மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஜூலை 2021

சுயசார்பான சமத்துவ நகரங்கள் சமைப்போம்! - பகுதி 3

சுயசார்பான சமத்துவ நகரங்கள் சமைப்போம்!  - பகுதி 3

பாஸ்கர் செல்வராஜ்

சுகாதார சங்கிலி முழுமையடைய...

இந்த சங்கிலி முழுமையடைய இன்னும் இரு விஷயங்களை இதில் சேர்க்க வேண்டியிருக்கிறது.

1. உற்பத்தியில் பெண்களை பங்கேற்க வைத்தல்

2. மேம்பட்ட கழிவு மேலாண்மை அமைப்புகளை உருவாக்குதல்.

தற்போது நகரங்களிலும், கிராமங்களிலும் குப்பைகளை வாகனங்களில் சென்று வாங்கி வெளிப்புற பகுதிகளில் கொட்டி இயற்கையாக அவற்றை மட்கச் செய்யவிடும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஆனால், சரியாக குப்பைகளின் தன்மைக்கேற்ப பிரிக்கப்படாமல் அழுகவிடப்படும்போது ஏற்படும் துர்நாற்றமும் மாசும் மனிதர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை களைய வேண்டியிருக்கிறது. அதோடு பெருகிக்கொண்டிருக்கும் விலைமதிப்புமிக்க மின்னணு சாதனக் குப்பைகளையும் மற்ற இரும்புப் பொருட்கள் உள்ளிட்ட குப்பைகளையும் மறுசுழற்சி செய்து உற்பத்தியுடன் இணைக்க தேவையான தொழில்நுட்பங்களை வேகமாக உருவாக்க வேண்டியிருக்கிறது. எஞ்சிய குப்பைகளை வெளியில் கொட்டி அழுகவிடாமல் நகர்ப்புறங்களுக்கு வெளியே பாதுகாப்பாக குப்பைகளை எரிக்க தேவையான எரிதொட்டி நீற்றுலைகளைக் (Incinerator) கொண்ட ஆலைகளை நிறுவி எரிப்பதன் மூலம் இந்த சுகாதார சங்கிலியை முழுமையடைய செய்ய வேண்டும்.

மகளிர் குழந்தைகளின் சிந்தனை மேம்பட...

இறுதியாக, பெண்கள் குழந்தைகளைப் பராமரிக்க வீட்டுக்குள் பெருமளவு தங்கிவிடுவதை காண முடிகிறது. வேலைக்குச் செல்லும் பெண்களும் குழந்தை பெற்ற பின்பு வேலையை விட்டுவிடுவதையும் பார்க்க முடிகிறது. வேலைக்கு வெளியில் செல்லும் ஆண்களைவிட வீட்டில் முதியவர்களிடமும், பெண்களிடமும்தான் குழந்தைகள் பெருமளவு நேரத்தைக் கழிக்கின்றனர். வீட்டில் முடங்கும் பெண்களின் சிந்தனை சிறிய வட்டத்துக்குள் சுருங்கி விடுவது தவிர்க்க இயலாதது. இவர்களிடம் வளரும் குழந்தைகளின் சிந்தையில் இது பெரியளவு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நிலையில் அரசு சமீபத்தில் அறிவித்து செயல்படுத்திக்கொண்டிருக்கும் மகளிர் விலையில்லா பயணச்சீட்டு திட்டம் மிகவும் பாராட்டத்தக்க நடவடிக்கை. முன்பு தேங்கிக் கிடந்த கிராமங்களை உந்தித்தள்ள அரசின் மின்சாரம் மற்றும் போக்குவரத்து சேவை எந்த அளவு முக்கிய பாத்திரம் வகித்ததோ அதைவிட தேங்கிக் கிடக்கும் குடும்பத்தை முன்னோக்கி நகர்த்த இந்தத் திட்டம் முக்கிய பாத்திரம் வகிக்கும்.

உற்பத்தியில் பெண்களும் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமும்...

இதனோடு குழந்தை பாதுகாப்பு மையங்களையும் (Daycare Centers) நிறுவ அரசு ஆவண செய்ய வேண்டும். குறிப்பாக அமையவிருக்கும் தொழில்வளாக மையங்களில் பள்ளி, மருத்துவமனைகளோடு இதையும் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாகக் கருதி நிறுவ அரசு முன்வர வேண்டும். இது மகளிர் தொடர்ந்து வேலை செய்யவும் வீட்டில் முடங்காமல் உற்பத்தியில் ஈடுபடவும் உதவும். அரசு தமிழ்நாட்டை தொழில்மயமாக்கும் முனைப்பில் இருக்கும் நிலையில் தொழிலாளர் தேவை அதிகரிப்பு தவிர்க்க இயலாதது. மகளிரின் உழைப்பும் உற்பத்தியில் இணையும்போது தமிழ்நாட்டின் ஜிடிபியை ஒரு ட்ரில்லியனாக உயரச்செய்வது என்பது ஒரு பொருட்டாக இருக்காது. தொழிலாளர்கள் இழக்கும் மதிப்பை அரசு ஈடுசெய்வதன் மூலமும், உற்பத்தியில் மகளிரின் பங்களிப்பு காரணமாகவும் குடும்பங்களின் செலவு செய்யும் ஆற்றல் கூடும். பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும்.

சுய உதவிக்குழுவும் பெண் தொழில்முனைவோரும்...

வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது தமிழகக் குடும்பங்களில் உள்ள வீட்டுப் பயன்பாட்டு பொருட்கள் சொற்பமே. இந்தத் தொழில் வளாகங்களில் உள்ள பெண்களுக்கு வீட்டுத் தேவை சார்ந்து நவீன முறையில் பொருட்களை வடிவமைக்கவும், உற்பத்தி செய்யவும், சந்தைப்படுத்தவும் பயிற்சி அளிப்பதன் மூலம் இந்த தேவைக்கான அளிப்பை செய்ய வைக்கலாம். இந்த நிறுவனம் சார்ந்தும், சுயதொழில் சார்ந்தும் உற்பத்தியில் பெண்கள் பங்கேற்பது குடும்பத்தில் நிலவும் பொருளாதார அசமத்துவத்தைக் குறைத்து அவர்களின் மீதான அடக்குமுறைகளில் இருந்தும் ஆதிக்கத்தில் இருந்தும் காக்கும். தற்போது இயங்கும் மகளிர் சுய உதவிக்குழுத் திட்டத்தைப் பெரும்பாலும் குறைந்த வட்டியில் கடன்பெறும் வழியாகவே மக்கள் பார்க்கிறார்கள். இந்தப் பயிற்சியுடன் இந்தத் திட்டத்தை இணைக்கும்போது இந்தத் திட்டத்தின் உண்மையான பொருளில் செயல்பட்டு பல பெண் தொழில்முனைவோர்களை இது உருவாக்கும் வாய்ப்பை வழங்கும்.

ஊர், சேரி, சமத்துவபுரம், சுயசார்பு கிராமங்கள்...

அதேபோல கலைஞர் தொடங்கி வைத்த சமத்துவபுரம் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தப் போவதாக முதல்வர் கூறி இருக்கிறார். அதோடு மற்றோர் இடத்தில் கிராமங்களை தற்சார்பு கிராமங்களாக ஆக்கவும் அறிவிப்பு செய்திருந்தார். நகரங்கள் தவிர்த்த மற்ற பகுதிகளில் செயல்படுத்தப்படும் சமத்துவபுரத் திட்டம் ஊர்-சேரி என்ற பார்வையில் குறைவான மாற்றத்தையே ஏற்படுத்தும். மக்களின் சிந்தனையை வாழ்விடத்தைவிட வாழ்வாதாரமே பெருமளவு நிர்ணயிக்கிறது. அந்த வகையில் வாழ்வது சமத்துவபுரமாக இருந்தாலும் வாழ்வாதாரம் விவசாயமாகவும் அது சார்ந்த தொழிலாகவும் இருக்கிறது. இந்த விவசாயத் தொழிலில் அறிவியல் சிந்தனை பெரிதாக ஆதிக்கம் செலுத்துவதில்லை. மரபான செவிவழி சிந்தனையும் அனுபவவழி அறிவுமே முதன்மையாக இருக்கிறது.

இந்த நிலையில் கிராமங்களை தற்போதைய வடிவில் சுயசார்பானதாகக் கட்டமைப்பது சாதியை, ஊர்-சேரி என்ற கட்டமைப்பை அப்படியே தொடரச் செய்வதாகவே இருக்கும். அதன் ஆயிரம் ஆண்டு தொடர்ச்சியை, சொத்து, சாதி எனக் கெட்டித்தட்டிபோன இந்த சிந்தனையை புதிய விவசாய தொழில் உற்பத்தி முறைகளே உடைக்கும். அறிவியல்வயப்பட்ட தொழில்நுட்பங்களின் அடிப்படையில் ஒரு தொழிலாக இந்த விவசாயம் மாற்றம் பெறும்போதுதான் பழைய ஆண்டை - பண்ணையடிமை முழுதாக மறையும். அதுவல்லாமல், சமத்துவபுரத் திட்டத்துக்கான இயல்பான சமூக தேவையின்றி அரசின் மூலமாக செய்யப்படும் முயற்சிகள் அதன்மீதான திணிப்பாகவே இருக்கும். அதோடு தற்போதைய சூழலில் அப்படி தற்சார்பு கொண்டவையாக கிராமங்களை மாற்றும்போது தமிழ்நாட்டின் தொழில்துறைக்கு எங்கிருந்து தொழிலாளர்கள் கிடைப்பார்கள் என்ற கேள்வியையும் அது எழுப்புகிறது.

தேவை சுயசார்பான சமத்துவ நகரங்கள்

ஆகவே, தமிழ்நாடு முழுவதும் தொழிற்சாலை வேலைகள், தொழிலாளர் குடியிருப்பு, கல்வி, மருத்துவம், சுகாதாரம், குழந்தைகள் காப்பகம், சுயதொழில் செய்யும் வாய்ப்பு ஆகியவற்றைக் கொண்ட நவீன நகரங்களாகப் புதிய தொழில் வளாகங்களை வளர்த்தெடுக்கும்போது இயல்பாக கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இங்கே வேலைதேடி இடம்பெயர்வார்கள். இந்தத் தொழிலகங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் பழைய சாதிய பண்பாட்டு கூறுகளைச் சுமந்து வந்தாலும் வாழ்விடம், வாழ்வாதாரம் இரண்டும் இவர்களை மேலும் நெருங்க செய்து நாளடைவில் தொழிலாளர் வர்க்கம் என்ற ஒற்றை அடையாளம் காண்பார்கள். இப்படி வீட்டைவிட்டு இங்கு வேலைக்கு வரும் இளைஞர்-இளைஞிகள் தனது விருப்பத்தின் அடிப்படையில் மணவாழ்வை அமைத்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

அவ்வாறு சந்தித்து சாதி மறுப்பு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு இந்த நவீன நகரங்களிலேயே சமத்துவபுரம் அமைத்து, தங்க இடம் கொடுப்பதன் மூலம் சாதிவெறியில் ஆணவக்கொலை செய்யும் பெற்றோரிடம் இருந்து அவர்களைக் காக்கும் அரணாக இந்தக் குடியிருப்புகளை விளங்க வைக்கமுடியும். மேலும் கல்வி, தொழில், வேலைவாய்ப்புகளில் இவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும்போது இந்தப் போக்கு இன்னும் வேகமெடுக்கும். இப்படி அரசின் அனைத்து திட்டங்களையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்படும் இந்த நகரங்கள் முதல்வர் வீட்டுவசதித் துறை கூட்டத்தில் கூறியதுபோல ஒருங்கிணைந்த நகர திட்டமாக உருவெடுக்கும். இதன் வெற்றியும் வளர்ச்சியும் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் இந்தியாவுக்கும் முன்மாதிரியாக விளங்கும்.

செயல்படுத்த பணம் எங்கிருந்து வரும்?

இப்படி உருவாகும் நகரங்களின் பெருகிய உணவு தேவைக்கு, இதைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகளில் விவசாயம் செய்ய ஊக்குவிக்கும்போது இப்போதிருக்கும் கிராம கட்டமைப்பு புதிய நிலைமைக்கேற்ப மாற்றம் பெறும். தொழிலாளர்கள் நகரங்களுக்கு வெளியேறுவதால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறையும் நகரத்தின் தானியம், மாமிசம் என விரிவடையும் தேவையும் தற்போதிருக்கும் விவசாய உற்பத்தியின் முகத்தை முழுமையாக மாற்றி அமைக்கும். சாதியின் இருப்பிடமாக இருக்கும் தற்போதைய விவசாய உற்பத்தி உறவுக்கு அங்கே இடமிருக்காது. சொல்வதற்கு இவை எளிமையாக இருந்தாலும் செய்வதற்கான சாத்தியங்கள் அதற்கான மூலதனம் எங்கிருந்து வரும் என்பது போன்ற கேள்விகளுக்கு இங்கே விடைகாண வேண்டியுள்ளது. ஏனெனில் பொதுவாக திட்டங்கள் தீட்டப்பட்டு உலக வங்கி போன்ற பன்னாட்டு நிதிய அமைப்புகளிடம் நிதியைக் கோருவதும், அவர்கள் ஆயிரம் தனியார்மயமாக்கும் கட்டளைகள் இட்டு அவர்களின் ஆதரவு பெற்ற பன்னாட்டு நிறுவனங்கள் இதில் பலனடைய வகை செய்வதும் தொடர்கதையாக இருக்கிறது.

நமது மக்கள் உழைத்து உருவாக்கும் செல்வமதிப்பை வட்டியாகவும், நிறுவனங்கள் லாபமாகவும் எடுத்துச் சென்ற பிறகு பெரிதாக நம்மிடம் எதுவும் எஞ்சி நிற்பது இல்லை. கடந்த முப்பது வருடங்களாக அரசை இவர்கள் தங்களின் சுரண்டலை எளிதாக்கிக் கொடுக்கும் தரகனாகவும், இவர்களால் ஒட்ட சுரண்டப்பட்டு ஓட்டாண்டி ஆகி புண்பட்டு நிற்கும் தொழிலாளர்கள் பொங்கி எழாமல் இருக்க நலத்திட்ட புனுகு எண்ணெய் பூசும் தாதியாகவும் மாற்றி வந்திருக்கிறார்கள். மாற்று ஏதுமற்ற நிலையில் அரசுகள் இவர்களுக்கு இதுவரையிலும் பணிந்திருந்தன அல்லது பணியவைக்கப்பட்டன.

உடைத்து நொறுக்கப்படும் வங்கித்துறை!

சூழல் மாறிக்கொண்டிருக்கிறது. இந்த ஏகாதிபத்திய உலகமய கட்டமைப்பு உச்சத்தை அடைந்துகொண்டிருக்கிறது. அதன் வெளிப்பாடாக குறைந்தபட்ச முதலாளித்துவப் போட்டியைக்கூட இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது. பெட்டிக்கடை, காய்கறிக்கடை முதற்கொண்டு இணையம் என்ற ஒற்றைப்புள்ளியில் மொத்த பொருளாதாரத்தையும் குவித்து நிதி மூலதனத்தின் பிடியில் கொண்டு வந்துகொண்டிருக்கிறது. இப்படி ஒருமுகப்படுத்தி லாபத்தைப் பெருக்க முற்படுவது மக்களை வதைக்கும். அது உலகம் முழுக்க நிச்சயம் எதிர்ப்பை ஏற்படுத்தும். கூடவே சீன மாற்று அணி வேறு உருவாகிக்கொண்டிருக்கிறது. தன்னை தக்கவைக்க போராடிக்கொண்டிருக்கும் அமெரிக்க நிதிமூலதனம் இந்த நெருக்கடிகளால் வரும்காலத்தில் ஓர் உடைப்பு சந்திப்பது உறுதி. அதனுடன் இறுக பிணைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய வங்கித்துறையும், தொழிற்துறையும் பெருத்த சேதத்தைச் சந்திப்பதும் தவிர்க்க இயலாதது.

நாம் உருவாக்கி வளர்த்தெடுக்கலாம்

ஆகவே வரப்போகும் இந்தச் சூழலை தமிழ்நாடு கருத்தில்கொண்டு நிதிமூலதனத்தில் இயங்கும் பொருளாதாரத்துக்கு இணையாக மக்கள் மூலதனத்தில் இயங்கும் மாற்றுப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் பணத்தின் அச்சாணியான மக்களின் நம்பிக்கையை அசைத்து விட்டார்கள். இப்போது வங்கிகள் திவாலாகத் தொடங்கி இருக்கிறது. இந்தப் போக்கு மேலும் தீவிரமாகிறதே தவிர, தீர்க்க முயற்சி செய்வதாகக் கூட தெரியவில்லை. இந்தச் சூழலை அரசு சரியாகப் பயன்படுத்தி மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு வங்கியை நவீனமயமாக்கி நல்லமுறையில் இயங்க செய்து மக்களின் நம்பிக்கையைப் பெறலாம். தற்போது தமிழ்நாட்டின் நடுத்தர வர்க்கம் தனது பணத்தை தங்கத்திலும், நிலத்திலும், வங்கியிலும், பங்குச் சந்தையிலும் முதலீடு செய்கிறது. இதற்கு மாற்றை உருவாக்கி நல்லதொரு வருமானம் கிடைப்பதை உறுதிசெய்தால் இவர்கள் கூட்டுறவு வங்கிகளில் பணத்தைச் சேமிக்க முன்வருவார்கள்.

உண்மையான மாற்றத்தை நோக்கி...

இப்படி திரளும் மூலதனத்தைக் கொண்டு அரசு புதிய திட்டங்களைச் செயல்படுத்தலாம். தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில்முனைவோருக்கு எளிதாக கடன் கிடைப்பதை உறுதி செய்யலாம். புதிய தொழில்நுட்பம், தொழில் தொடங்குவதை ஊக்குவித்து தொழில்முனைவோருக்கு சாதகமான சந்தையை உருவாக்கும்போது இந்த மாற்றுப் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும். இப்படி நகரங்களில் தொழிலுக்கும், தொழில்முனைவோருக்குமான வாய்ப்பை ஏற்படுத்தும் அதேவேளை, இவர்கள் கிராமப் பகுதிகளில் நிலங்களின் மீது கொண்டிருக்கும் ஆதிக்கத்தை உடைக்க வேண்டும். இவர்களுக்கு தக்க இழப்பீடு கொடுத்து நிலங்களை அரசு கையகப்படுத்தி விவசாய நிலங்கள் அந்தந்த பகுதிகளில் வாழும், நேரடியாக விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமானதாக மாற்ற வேண்டும். இது தொழில்துறைக்குத் தேவையான மூலதனத்தை வழங்குவதோடு இவர்களை தொழில்துறையை நோக்கி முழுமையாக நகர்த்தும். நிலம் சார்ந்த சாதிய தொடர்ச்சியின் எச்சங்களை இல்லாமல் செய்து சாதியற்ற சமூகத்தை நோக்கி நம்மை நகர்த்தும். இந்த முன்னெடுப்பின் எல்லா பலன்களும் மக்கள் அனைவருக்கும் பகிரப்படும் நிலையில் இதன் வெற்றி தோல்வி குறித்து நாம் கவலைகொள்ளாமல் தைரியமாகச் செய்யலாம். இப்படி தமிழ்நாட்டில் வளர்த்தெடுக்கப்படும் மாற்றுப் பொருளாதாரம் அதன் வளர்ச்சிப்போக்கில் நிதிமூலதனம் சார்ந்த பொருளாதாரத்தை வெளியேற்றி சுயசார்பான சமத்துவ மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றும்.

முற்றும்

பாஸ்கர் செல்வராஜ்

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

தொடர்புக்கு [email protected]

.

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

திங்கள் 26 ஜூலை 2021