மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஜூலை 2021

சுயசார்பான சமத்துவ நகரங்கள் சமைப்போம்! - பகுதி 2

சுயசார்பான சமத்துவ நகரங்கள் சமைப்போம்!  - பகுதி 2

பாஸ்கர் செல்வராஜ்

சுகாதார பொருள் உற்பத்தி பெருக்கம் தேவை!

தமிழ்நாட்டில் தொழிற்துறை உற்பத்தியைப் பெருக்குவதில் அரசு முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது. கொரோனாவால் வீழ்ந்து கிடக்கும் நாட்டின் பொருளாதாரத்தையும் வீட்டின் பொருளாதாரத்தையும் மீட்க அவசியமான இந்த முயற்சியோடு வருங்காலத்தில் சுகாதாரம் சார்ந்த உள்ளூர் தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்கவும், இந்தப் பொருட்களின் உற்பத்தியைப் பெருக்கவும் அரசு முன்வர வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள எல்லா பள்ளிகளிலும் பொது இடங்களிலும் இந்த வசதிகளை அரசு ஏற்படுத்த முயலும் இந்தச் சூழலைப் பயன்படுத்தி, இந்தப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவை அடையும் நோக்கத்தையும் இணைத்து செயல்படுத்தும்போது இந்தப் பொருட்களின் விலையைப் பெருமளவு குறைக்க முடியும். இந்த விலை குறைவு, பல குடும்பங்கள் இந்தப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

இடம் சார்ந்த சிக்கல்கள்

இந்த விலை குறைப்பும் முழுபலனை தரும் என்று எண்ணவியலாது. பொருட்களோடு இடம் சார்ந்த பிரச்சினைக்குத் தீர்வில்லாத நிலையில் இந்த முயற்சி முழுமை அடையாது. கிராமத்தில் ஒண்டுக்குடித்தனம் நடத்தும் ஏழைகளிடம் விரிவடையும் குடும்ப நபர்களுக்கு ஏற்ப இடம்வாங்கி வீடு கட்டிக்கொள்ளும் வசதி இல்லை. இவர்கள் நகரங்களுக்கு வேலைசெய்ய இடம்பெயரும்போதும் அதிக வாடகை கொடுத்து வீடுகளில் வசிக்க இயலாமல் புறநகர் பகுதிகளிலும், சுகாதாரமற்ற பகுதிகளிலும் வசிக்கிறார்கள். வீடுகளிலும், கடைகளிலும், தொழிற்சாலைகளிலும் வேலைசெய்யும் இந்த மக்களின் வருமானம் 10-20 ஆயிரங்களைத் தாண்டுவதில்லை. இவர்கள் இந்தப் பணத்தில் குடும்பம் நடத்த வேண்டுமென்றாலோ, பணத்தைச் சேமித்து வீட்டுக்குக் கொடுக்க வேண்டுமென்றாலோ, குறைவான வாடகையில் தங்கி மலிவான விலையில் கிடைக்கும் உணவை உட்கொண்டு வாழ்ந்தால் மட்டுமே சாத்தியம். ஹுண்டாய் போன்ற மகிழுந்து உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலைசெய்யும் இளைஞர்கள் 4-5 பேர் கூட்டாக அறைகளில் தங்கி செலவைக் குறைப்பதைக் காணமுடிகிறது.

இந்த வேலைகளும் தொடர்ந்து இருக்கும் என்று சொல்ல முடியாது. எப்போது வேண்டுமானாலும் பறிபோகலாம். அவ்வாறான சூழலில் இவர்களால் ஒரு மாதம்கூட நகரங்களில் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. வேலை கிடைக்கவில்லை என்றால் குறைந்தபட்சம் வசிக்க இடமும், வயிற்றை நிரப்பும் வாய்ப்பும் இருக்கும் சொந்த ஊருக்கு திரும்புவதைத் தவிர இவர்களுக்கு வேறு வழியின்றி போகிறது. கொரோனா பொது முடக்கத்தின்போது அத்தனை லட்சம் மக்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடந்தும், ரயில்கள் மூலமும் வீட்டுக்குச் சென்றது இந்த கோர உண்மையை நமது முகத்தில் அறைந்து சொன்னது. சற்று நுணுகிப் பார்த்தால், இதே காரணம்தான் இந்தியாவில் சாதி இன்னும் உயிர்ப்புடன் இருக்கவும் காரணமாக இருக்கிறது.

தொடரும் சாதி...

விவசாய நிலங்களையும் இந்த நிலங்களை வைத்திருக்கும் ஆதிக்க சாதிகளையும் சார்ந்தே ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் இருக்கிறது. இந்த சார்பை உடைத்துக்கொண்டு நகரங்களுக்குச் சென்றாலும் நிலையற்ற வேலையின் காரணமாக சுவரில் அடித்த பந்தைப்போல ஒருகட்டத்தில் திரும்ப வேண்டிய சூழல். குறைகூலி வருமானத்தில் குடும்பத்தைத் தன்னுடன் நகரத்தில் வைத்துக் கொள்ள முடியாத பலரும் ஊரில் அவர்களை விட்டுவிட்டு நகரத்தில் வேலைசெய்து பணம் அனுப்புகிறார்கள். வெளிநாடுகளுக்கும், நகரங்களுக்கும் வேலைக்குச் செல்லும் ஆண்கள் ஓரிடத்திலும், அவர்களின் இணையரும் குழந்தைகளும் மற்றோர் இடத்திலுமாக குடும்பங்கள் சிதறிக்கிடப்பது தமிழ்நாட்டில் அதிகரித்திருக்கிறது. தனக்கென ஓர் இடமும், தன்னுடைய குடும்பத்தோடும் குழந்தையோடும் இணைந்து வாழமுடியாத சூழ்நிலையிலும் மக்கள் பரவிக்கொண்டிருக்கும் இணையம் மூலம் மெய்நிகர் உலகில் சந்தித்து உரையாடி ஆறுதல் அடைந்து கொள்ளும் அவல நிலையை அடைந்திருக்கிறார்கள்.

இப்படி பழைய விவசாய உற்பத்தி சார்ந்த உறவுகள் முழுமையாக அறுபடாத நிலையில், அது சார்ந்த மதிப்பீடுகள் (Values) மக்களிடம் அப்படியே தொடர்கிறது. இந்த உறவுகள் உடைந்து சூழலுக்கு மாறாத நிலையில் இதன் தொடர்ச்சியான ‘சாதி’ நமது சமூகத்தில் மறையும் என்று எப்படி நாம் எதிர்பார்க்க முடியும்? குறைகூலியும், இடப்பற்றாக்குறையும்தான் சாதிய தொடர்ச்சிக்கும், சுகாதாரமற்ற வாழ்வுக்கும் அடிப்படை காரணமென்றால் தொழிலாளர்களின் கூலியை உயர்த்த அரசை கோரமுடியுமா?

இந்தியாவிலேயே வளர்ந்த மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டில் இன்னும் அடிப்படையான சுகாதார பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பது நாம் அனைவரும் கவனத்தில்கொள்ள வேண்டியது. இதை அடிப்படை கட்டமைப்பு இல்லாமை மற்றும் மக்களின் பழக்கவழக்கம் சார்ந்து அணுக வேண்டியிருக்கிறது. அரசு பொது இடங்களில் சுகாதார கட்டமைப்புகளை ஏற்படுத்துவதன் மூலமும், இதற்கான பொருட்களின் உற்பத்தியைப் பெருக்கி விலையைக் குறைப்பதன் மூலமும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமும் இதை ஓரளவு மேம்படுத்த முடியும். இவற்றோடு தண்ணீர் மற்றும் இடப்பற்றாக்குறை பிரச்சினையை இனம்கண்டு மக்களின் நுகர்வு ஆற்றலை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே உண்மையான மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதோடு வேலை தேடி இடம்பெயரும் தொழிலாளர்கள், நகரங்களில் நிரந்தரமாக தங்கும் சூழலை ஏற்படுத்துவது இந்த சுகாதார பிரச்சினையையும், சாதிய தொடர்ச்சியின் அடித்தளத்தை அசைக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தும். மக்களுக்கு எங்கு தங்குமிடத்தை ஏற்பாடு செய்வது மற்றும் எப்படி அவர்களின் நுகர்வு ஆற்றலை அதிகரிப்பது என்ற கேள்விகளுக்கு இங்கே விடைகாண வேண்டியிருக்கிறது.

தொழிற்துறை முதலீடு!

அரசு புதிதாகப் பதவியேற்ற பிறகு இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த பெருநிறுவனங்களின் பிரதிநிதிகள் தமிழ்நாட்டில் முதலிடுவது தொடர்பாக முதல்வரைச் சந்தித்தார்கள். அதன்பிறகு நடந்த ‘முதலீட்டாளர்களின் முகவரி தமிழ்நாடு’ நிகழ்வில் பல்லாயிரம் கோடிக்கு முதலிட நாற்பதுக்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலிட முன்வரக் காரணம், படித்த திறனுள்ள மலிவான தொழிலாளர்கள், நிறுவனங்கள் செயல்பட உகந்த சூழலை ஏற்படுத்தித் தரும் நிர்வாகத்திறன் மிக்க அரசு, பொருள் ஏற்றுமதி-இறக்குமதிக்கு வசதியான துறைமுகங்கள், இடம், மின்சாரம், வரி போன்றவற்றில் கொடுக்கப்படும் சலுகைகள்.

பேரவலிமை குன்றிய அரசும் தொழிலாளர்களும்!

தமிழ்நாட்டைப் போலவே மனிதவளமும், துறைமுகங்களும் அமையப்பெற்ற கேரளாவுக்கு இந்த நிறுவனங்கள் செல்வதில்லை. காரணம், வலுவான தொழிற்சங்கங்களும் அவர்களை ஆதரிக்கும் அரசும் அங்கே இருப்பது. இப்போது தமிழ்நாடு குறைகூலி பற்றி பேசினால் நம்மை விட்டுவிட்டு மற்ற மாநிலங்களுக்கும், பங்களாதேஷ், வியட்நாம் போன்ற நாடுகளுக்கும் இந்த நிறுவனங்கள் செல்லும். இழப்பு தமிழ்நாட்டுக்குத்தான். அதோடு பொருளாதார வர்த்தகக் கொள்கைகளையும், தொழிலாளர் சட்டங்களையும் ஒன்றியமே முடிவு செய்கிறது. நிதிமூலதனம், தொழில்நுட்பம் மற்றும் அரசியல் வலிமைகொண்ட இந்தப் பெருநிறுவனங்களின் பேரவலிமையின் முன்னால் மாநில அரசின் வலு சொற்பமே.

இதோடு, கொரோனா பாதிப்பில் காதில், கழுத்தில் உள்ளதை அடகுவைத்து வாழும் மக்கள், இந்தத் தொற்றை எதிர்கொள்ள வாங்கிய கடனில் மூச்சுமுட்டும் அரசு என இருவரும் எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்றிருக்கும் பொருளாதாரச் சூழல். இதனால் இப்போதைக்கு இந்தக் குறைகூலி பிரச்சினை தீரும் வாய்ப்பு குறைவு என்றுதான் தோன்றுகிறது. வேகமாக நமது தொழிலாளர்களின் திறனை பெருக்குவதன் மூலமும், நமது உற்பத்தி வலுவைக் கூட்டிக்கொள்வதன் மூலமும் இந்தப் பிரச்சினைக்கு நாம் தீர்வு காணலாம். அதுவல்லாது, மக்களை நவீன இணைய சாதனங்களைப் பயன்படுத்தவும், இணைய வர்த்தகம் செய்யவும் அனுமதித்துவிட்டு அதன் உற்பத்தியில் இருந்து மக்களை விலக்கிவைப்பது சரியான அரசியலாகவும் இருக்க முடியாது; இந்த சமூகத்தை முன்னோக்கியும் அது நகர்த்தாது.

அரசியல் சரிவும் விளைவும்!

அப்படியான அரசியல் முடிவுகள் எடுக்கப்படும்போது திறனுள்ள தொழிலாளர்கள் உலகம் முழுக்க இடம்பெயர்ந்து தமது உழைப்பை விற்றுக்கொள்வது போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தி இருப்பதைக் காண்கிறோம். இப்படி இவர்களை ஏற்றுமதி செய்து அவர்கள் திரும்ப அனுப்பும் டாலர் வருமானத்தைக் கொண்டு சமூகநல ஆட்சி செய்வதை சரியான அரசியல் பொருளாதார வளர்ச்சியாகவும் கருத முடியாது; அது நீடித்து நிலைத்திருக்கும் என்றும் சொல்ல முடியாது. உலகமயம் பின்வாங்கி உலகம் முழுக்க உற்பத்தி இயந்திரமயமாகிக் கொண்டிருக்கும் சூழலில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான வாய்ப்புகள் இன்னும் பத்து ஆண்டுகளில் அருகிவிடும். இப்போதே பல லட்சம் தொழிலாளர்கள் திரும்ப வந்துவிட்டார்கள். அப்படி என்றால் தொழிலாளர் திறனும், அரசின் பேரவலுவும் கூடும்வரை தொழிலாளர்கள் அவதிப்படவும், சுகாதாரமற்ற சூழலில் வாழவும் அனுமதிப்பதா?

உழைப்பின் மதிப்பை இழக்கும் தொழிலாளர்கள்!

இந்த நிலை நாம் விரும்பியது அல்ல; உலக சூழலாலும் ஒன்றியத்தின் கொள்கை முடிவாலும் நம்மீது விதிக்கப்பட்டது என்றாலும் இதற்கான வினையாற்றல் மாநிலத்தின் விருப்பத்துக்கும், ஆற்றலுக்கும் உட்பட்டது. பெருநிறுவனங்கள் குறைவான நில வாடகை, மின்சாரம், கூலி மூலம் உற்பத்தியின் மதிப்பை மாற்றி அமைக்கின்றன. இதில் தொழிலாளர்கள் தனது உழைப்பை விற்று கூலியாக, குறைவான மதிப்புடைய பணத்தைப் பெறுகிறார்கள். இதனோடு தற்போதைய இணையத்தை மையமாகக் கொண்டு பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் மாறிவரும் நிலையில் தொழிலாளர்களின் பங்களிப்பும், அவர்களின் பேரவலிமையும் வேகமாகக் குன்றிவருகிறது. நீண்டகால நோக்கில் தொழிலாளர்களின் திறனை மேம்படுத்தும் அதேவேளை, தற்காலிக தீர்வாக தொழிலாளர்கள் சந்திக்கும் மதிப்பிழப்பை அரசு ஈடுசெய்ய வேண்டும். அரசு நிறுவனங்களுக்குத் தரும் மலிவான நிலவாடகை மற்றும் மின்சாரத்தை அங்கே வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கும் தருவதன் மூலம் மதிப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வை குறைத்து ஒரு சமநிலையை ஏற்படுத்தலாம். தற்போது வர்த்தகத்துக்கான நிலவாடகை என்ற கூறு பொருளாதாரத்தில் இல்லாமல் ஆக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் சமூகத்தில் இந்த நிலவாடகை என்ற கூறையும் மாற்றியமைக்க வேண்டிய சூழல் வந்திருக்கிறது.

அரசு ஈடுகட்ட வேண்டும்!

இதைக் கருத்தில்கொண்டு, அரசு தொழில்வளாகங்களை (Industrial Park) ஏற்படுத்தும்போது அங்கே இளைஞர் - இளைஞிகள் தங்குவதற்கான அறைகளையும், குடும்பங்கள் தங்கிவாழ வீடுகளையும் உள்ளடக்கிய அனைத்து சுகாதார வசதிகளையும் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை அமைப்பதோடு இவற்றின் மேற்கூரைகளிலும், இதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் சூரிய ஒளி மின்தகடுகளையும் (Solar Panels) நிறுவ வேண்டும். மக்களின் நல்வாழ்வைப் பேணும் வகையில் தரமான உள்கட்டமைப்புகளைக் கொண்ட பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இங்கே நிறுவ வேண்டும். முக்கியமாக இந்த வளாகங்களின் நீர்த்தேவையை ஈடுசெய்யும் வகையில் நீர்சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு அமைப்புகளையும் நிறுவ வேண்டும்.

இன்றைய குடும்பங்களின் பெரும் பகுதி வருமானம்... வாடகை, மின்சாரம், குழந்தைகளின் படிப்பு, மருத்துவத்துக்கே செலவாகிறது. அரசு இந்த ஒருங்கிணைந்த வளாகங்களை நிறுவி வருமானத்துக்கேற்ப விலையின்றியோ, சலுகை விலைகளிலோ இந்த சேவைகளை வழங்குவதன் மூலம் குடும்பங்கள் பெருமளவு செலவைக் குறைக்கும். உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம் கிடைக்கப்பெற்று நம்மிடம் நிலவும் வறுமை குறிப்பிட்ட அளவு குறையும். குழந்தைகளுக்கு வீட்டிலும், வெளியிலும் ஒரே மாதிரியான சுகாதாரமான சூழல் கிடைக்கும். இந்த சுகாதார சங்கிலி முக்கால்வாசி முழுமைப் பெறும். அதென்ன முக்கால்வாசி?

தொடர்ச்சி இரவு 7 மணி பதிப்பில்...

பாஸ்கர் செல்வராஜ்

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

தொடர்புக்கு [email protected]

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

திங்கள் 26 ஜூலை 2021