மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஜூலை 2021

மாநில வளர்ச்சி திட்டங்கள்: முதல்வர் அறிவுறுத்தல்!

மாநில வளர்ச்சி திட்டங்கள்: முதல்வர் அறிவுறுத்தல்!

மாநில வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை முறையாக வகுத்துக் கண்காணிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இத்துறையில் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு, மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.

திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் முக்கிய திட்டங்களான, சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையால் மேற்கொள்ளப்படும் வேளாண், பொருளாதாரக் கணக்கெடுப்புகள் குறித்தும், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில், பயிர் அறுவடைகளின் சராசரிக் கணக்கெடுப்பு பற்றிய புள்ளிவிவரங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, “மாநிலத்தில் உள்ள அனைத்து ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும், விவசாயிகளுக்கு நலன் அளிக்கும் வகையிலும், தொழில் வளர்ச்சி சிறக்கவும், முறையான திட்டங்களை வகுத்து, அவற்றின் செயல்பாட்டினைக் கண்காணிக்க வேண்டும்” என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.

மேலும் அவர், “அரசின் நிதி ஒதுக்கீடுகள் அதிகபட்ச மக்களுக்குச் சென்றடையும் வகையில் திட்டங்களைத் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்த வேண்டும். திட்டங்களை வகுக்கையில் பல்வேறு துறை வல்லுநர்களையும், செயற்பாட்டாளர்களையும் கலந்தாலோசித்து அவர்கள் கருத்துகளைப் பெற்றுத் திட்டங்களை இறுதி செய்வது, சிறப்பான பயன்களை அளிக்கும்” என்றும் முதல்வர் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.

“மாநிலத்துக்கான பிரத்தியேகமாக நிகழ்தரவு (Real Time Data) ஒன்றினை நிறுவுமாறும், மாநிலத்தின் முன்னேற்றத்துக்கான தொலைநோக்குத் திட்டங்கள் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை வரையறுக்கப்பட்டு ஒவ்வொரு ஐந்தாண்டுகளில் ஆண்டுதோறும் ஏற்படும் நிகழ் மாற்றங்களுக்கேற்ப வடிவமைக்கப்பட வேண்டும்” எனவும் அறிவுறுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த கூட்டத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

-பிரியா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

திங்கள் 26 ஜூலை 2021