மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஜூலை 2021

மீண்டும் லாட்டரியா?: பழனிவேல் தியாகராஜன் பதில்!

மீண்டும் லாட்டரியா?: பழனிவேல் தியாகராஜன் பதில்!

லாட்டரி பற்றிய சிந்தனையே அரசுக்கு இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்

சினிமாவில் நடப்பது போன்று உடனடியாக கோடீசுவரர்கள் ஆகலாம் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி ஏழை, எளிய மக்கள் லாட்டரி சீட்டுகளை வாங்கி ஏமாந்தது அதிகம். லாட்டரியால் பணம் இழந்தவர்கள் தற்கொலை செய்துகொண்ட அவலமும் தமிழகத்தில் நடைபெற்றது. எனவே, கடந்த 2003ஆம் ஆண்டு தமிழகத்தில் லாட்டரி சீட்டு முறை ஒழிக்கப்பட்டது.

இந்நிலையில் திமுக ஆட்சியில் மீண்டும் லாட்டரி சீட்டு முறை கொண்டு வரப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், ஆட்சிக்கு வருவதற்கு முன், அரசுக்கு வருவாயைப் பெருக்கும் வழி எங்களுக்குத் தெரியும் என்று கொக்கரித்த இவர்கள், லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வந்து நாட்டை சுடுகாடாக்க முடிவு செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. தனியார் லாட்டரி ஏஜெண்ட்டுகள் கொள்ளை அடிக்கவும், அதன்மூலம் ஆட்சியாளர்கள் பெருத்த ஆதாயம் பெறுவதற்குமான, இந்த லாட்டரி சீட்டு திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்,

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “ தமிழ்நாட்டின் நிதி நிலைமை அதல பாதாளத்திற்குச் சென்றதற்குத் தலைமை தாங்கிய இன்றைய எதிர்க்கட்சி தலைவர் தற்போது விரக்தியின் விளிம்பில் நின்று கற்பனைகளைக் கட்டவிழ்த்து விடுகிறார். அவரது நான்காண்டுக் கால ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையால், தமிழ்நாட்டின் நிதிநிலைமை எத்தகையைச் சரிவினை - சிதைவினைச் சந்தித்துள்ளது என்பதை 15ஆவது நிதிக்குழுவும், ரிசர்வ் வங்கியும் ஏற்கனவே ஆதாரப்பூர்வமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது.

2015 சென்னை வெள்ளம் குறித்த சி.ஏ.ஜி அறிக்கை, 2017-18 மற்றும் 2018-19 மாநில நிதி குறித்த சி.ஏ.ஜி.யின் தணிக்கை அறிக்கை ஆகியவற்றை உரியக் காலத்தில் சட்டமன்றத்திற்குக் கூட காட்டாமல் மூடி மறைத்து வைத்திருந்தவர் இதே எதிர்க்கட்சி தலைவர்தான் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

திமுக ஆட்சி அமைந்தவுடன் இந்தத் தணிக்கை அறிக்கைகள் மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டு, சென்ற அதிமுக ஆட்சியின் நிர்வாகத் தோல்விகள் பொது வெளிக்கு வந்துள்ளது. நிதி மேலாண்மையில் அதிமுக கண்ட தோல்வி “மாநில நிதி நிலை” குறித்து இனி வரப்போகும் வெள்ளை அறிக்கையில் மேலும் வெளிப்படப் போகிறது. நிதித்துறையின் கோப்புகள் பலவற்றை எப்படி இதயமற்ற வகையில் கையெழுத்துப் போடாமல் மூட்டை கட்டி வைத்துவிட்டுச் சென்றார்கள் என்பதை நான் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் நேரில் கண்டேன்.

உயிர் நீத்த காவல்துறையினருக்குக் கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அறிவிக்கப்பட்ட முதலமைச்சர் தலைமையிலான பேரிடர் ஆணைய நிதி வழங்கும் கோப்புகளைக் கூட மே 2021 வரை கையெழுத்திடாமல் விட்டுச் சென்றவர்கள் அதிமுக ஆட்சியாளர்கள். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகுதான் அந்தக் கோப்புகள் கூட கையெழுத்திடப்பட்டு – உயிர் நீத்தோரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

கொரோனா இரண்டாவது அலையைத் திறமையாகக் கையாண்டு, தினந்தோறும் கடின உழைப்பால் சிறப்பான நிர்வாகத்தை அளித்து வருவதற்காக இன்று அனைவராலும் பாராட்டப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் மீது, “லாட்டரி பற்றி ஒரு கற்பனையைத் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்டு” எடப்பாடி பழனிசாமி இப்படி களங்கம் கற்பிப்பது கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு அரசு ஆலோசனைகளிலோ, ஆய்வுக் கூட்டங்களிலோ ஒருமுறை கூட லாட்டரி பற்றிய பேச்சே இதுவரை எழவில்லை என்பதை எதிர்க்கட்சி தலைவருக்கு ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். நிதிப் பேரழிவில் மாநிலத்தை அ.தி.மு.க. விட்டுச் சென்றிருந்தாலும் - அதைச் சரிசெய்ய நாங்கள் சிந்திக்கும் சூழலில் கூட- லாட்டரி எங்கள் சிந்தனை வட்டத்திற்குள்ளேயே இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமி புரிந்துகொள்ள வேண்டும். எதிர்க்கட்சி தலைவருக்கு என்று ஒரு கண்ணியம் இருக்கிறது. அதை அவர் நினைவில் கொள்ளவேண்டும். எங்கள் முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது அந்தப் பொறுப்புக்குரிய மரியாதையை எப்படிக் காப்பாற்றினார் என்பதை எடப்பாடி பழனிசாமி சற்று நினைத்துப் பார்க்கவேண்டும்.

எனவே, மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் - மாநில நிதி நிலைமையைச் சீர்படுத்தவும் முதலமைச்சர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சி தலைவரிடம் ஏதாவது ஆக்கப்பூர்வமான கருத்துகள் இருந்தால் வழங்கலாம். அதைவிடுத்து முற்றிலும் கற்பனையான கதைகளை அறிக்கையாக வெளியிட்டு - திமுக அரசு மக்களுக்குச் செய்து கொண்டிருக்கும் நற்பணிகளைத் திசை திருப்பும் வேலையில் ஒரு எதிர்க்கட்சி தலைவர் ஈடுபடுவது அவர் வகிக்கும் பொறுப்பிற்கு அழகல்ல” என்று மறுத்துள்ளார்.

-பிரியா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

திங்கள் 26 ஜூலை 2021