக்கு அரசியல் கணக்குகளுடன் திட்டமிடப்படுகிறதா என்கிற கேள்விகளை எழுப்புவதைத் தவிர்க்க முடியவில்லை.

சூர்யா பேசிய முதல் பொது பிரச்சினை

சிவகுமார் திரையுலகில் இருந்தவரை அவரை பற்றி மற்ற திரைக் கலைஞர்களைப் போன்று கிசுகிசு செய்திகளோ, அரசியல் சார்ந்த சர்ச்சைகளில் அவரது பெயர் வெளியானது இல்லை. அவரது குடும்ப வாரிசாகத் திரையுலகில் பிரவேசம் செய்த சூர்யா வியாபார முக்கியத்துவம் மிக்க கதாநாயகனாகத் தமிழ் சினிமாவில் அவரது இடம் உறுதிசெய்யப்படும் வரை பத்திரிகையாளர்களிடம் பேசுவதற்குக் கூட கூச்சப்படும் நடிகராகவே இருந்தார். 1997ஆம் ஆண்டு நேருக்கு நேர் படத்தில் அறிமுகமான சூர்யா, இயக்குநர்கள் எழுதிக் கொடுக்கும் வசனத்தைப் பேசும் நடிகராகவே இருந்தார்.

2011ஆம் ஆண்டு வெளியான 7-ம் அறிவு ஒரு வரலாற்றுப்புனைவு திரைப்படமாக இருந்தபோதும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் ஆதரவைப் பெறும் நோக்கத்துடன் வணிக நலனுக்காக இலங்கைத் தமிழர்கள் பற்றிய வசனம் வலிந்து திணிக்கப்பட்டிருக்கும். இது தான் சூர்யா தன் திரைப்பயணத்தில் சினிமாவில் பேசிய பொதுப் பிரச்சினை பற்றிய வசனம்.

7-ம் அறிவு, இன்றைய திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் வெளியானதால் எந்தவித சிக்கலும் இன்றி வெளியாகி வெற்றிபெற்றது. அதன்பின் கடந்த பத்தாண்டுகளில் சூர்யா கதாநாயகனாக நடித்த மாற்றான் (2011), சிங்கம் (2013), அஞ்சான் (2014), மாசு என்கிற மாசிலாமணி (2015), 24AM, சிங்கம்-3 (2017), தானா சேர்ந்த கூட்டம் (2018), NGK, காப்பான் (2019), சூரரைப் போற்று (2020) இவற்றில் எந்த படமும் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை.

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்றிருந்த சொடுக்கு மேல சொடுக்கு போடுது என்ற பாடலில் இடம்பிடித்திருந்த, "வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது அதிகாரத் திமிர, பணக்காரப் பவர" என இடம் பிடித்த இந்த வரிகளுக்கு அரசியல்வாதிகள் சிலரை சூர்யா ஓட ஓட விரட்டியது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர், நீதிமன்றத்தை நாடும் அளவிற்கு இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்தினார்கள்.

நீட் முதல் வேளாண் சட்டங்கள் வரை

2019ஆம் ஆண்டு நடைபெற்ற அகரம் உதவி வழங்கும் விழாவில் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்திய கல்விக் கொள்கைக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்த சூர்யா நீட் தேர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர். மேலும் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தமே நமக்கு எதிரி என சூர்யா பேசிய வார்த்தைகள் தேசிய அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக சூர்யா பேசிய கருத்துகளை ரஜினிகாந்த் பேசி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என காப்பான் இசை வெளியீட்டு விழாவில் கவிஞர் கபிலன் பேச, இதைத் தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த் சூர்யாவின் குரலே பிரதமருக்குக் கேட்டு விட்டதாக சூர்யாவைப் பாராட்டினார்.

ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி திரைப்படத்திற்காக விருதினைப் பெற்றுக் கொண்ட நடிகை ஜோதிகா, தனியார் தொலைக்காட்சியில் கோயில்களைக் காட்டிலும் மருத்துவமனைகள் பராமரிப்பின்றி இருப்பதாகவும் கோயில்களைப் போல மருத்துவமனைகளையும் பராமரிக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்து இருந்தார். நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக சூர்யா பேசியதை மனதில் வைத்திருந்த பாஜக இதற்கு எதிராக இந்துமத அமைப்புகளைத் தூண்டிவிட்டனர்.

இந்து அமைப்புகள் கோயிலையும் மருத்துவமனையையும் ஒப்பிட்டதை கடுமையாகக் கண்டித்தனர். மேலும் ஜோதிகா கோயிலுக்குச் செலவு செய்வது போல மருத்துவமனைக்கும் செலவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியதை கோயிலுக்குச் செலவு செய்யும் தொகையை மருத்துவமனைகளுக்குச் செலவு செய்ய வேண்டும் என தவறாகப் புரிந்துகொண்டு சூர்யா ஜோதிகாவுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பினர்.

இந்த விவகாரத்திற்குப் பதிலளித்து அறிக்கை வெளியிட்ட சூர்யா தங்களது கருத்தில் எந்த குற்றமும் இல்லை என உறுதியாகத் தெரிவித்ததோடு மன்னிப்பு கேட்கப் போவதில்லை எனவும் அறிவித்தார்.

2020ஆம் ஆண்டு நீட் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக தனது எதிர்ப்பை வலுவாகப் பதிவு செய்தார் சூர்யா. ஏகலைவனின் கட்டைவிரல், நீட் என்பது மனு நீதி தேர்வு போன்ற கடுமையான வார்த்தைகளால் நீட் தேர்வை சூர்யா அறிக்கையில் விமர்சிக்க அது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சூர்யாவிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்த பாஜகவில் உள்ள நடிகர்கள் சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் என வெளிப்படையாக கருத்து தெரிவித்தனர்.

நீட் உள்ளிட்ட விவகாரங்களில் ஒன்றிய அரசுக்கு எதிரான சூர்யாவின் குரல் புதிய கல்விக் கொள்கை, வேளாண் திருத்தச்சட்டம், திரைப்படம் வெளியான பின்னரும் ஒன்றிய அரசு திரைப்படத்தை சென்சார் செய்ய அனுமதிக்கும் ஒளிப்பதிவு சீர்திருத்தச் சட்டம் என தொடர்ந்தது. இதன் காரணமாக சமூக வலைதளங்களில் ஆளும் பாஜக அரசின் ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக சிவகுமார் குடும்பத்திற்கு எதிராக நாலாந்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டனர்.

தலைக்கு மேல் தொங்கும் கத்தி

இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு பத்தாண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சி அதிகாரத்திற்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினை அப்பாவுடன் சென்று சந்தித்த சூர்யா, கார்த்தி ஆகியோர் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் வழங்கினர். தமிழ் சினிமாவில் அதிகபட்சமாக நிதி வழங்கி இருப்பது சூர்யா சிவகுமார் குடும்பம் தான்.

மாநிலத்தில் திமுக ஆட்சியில் இருந்தாலும் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக பாஜகவின் ஒன்றிய அரசு சூர்யாவிற்கு அச்சுறுத்தலான ஒன்றுதான்.

ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கினால் அவருக்கு ஆதரவாக நடிகர் விஜய் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து சம்மதிக்க வைப்பதற்காகவே மாஸ்டர் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றபோது விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதாக அப்போது கூறப்பட்டது.

தனது படம் வெளியீட்டில் அரசியல் ரீதியாக நெருக்கடி ஏற்பட்டால் மாநிலத்தில் ஆளும்கட்சியின் முதல்வரை நேரடியாகச் சென்று சந்தித்து காரியம் சாதிப்பது விஜய்க்கு கைவந்த கலை. தலைவா படத்தின் போது ஜெயலலிதாவைச் சந்தித்து முறையிட கொடநாடு சென்றார். மாஸ்டர் படத்திற்காக எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்தார். பாஜகவின் நெருக்கடியில் இருந்து அரசியல் சார்பு இல்லாமல் தப்பிக்க அவர் சன் தொலைக்காட்சியின் உதவியை தொழில்ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டார்.

அரசியல் கட்சியைக் காட்டிலும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் ஊடகங்களுடன் தொழில் ரீதியாக இணைகிறபோது தொழில் பாதுகாக்கப்பட எடுக்கிற முயற்சியில் தானும் பாதுகாக்கப்படுவோம் என்கிற தொலைநோக்கு பார்வையுடன் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்திற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட செய்தார்.

தங்கள் நிறுவனம் தயாரிக்கும் பட அறிவிப்பு நிகழ்வுகளில் சன் தொலைக்காட்சியின் உரிமையாளர் கலாநிதி மாறன், விஜய் நடிக்கும் படத்தின் அறிவிப்பை வெளியிட வந்த அவரை வரவேற்று அழைத்து வந்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டதை அகில இந்திய ஊடகங்களில் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டதுடன், விவாதத்துக்குரியதாகவும் ஆனது.

சன் தொலைக்காட்சி வாங்கும் எதற்கும் துணிந்தவன்

அரசியல் சார்ந்த வசனங்கள் இடம்பெறும் படங்களை வாங்குவது, அதனை விளம்பரப்படுத்துவதில் சன் தொலைக்காட்சி தயங்குவது இல்லை. அதனை சந்தைப்படுத்தினால் என்ன வருமானம் கிடைக்கும் என்பதை கணக்கு போடும் வியாபாரியாகவே சன் தொலைக்காட்சி இன்று வரை செயல்பட்டு வருகிறது. அவர்கள் தயாரிப்பில் சூர்யா நாயகனாக நடிக்கும் படத்திற்குத்தான் "எதற்கும் துணிந்தவன்" என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் படம் சூர்யா நடிக்கும் 40ஆவது திரைப்படமாகும் கதாநாயகியாக பிரியங்கா அருள்மோகன் மற்றும் சத்யராஜ், சூரி நடித்திருக்கிறார்கள்.

குடும்பப் படங்களை இயக்கி வந்த பாண்டிராஜ் முதன்முறையாக அரசியல் கலந்த க்ரைம் த்ரில்லர் படமாக இயக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தின் கதைக்காக எதற்கும் துணிந்தவன் என பெயர் வைக்கப்பட்டாலும் ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிராக சூர்யா வெளிப்படுத்தி வரும் விமர்சனங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் இந்தத் தலைப்பு இருப்பதாக சூர்யா ரசிகர்கள் வட்டாரத்திலும் அரசியல்வாதிகள் மத்தியில் பேசப்பட்டு வந்த நிலையில் சூர்யா பிறந்தநாள் அன்று அவரது சொந்த தயாரிப்பில் வெளிவர உள்ள 39ஆவது படத்தின் தலைப்பு சினிமா வட்டாரத்தை மட்டுமல்ல அரசியல் அரங்கையும் அதிர வைத்தது பாபாசாகேப் அம்பேத்கரின் புகழ்பெற்ற வாசகமான ‘ஜெய்பீம்’ என்று பெயர் அறிவிக்கப்பட்டது தான்.

இதில் முதலில் சூர்யா கெளரவ வேடத்தில் சில காட்சிகளில் மட்டும் நடிப்பதாகத்தான் முதலில் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தின் அரசியல் கள நிலவரத்திற்கு ஏற்ப வழக்கறிஞராக நடிக்கும் சூர்யாவின் கதாபாத்திரம் கூடுதலாக்கப்பட்டுள்ளது. முன்னணி கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்திருக்கிறார். படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய த.செ.ஞானவேல் இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கியுள்ளார். இருளர் மற்றும் பழங்குடி மக்களின் வாழ்க்கைச் சூழலையும், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

இருந்தபோதிலும் இந்தப் படம் பற்றிய எந்த செய்திக்குறிப்பும் அதிகாரபூர்வமாக ஊடகங்களுக்கு வழங்கப்படவில்லை . இந்தப் படம் பற்றிய முழு விவரங்கள் தெரிய வரும்போது செய்திக்குறிப்பு வழங்காததற்கான காரணம் தெரியும் என்று கூறி வந்தனர். தயாரிப்பு வட்டாரத்தில் அதற்கான காரணம் படத்தின் தலைப்பே உணர்த்திவிட்டது.

இதற்குத்தான் ‘எதற்கும் துணிந்தவன்’ பெயர் சூட்டியிருக்கிறார்களோ?

இந்தியா முழுவதிலும் இருக்கும் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைக்க முழங்கப்பட்ட உணர்வுபூர்வமான முழக்கம்தான் 'ஜெய்பீம்'. இந்தப் படத்தை இயக்கியிருக்கும் ஞானவேல் ஆனந்த விகடன், குங்குமம் வார இதழ்களில் பணியாற்றியவர். சூர்யா நடத்தி வரும் அகரம் அறக்கட்டளை பொறுப்பாளாராக இருந்து ஒருங்கிணைத்தவர். சூர்யாவின் நம்பிக்கைக்குரிய நட்பு வட்டத்தில் இருப்பவர். நடிகர் சிவகுமார் குடும்பத்தின் மீது பாஜக, இந்து அமைப்புகள் கடும்கோபத்தில் இருக்கின்றனர். இந்த நேரத்தில் பாஜகவுக்குப் பிடிக்காத வார்த்தையான 'ஜெய்பீம்' என்பதையே தலைப்பாக வைத்து ஒரு படத்தை வெளியிட தயாராகி வருவது நடிகர் சூர்யாவின் தன்னம்பிக்கையும், அரசியல் ரீதியாக தன் கருத்தில் உறுதியாக எதிர்த்துப் போராடுவதற்கான களத்தை அமைக்க அவர் தயாராகிவிட்டதையும் காட்டுகிறது.

அது சூர்யாவுக்குள் இருக்கும் அரசியல் ஆசையும், ஆதங்கமும், விருப்பமும் இதன் மூலம் வெளிப்பட்டு இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. இந்த ஆசை முழுமையாக நிறைவேற சூர்யாவின் தொடர்ச்சியான செயல்பாடுகள், திரைப்படங்களின் தேர்வு முக்கியம் என்பதை கருத்தியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சூர்யாவை இயக்குபவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. அதனால்தான் 'ஜெய்பீம்' தலைப்பால் ஏற்படும் சச்சரவுகளை எதிர்கொள்ள எதற்கும் துணிந்தவன் எனப் பெயர் சூட்டியிருக்கிறார்களோ?

-இராமானுஜம்

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

செவ்வாய் 27 ஜூலை 2021