மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஜூலை 2021

சுயசார்பான சமத்துவ நகரங்கள் சமைப்போம்! - பகுதி 1

சுயசார்பான சமத்துவ நகரங்கள் சமைப்போம்!  - பகுதி 1

பாஸ்கர் செல்வராஜ்

பள்ளிக் கல்வித்துறை கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் அனைத்து பள்ளிகளிலும் குடிநீர், கழிப்பறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனப் பேசியிருந்தார். தொண்ணூறுகளில் கிராம அரசுப் பள்ளியில் படித்தபோது பள்ளிக்கு அருகில் அரசு அமைத்துக் கொடுத்திருந்த கைக்குழாயில் நண்பர்களில் ஒருவர் தண்ணீர் அடிக்க, குழாயில் ஒவ்வொருவராக வாய்வைத்துக் குடிப்பது வழக்கம். பள்ளிக்கு அருகிலேயே சற்று தள்ளிச்சென்று கழிவுகளை வெளியேற்றுவதும் நடக்கும்.

சுகாதார வசதிகளற்ற பள்ளிகள்!

தற்போது வாழும் நாட்டின் அடிக்குமாடி கட்டடப் பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் ஒவ்வொரு மூலையிலும் கழிவறைகளும், குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்களும் நிறுவப்பட்டு குளிர்நீர், மிதமானநீர், சுடுநீர் பெறும் வகையில் இருக்கின்றன. அதைச் சுத்தம்செய்ய, பராமரிக்க ஆட்கள் நியமிக்கப்பட்டு, குறிக்கப்பட்ட நேரத்தில் அவர்கள் வந்து சுத்தம்செய்து பராமரித்துவிட்டுப் போகிறார்கள். ஊரில் தற்போதைய சூழல் எப்படி இருக்கிறது எனப் பள்ளி மேலாண்மைத்துறையில் வேலைசெய்யும் ஆசிரிய நண்பரிடம் வினவினால், நிலைமை பெரிதாக மேம்படவில்லை என்றே கூறுகிறார். பள்ளிகளில் அரசின் மூலமாகவும் மற்றவர்களின் மூலமாகவும் நிறுவப்படும் குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்கள் ஓரிரு ஆண்டுகளில் பராமரிக்க போதுமான நிதியின்றியும் இதன் அவசியம் உணராத ஆசிரியர்களின் அக்கறையின்றியும் அவை பயனற்றுப் போய்விடுவதாகவும், பள்ளிகளில் நிறுவப்படும் கழிப்பறைகளை விடுமுறைக் காலங்களில் அந்தந்த ஊரைச் சேர்ந்தவர்களே உடைத்து நொறுக்கிவிடும் அவலத்தையும் சொன்னார்.

பாதிப்புகள்!

பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதாரமான கழிப்பிட வசதியின்மை காரணமாக வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு, கல்லீரல் அழற்சி (Hepatitis), போலியோ, அஸ்காரியாசிஸ் போன்ற நோய்கள் ஏற்பட காரணமாக இருப்பதாக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதோடு இந்த சுகாதாரமற்ற சூழலினால் ஏற்படும் நிமோனியா, குடற்புழு தொற்று (Worm Infestations) போன்றவை குழந்தைகளின் உடல் (Stunting) மற்றும் மூளை வளர்ச்சியை பாதித்து, குறைவளர்ச்சி கொண்ட குழந்தைகளை உருவாக்குகின்றன. இந்தியாவில் இதனால் ஏற்படும் பொருளாதார இழப்பு நாட்டின் ஜிடிபியில் 6.4 விழுக்காடு (2006) எனக்கூறும் மற்றுமோர் ஆய்வு, இந்த சுகாதாரம் சார்ந்த இழப்பின் பெரும்பகுதி வயிற்றுப்போக்கு (70 விழுக்காடு) மற்றும் சுவாசக்குழாய் நோய்களால் (12 விழுக்காடு ) மட்டுமே ஏற்படுவதாகவும் கூறுகிறது. மக்களுக்குக் கழிவுகளை வெளியேற்றும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, வீடுகளைச் சுற்றி மனிதக்கழிவுகள் இல்லாத சூழலை உருவாக்கினாலே 72 விழுக்காடு அளவு வயிற்றுப்போக்கு பிரச்சினையைக் குறைத்து விடலாம் என்கிறது.

மோசமடையும் சென்னை!

கிட்டத்தட்ட ஐம்பது விழுக்காட்டுக்கும் மேலாக நகரமயமாகி இருக்கும் தமிழ்நாட்டின் சிறு, பெருநகரங்களின் நிலையும் சுகாதாரத்தில் அவ்வளவு மேம்பட்ட நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக, கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வேலைதேடிச் சென்று குடியேறும் மக்களின் பெரும்பகுதி சுகாதாரமற்ற பகுதிகளிலேயே வாழ்கிறார்கள். அவர்களின் வருவாய் அவ்வாறான பகுதிகளில் தங்கி வாழும் அளவுக்கே இருக்கிறது. 2004-05 முதல் 2011-12 வரையிலான காலத்தில் பெருநகரங்களில் மும்பையைத் தவிர, மற்றவை சுகாதாரத்தில் மோசமடைந்திருப்பதாகச் சொல்லும் ஆய்வு, இந்தக் காலத்தில் சென்னையின் மோசமான சுகாதாரச் சூழல் (WASH) 27.8 விழுக்காட்டில் இருந்து 40.2 விழுக்காடு அளவு மோசமடைந்திருப்பதாகக் கூறுவது கவலை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

விழிப்புணர்வற்ற மக்கள்!

இந்த நிலை கிராமம், நகர குடிசைப்பகுதி என்று இல்லாமல் ரயில், பேருந்து நிலையம் போன்ற பொதுவெளிகளில் இருக்கும் கழிப்பிடங்களும் போதுமான பராமரிப்பின்றி மோசமான நிலையிலேயே இருக்கின்றன. பொதுவாக தமது வீடு சுத்தமாக இருப்பதை எல்லோரும் உறுதிசெய்து கொள்கிறார்களே தவிர, வீட்டுக்கு வெளியில் அதுகுறித்து கவலைப்படுவதில்லை. இந்த சுத்தமும் அறிவியல்வயப்பட்ட சுத்தம் என்று சொல்லிவிட முடியாது. அதோடு சுற்றுப்புறம் சுகாதாரமற்று இருப்பது யாரையும் பெரிதும் பாதிப்பதில்லை. என்னதான் வீட்டுக்குள் சுத்தமாக இருந்தாலும் சுற்றுப்புறம் தூய்மையற்று இருந்தால் தன்னையும் தனது குழந்தைகளையும் நோய்க்கிருமிகளில் இருந்து பாதுகாக்க இயலாது என நாம் உணர்வதில்லை. எனவே இந்த சுகாதார பிரச்சினையை...

1. அடிப்படை சுகாதார கட்டமைப்புகள் இல்லாமல் இருப்பது,

2. சுகாதாரம் குறித்து மக்களிடம் இன்னமும் போதுமான அளவு விழிப்புணர்வின்றி இருப்பது ஆகிய இரு வழிகளில் அணுகவேண்டி இருக்கிறது.

பொது சுகாதாரத்தில் அரசும், சட்டமன்ற உறுப்பினர்களும்!

இந்தச் சூழ்நிலையில் முதல்வர் இதுகுறித்து பேசி இருப்பது பள்ளிகளில் அடிப்படை சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பொது சுகாதாரத்தைப் பொறுத்தவரை சட்டமன்ற உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின், பழனிவேல் தியாகராஜன், ஆளூர் ஷாநவாஸ் போன்றோர் தமது தொகுதிகளில் பொது இடங்களில் மண்டிக்கிடக்கும் குப்பைகளை அகற்றுதல், கழிவுநீர் வாய்க்கால்களைச் சுத்தம்செய்யும் இயந்திரங்களை அறிமுகப்படுத்துதல், கொசுக்களின் பெருக்கத்தைக் குறைக்க ஆளில்லா சிறுவிமானங்களைக் கொண்டு கழிவுநீர் வாய்க்கால்களில் மருந்து தெளித்தல் போன்ற சுகாதாரப் பணிகளை நேரடியாகச் சென்று தொடங்கிவைத்து கண்காணிப்பதைப் பார்க்க முடிகிறது.

குறிப்பாக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பொதுக்கழிவறைகளின் உள்ளே சென்று ஆய்வு செய்து அவற்றை மேம்படுத்தும் பணிகளை நேரில் மேற்பார்வையிடுவது சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை அவர் அறிந்திருப்பதைக் காட்டுகிறது. முகநூலில் இவர்கள் பதிவிடும் இந்தப் படங்களைக் காணும்போதெல்லாம் மகிழ்ச்சியுடன் அந்தப் படங்களுக்கு விருப்பக்குறியிட தவறுவதில்லை. இவர்களைப்போல எல்லா கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், அரசின் உயரதிகாரத்தில் உள்ளவர்களும் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தமது தொகுதிகளிலும், செல்லும் பொது இடங்களிலும் அவ்வப்போது ஆய்வுசெய்து அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து இதை ஒரு சமூக இயக்கமாகவே முன்னெடுக்கலாம். அந்த அளவுக்கு நமது மக்களுக்கும், ஆரோக்கியமான துடிப்பான எதிர்கால தலைமுறையை உருவாக்குவதற்கும் இது முக்கியமானது. அரசின் சுகாதார கட்டமைப்பு வசதிகளும் அரசை வழிநடத்தும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் என அனைவரும் இணைந்து செய்யும் விழிப்புணர்வு பிரச்சாரமும் சமூகத்தில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றத்தை ஏற்படுத்தும். இது மட்டும் இந்தப் சுகாதார பிரச்சினையை தீர்த்துவிடுமா என்றால் நிச்சயம் தீர்க்காது என்பதுதான் உண்மை.

இருவேறு சூழலில் மாணவர்கள்!

பள்ளிகளில் சுத்தமான குடிநீர், கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி சுற்றுப்புற சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களிடம் எடுத்துச்சொல்லி அவர்களைப் பழக்கப்படுத்தினாலும் அவர்களின் வீடுகள் அந்த வசதிகளுடன் இருப்பதில்லை. 2010 முதல் செயல்படுத்தப்பட்டு வரும் ஊரக வீட்டுவசதித் திட்டம் மற்றும் மக்களின் மேம்பட்ட வருமானத்தின் காரணமாக கிராமங்களில் பெருமளவு கூரை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றம் கண்டிருப்பதில் திறந்தவெளி மலம் கழிக்கும் பழக்கம் ஓரளவு குறைந்திருக்கிறது. ஆனால், இந்த வீடுகளில் வாழும் மூன்று தலைமுறை மனிதர்களில் முதல் இரண்டு தலைமுறை திறந்தவெளியில் மலம் கழித்து பழகியவர்களாக இருப்பதால் அவர்கள் இன்றும் அந்தப் பழக்கத்தை தொடர்வதைக் காணமுடிகிறது.

அதேபோல இன்னும் பல வீடுகளும் குடிநீர் சுத்திகரிப்பு அல்லது வடிகட்டும் சாதனங்கள், மூடிய தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை, நீரை சேமித்து வைக்கும் தொட்டி, கழிவுகள் நிரம்பும் தொட்டி (Septic Tank), இவற்றுக்கான இடம் போன்றவை இன்றியே இருக்கின்றன. இவற்றோடு வறட்சிக் காலங்களில் ஏற்படும் தண்ணீர் பஞ்சம், இந்த வசதிகள் இருந்தாலும் பயன்படுத்த முடியாத சூழலை ஏற்படுத்துகிறது. குடும்பங்களில் அதிகம் படிக்காத முதல் தலைமுறையைவிட ஓரளவு படித்த இரண்டாம் தலைமுறையிடம் விழிப்புணர்வு இருந்தாலும் அதற்கான அடிப்படை கட்டமைப்புகள் இல்லாத நிலையில் இந்த திறந்தவெளியில் கழிவுகளை வெளியேற்றும் பழக்கம் தொடர்கிறது. இப்படி பள்ளியிலும் வீட்டிலும் இருவேறு சூழலை எதிர்கொள்ளும் குழந்தைகள் இறுதியில் தனது சுகாதாரம் சார்ந்த பிரஞ்ஞையை இழப்பது தவிர்க்க இயலாதது.

வேறென்ன காரணங்கள்?

ஆகவே இந்த சுகாதார பிரச்சினையை மேலும்...

1. பொருட்களை வாங்க வசதியற்ற நிலை

2. இடப்பற்றாக்குறை

3. தண்ணீர் பற்றாக்குறை என மூன்று வகைகளில் அணுகவேண்டி இருக்கிறது.

வரலாற்றில் தண்ணீர் பிரச்சினையை எதிர்கொண்டு வெற்றிகொண்ட நமது சமூகம், அந்த பாரம்பரிய அறிவியலை தற்கால சூழலுக்கு ஏற்ப வளர்த்தெடுப்பதைத் தவிர மாற்று வழிகள் இருப்பதாகத் தெரியவில்லை. கடல்நீரை நன்னீராக்கும் மாற்றுகளைவிட நமது நீர்நிலைகளை மேம்படுத்தி அவற்றுக்குச் செல்லும் நீர்வழிப்பாதைகளை நவீன முறையில் வடிவமைப்பதன் மூலம் நீடித்த பலன்களைப் பெற முடியும் என்று தோன்றுகிறது. அதோடு பழைய மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அதன் குறைகளைக் களைந்து அரசு தீவிரமாக முன்னெடுக்க ஆவன செய்யலாம். இவற்றோடு நீரைச் சேமிக்கவும், சிக்கனமாக செலவு செய்யவும் அரசும் மக்களும் இணைந்து செயலாற்ற வேண்டியிருக்கிறது. சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வோடு, நீர் மேலாண்மை சார்ந்த விழிப்புணர்வையும் மக்களிடமும், விவசாயிகளிடமும் ஏற்படுத்த வேண்டி இருக்கிறது.

தொடர்ச்சி மதியம் 1 மணி பதிப்பில்...

பாஸ்கர் செல்வராஜ்

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

தொடர்புக்கு [email protected]

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

திங்கள் 26 ஜூலை 2021