மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஜூலை 2021

சார்பட்டா: அடர்த்தியும் நுட்பமுமாக ஒரு திரைப்படம்!

சார்பட்டா: அடர்த்தியும் நுட்பமுமாக ஒரு திரைப்படம்!

அ.குமரேசன்

ஒன்றை ஒப்புக்கொண்டுதான் ‘சார்பட்டா பரம்பரை’ படம் குறித்த சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஒப்பீட்டளவில் ஓர் அடர்த்தியை இதிலே உணர முடிகிறது. கருத்துக் கட்டமைப்பாகிய தலைச்சரக்கு, உடற் கட்டமைப்பாகிய கலைச்சரக்கு இரண்டிலும் அந்த அடர்த்தி இருக்கிறது. படத்தில் இந்தப் பரம்பரையின் ரங்கண்ணன் வாத்தியார் கை, கால் திறமையைப் போலவே மூளைக் கூர்மையையும் வலியுறுத்துகிறார், இந்த இரண்டையும் கலந்தாடியிருக்கிறார் பா.ரஞ்சித்.

உலக அளவில், இந்தியாவில், தமிழில் இதற்கு முன்பும் குறிப்பிட்ட விளையாட்டுகள், தற்காப்புக் கலைகள் தொடர்பான திரைப்படங்கள் பல வந்திருக்கின்றன. சினிமாப் புகழுக்கான மோதல் மேடையில் புரூஸ் லீ “என்டர்” ஆகிய “டிராகன்” இப்படிப்பட்ட படங்களுக்குப் பெரியதொரு உந்துசக்தியாக அமைந்தது எனலாம். அந்தப் படங்களிலும் பலவற்றில் நாயகப் பாத்திரங்களின் சீரான உடற்கட்டு, பயிற்சியால் வளர்ந்த ஆட்டத்திறன், தடைகளை முறியடித்த வெற்றி ஆகியவற்றுக்கு அப்பால் அரசியல்/சமூக நிலைமைகள் பற்றிய சில கருத்துகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ‘கலிபோர்னியா டால்ஸ்’ என்ற ஹாலிவுட் படம், குத்துச் சண்டைப் போட்டிக் களத்தில் பெண்களை இறக்கிவிட்டுப் பணம் குவிக்கும் நிறுவன வக்கிரத்தைக் காட்டியது. இந்திப் படமான ‘டங்கல்’ இந்தக் களத்தில் பெண்கள் இறங்குவதற்கே தடையாக உள்ள சமூக மனநிலையைப் பேசியது. ஏன், தமிழின் ‘பிகில்’ கூட, நாயக சாகசங்களோடு கலந்து கால்பந்து மைதானத்தில் சாதிக்கத் துடிக்கும் பெண்கள் சந்திக்கிற திருமணம், குடும்பம், உடல்வாகு போன்ற சவால்களைத் தொட்டுக்காட்டியது. கபடியாட்ட மைதானத்தின் சமூகக் கோடுகளை அழுத்தமாகவே வரைந்து காட்டியது ‘வெண்ணிலா கபடிக்குழு’. கிரிக்கெட் மட்டையிலும் சாதி ஆதிக்கப்புத்தி நூலாகச் சுற்றப்பட்டிருந்த நிலைமையைத் தடவிப் பார்க்க வைத்தது 'ஜீவா'.

இப்படியாக நிறையப் படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் இல்லாத அல்லது அவற்றை விடப் பல மடங்கு அடர்த்தியோடு சார்பட்டா பரம்பரை கோதாவில் குதிப்பதை உணர முடிகிறது. ஆம், உணரத்தான் வேண்டும் – அவ்வளவு நுட்பமாக அதை வைத்திருக்கிறார் இயக்குநர்.

ஓடிடி திரை மேடை போலவே கதையும் இந்நேரம் பரவலாகியிருக்கும் என்ற வாய்ப்பாலும், அதைச் சொல்வது விமர்சன நாகரிகமல்ல என்ற என் கருத்தாலும் அதற்குள் செல்லாமல் படம் சார்ந்த சில சிந்தனைகளுக்கு மட்டும் வருகிறேன். மேலோட்டமாகப் பார்த்தால் குத்துச் சண்டையில் வெல்வது யார் என்ற கெத்துச் சண்டைதான் கதை என ஒரு குறுஞ்செய்திக்கான கட்டண வரம்புக்குள் சொல்லிவிடலாம். உள்ளோட்டத்தில் இறங்கினால் ஒவ்வொன்றைப் பற்றியும் ஒரு கட்டுரையே எழுதலாம்.

“ரஞ்சித் படங்களில் சாதிப் பிரச்சினை மையமாக இருக்கும். ஆனால் எல்லோருக்கும் பொதுவானது சினிமா என்பதால் அப்படிப்பட்ட படங்களை எடுப்பதுதான் நல்லது. இந்தப் படம் அப்படிப் பொதுத்தன்மையுடன் இருப்பது சிறப்பு” என்று பாராட்டுகிறார்கள் ஒரு பகுதியினர். “அப்படிப் பொதுத்தன்மையுடன் இருப்பது சமூக நோக்கத்திலிருந்து பாதை மாறிய சமரசத்தைத்தான் காட்டுகிறது” என்று தள்ளுபடி செய்கிறார்கள் இன்னொரு பகுதியினர்.

சமுதாயத்தின் பொதுவான பிரச்சினை சாதி. அதை மையமாக்குவது பொதுவானதாகத்தானே இருக்க முடியும்? சாதியைச் சுமந்துகொண்டு திரியாதீர்கள் என்று சொல்வதற்கே கூட அதை மையமாக்கத்தானே வேண்டும்? ஆனால், சாதிப் பெருமை பேசுகிற படமென்றால் அதைப் பொதுவானது என்று வரவேற்பதும், சாதியச் சிறுமையைச் சாடுகிற படமென்றால் சினிமா எல்லோருக்கும் பொதுவானது என்று ஒதுக்க முயல்வதும் என்ன மனநிலை? எல்லோருமாகச் சேர்ந்து ஒழித்துக்கட்ட வேண்டிய சாதியத்தைப் பற்றிய படைப்பை எல்லோரும் விரும்பி ஏற்கத்தக்க வகையில் படைப்பாளி தர வேண்டும் என்று கூறுவது வேறு, சாதி பற்றியே பேசாமல் சும்மா பொழுதுபறிப்புப் படமாக எடுக்கச் சொல்வது வேறு.

அதே போல், ஒரு படைப்பாளி குறிப்பிட்ட வகையிலான ஆக்கங்களை மட்டுமே உருவாக்கிக்கொண்டிருக்க வேண்டுமா? பூமியின் நிலம், நீர், ஆகாயம் ஆகிய மூன்று பரப்புகளிலும் பரந்து நிறைந்திருக்கிற மற்ற நிலவரங்களில் ஒன்றை எடுத்துக்கொள்ளக்கூடாதா? அப்படி எதிர்பார்ப்பது, இல்லையேல் சமரசம் என்று தள்ளுவது இரண்டுமே கலையை முடக்கிவிடும். எடுத்துக்கொண்ட உள்ளடக்கத்தை வெளிப்படுத்துவதில் கலை நேர்மை இருக்கிறதா, இல்லையா என்று விவாதிக்கலாம் தவறில்லை.

ரஞ்சித் இதிலே கலை நேர்மையோடு, இந்தியாவின் நாற்பத்தைந்தாண்டுகளுக்கு முந்தைய இருட்டு அத்தியாயமாகிய அவசர நிலை ஆட்சி, அன்றைய தமிழகத்தின் அரசியல் களம் இரண்டையும் பின்திரையாக வைத்துக்கொண்டு, ஒரு சிதைக்கப்பட்ட தற்காப்புக் கலை, அதை மீட்பதற்கான போராட்டம் இரண்டையும் முன்னிலைப்படுத்தியிருக்கிறார். முகத்தில்தான் குத்த வேண்டும் என்பது உள்ளிட்ட நெறிகளோடு இருந்து வந்திருக்கிற உள்ளூர்க் குத்துச் சண்டை மரபில், வெள்ளையர் ஆட்சியின்போது எப்படி வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் தாக்கலாம் எனக் கலக்கப்பட்ட நெறி மீறல்கள் பற்றிப் பேசுகிறது படம். அது “அடிச்சுக் காலி பண்ணு” என்று (நாயகன், எதிரி என மோதுகிற இரு தரப்பிலுமே) குருதி ருசியில் வெறியூட்டுகிற வேதியலாக்கப்பட்டுவிட்டதையும் சொல்லாமல் சொல்கிறது.

இதற்கு உள்ளேயும் இருந்த சாதிய ஒதுக்கலையும் ஒதுக்கிவிடாமல் சொல்லியிருக்கிறார்கள். “நீயெல்லாம் இந்த இடத்திலே வந்து பேசவே கூடாது” என்று சண்டைக்கள வாக்குவாதத்தில் ஒருவன் கபிலனைப் பார்த்துச் சொல்வது அந்த ஒதுக்கலின் காரணமாகத்தான். அதையெல்லாம் மீறித்தான் அடையாளம் பெற்றிருக்கிறார்கள். அதற்கு, ஒரு சாதியோடு நிற்காமல் யாரையும் இணைத்துக்கொண்டு குறிப்பிட்ட பயிற்சி முறையைப் பின்பற்றுவதே பரம்பரை என்ற புரிதலோடு சார்பட்டா பட்டறை கட்டப்பட்டிருப்பதை வாத்தியார் போகிற போக்கில் சொல்கிறார். அதற்கொரு சான்று அவரது குழுவில் முக்கியமான ஒருவராக, கபிலனைத் தூக்கிக் கொண்டாடுகிறவராக ஆங்கிலோ இந்தியரான டாடி வருவது. போட்டிக் களம் முற்றிக்கொண்டிருக்கிறபோது, “இனிமே நம்ம காலம்தான்” என்று கபிலனின் நண்பன் ஆவேசத்தோடு சொல்கிற இடத்தின் பின்னணியில் அம்பேத்கர் சுவரொட்டி, குடியிருப்பிடத்தில் புத்தர் சிலை உள்ளிட்ட குறியீடுகள் குறிப்பாக உணர்த்திவிடுகின்றன. இப்படிக் குறியீடுகளாகத்தான் உணர்த்த முடிகிறது, சொல்லாமல் சொல்லத்தான் முடிகிறது என்பது ஒருபக்கம் கலையின் நுட்பம் என்றால், இன்னொரு பக்கம் நேரடியாகச் சித்திரிக்க முடியாத ஒரு நெருக்கடியைக் கலைஞர்களுக்கு ஏற்படுத்துவது சமூகத்தின் குற்றம். அடுத்தடுத்த ஆக்கங்களில் ஆழமான சிந்தனைகளுக்குக் கொண்டு செல்வதற்குத் தொடர்ந்து இந்த வணிகக் கட்டமைப்போடும் இருந்தாக வேண்டியிருப்பது பல கலைஞர்களின் சிறகை விரிக்கவிடாமல் செய்திருக்கிறது.

அவசரநிலை ஆட்சியின்போது தமிழகத்தில் திமுக அரசு கலைக்கப்பட்டது, பலர் கைது செய்யப்பட்டது, எம்ஜிஆர் கை ஓங்கத் தொடங்கியது, சிலர் தங்களுக்குக் கிட்டத்தட்ட அடியாட்களாக வேலை செய்வதற்கு ஆள்பிடிக்கிற வேலைகளில் இறங்கியது, மேலும் சிலர் கள்ளச்சாராயத் தயாரிப்பில் இறங்கியது, அதையொட்டி ரவுடிக் கும்பல்கள் வளர்த்துவிடப்பட்டது, இந்தப் போக்குகளோடு சிலர் தங்கள் சொந்தத் திறன்களையும் அடையாளங்களையும் இழந்தது… உள்ளிட்ட அரசியல் பதிவுகளும் இருக்கின்றன. குத்துச் சண்டை மோதல் களம் இதற்கான வேட்டைக் காடாகவும் மாற்றப்படுகிறது. திருமண இணையருக்குப் பரிசாக அம்பேத்கர் படத்துடன் பெரியார், கலைஞர் படங்களும் வழங்கப்படுவதிலும் ஒரு நுட்பமான செய்தி. இப்படி இங்கேயெல்லாம் செல்கிற காட்சியோட்டம் உடனுக்குடன் மையக்கதைக்குத் திரும்பிவிடுகிறது. அது படத்தின் முக்கியமான பலம்.

கபிலனின் சண்டைத் திறனை உற்றார் உறவினர் கொண்டாடினாலும், தாய் பாக்கியம் அதை அங்கீகரிக்கவில்லை. குத்துச்சண்டைக்குப் போகக் கூடாது என்று அடக்குகிறார், மீறிச் சென்றால் அடிக்கிறார். பின்னர் அவரே, “நீயும் குடிகாரனாகிவிடக் கூடாது, ரவுடியாகிவிடக் கூடாது என்றுதான் பாக்ஸிங்குக்குப் போகக் கூடாதுன்னு சொன்னேன். இப்ப, நீ அப்படியெல்லாமல் ஆகாமத் தடுக்கணும்னா பாக்ஸிங்குக்குப் போறதுதான் வழி” என்று தன்னம்பிக்கையூட்டிக் கிளப்புகிறார். இதிலே எத்தனை வாழ்வியல் நுட்பம்!

“விளையாட்டுன்னா ஜெயிக்கவும் செய்யலாம், தோக்கவும் செய்யலாம். அதிலே ஏண்டா பரம்பரைப் பெருமை, மானம்னு சேர்க்கிறீங்க” என்று கேட்கப்படுகிற இடம் நுட்பமானது, அழுத்தமானது. மிகையான சொற்களால் கட்டமைக்கப்படும் மான மயக்கம் பற்றிய இந்தக் கேள்வியை எழுப்புவதும் ஒரு பெண்தான்! ஆசை ஆசையாய் மாமன் கபிலனைக் கட்டிக்கொண்ட மாரியம்மாளிடமிருந்து வரும் இந்தக் கேள்வி அர்த்தமுள்ளதும்கூட. பெண் பாத்திரங்களுக்கு நிறைய இடமில்லாவிட்டாலும் நிறைவான இடம் தரப்பட்டிருப்பது சிறப்பு.

வாத்தியாரின் மகன் சாராயமும் காய்ச்சுகிறான், பழிவாங்கவும் துடிக்கிறான், கடைசியில் துணையாகவும் நிற்கிறான். அவன் நல்லவனா, கெட்டவனா? இந்த வினாவுக்கு ஒரு சொல் விடையாக எழுதிவிட முடியாத எண்ணற்ற ஊசலாட்ட மனிதர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு அந்த வெற்றிச்செல்வன்.

சார்பட்டா குழுவின் பெருமைக்காக இடியாப்பப் பரம்பரைக் குழுவை முழு வில்லன்களாக்கிவிட்டிருப்பது யதார்த்தச் சித்திரிப்பிலிருந்து கொஞ்சம் விலகுகிறது. முழுக்க முழுக்க சூழ்ச்சி செய்கிறவர்களாகவே இருப்பார்களா? அப்படியொரு சதித்திட்டத்தோடு வருகிற தணிகையை, முக்கியப் போட்டியாளனாகிய வேம்புலி “போய்யா” என்று ஒதுக்குவதில் சற்றே ஆட்டநேர்மைப் பண்பு தெரிகிறது. ஆனால் அந்தக் கணத்தோடு அது முடிந்துவிடுகிறது. மோதுகிறவர்கள் ரத்தம் கொட்ட வைப்பதுதான் வீர விளையாட்டு என உயர்த்திப் பிடிக்கலாமா என்ற மனித நேயமும் உரிமையும் சார்ந்த பார்வை சார்ந்த கேள்வியும் எழுகிறது. கபிலன் ஊரைக் காப்பாற்றுவதற்காக அல்ல, தான் வெறியோடு மதிக்கிற வாத்தியாரின் மரியாதையைக் காப்பாற்றுவதற்காகத்தானே கையுறை அணிகிறான்?

எல்லாக் கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் பெற்றிருப்பது போலவே, எல்லா நடிப்புக் கலைஞர்களும் முன்னிலை பெற்றிருக்கிறார்கள். கதையில் வருவோரை அவர்களது பெயர்களிலேயே நினைவில் நிறுத்துகிறார்கள். உடற்கட்டால் அசத்துவதோடு உள்ளத்தின் உறுதியை வளர்த்துக்கொண்டதையும் காட்டுகிற கபிலனாக ஆர்யா, பரம்பரையின் பெருமைக்காகப் போராடுவதோடு அரசியலிலும் போராடி சிறைக்குச் செல்கிற ரங்கண்ண வாத்தியாராக பசுபதி, மாரியம்மாளாக துஷாரா விஜயன், பாக்கியமாக அனுபமா குமார், கெவின் என்ற டாடியாக ஜான் விஜய், மிஸ்ஸியம்மாவாக பிரியதர்ஷினி ராஜ்குமார், வெற்றியாக கலையரசன், வேம்புலியாக ஜான் கொக்கேன், ஊடகவியலாளர்கள் இனி விசாரிக்கப்போகிற டான்சிங் ரோஸ் என்ற நடனக் குத்துச்சண்டையாளராக ஷபீர் கல்லரக்கல், வாத்தியார் துரைக்கண்ணுவாக ஜி.எம். சுந்தர், தணிகையாக வேட்டை முத்துக்குமார், லட்சுமியாக சாஞ்சனா நடராஜன், டைகர் கார்டன் தங்கமாக டைகர் தங்கதுரை, கபிலனின் தகப்பனாக கிஷோர், கௌதமனாக சரவணா, ராமனாக சந்தோஷ் பிரதாப், கோணி சந்திரனாக காளி வெங்கட்… யாரைச் சொல்வது, யாரை விடுவது? கொரோனா தொற்றால் உயிரிழந்த மாறன் படத்தின் வழியே மாஞ்சா கண்ணனாக வாழ்கிறார்.

படத்தின் மற்றொரு முக்கியமான பலம் ரஞ்சித், தமிழ்ப்பிரபா இருவருமாக எழுதியுள்ள உரையாடல். கபிலன் பயிற்சி எடுக்கும் கடல் நீர் பற்றியும், கரையில் ஓடும் நண்டை ஓடிப் பிடிப்பது பற்றியும் மீனவரான பயிற்சியாளர் சொல்லச் சொல்ல அந்த வசனம் மட்டுமல்லாமல், அது உணர்ச்சி மிகுந்ததாக மாறுகிற இடமும் கவித்துவமானது. பேசின் பிரிட்ஜ் பகுதியில் இப்போது காண முடியாத அனல்மின் நிலையக் கோபுரங்கள், நிலக்கரிக் குவியல்கள், மணிக்கூண்டு, சைக்கிள், பைக், கார் என்று பார்க்க முடிவதில் கலை இயக்குநர் ராமலிங்கம் குழுவினரின் உழைப்பு பளிச்சிடுகிறது.

அத்தனை பேரின் உழைப்பையும் உயிரோட்டமாய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஜி. முரளி. சீராகவும் வேகமாகவும் தவழ்கிற அலை போலத் தொகுத்திருக்கிறார் ஆர்.கே.செல்வா. இத்தகைய படங்கள் என்றால் இசைத் துடிப்புக்கு இவர்தான் என்ற அடையாளத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் சந்தோஷ் நாராயண். அந்த இசைக்கு இதயமாகத் துடிக்கின்றன கபிலன், அறிவு, மெட்ராஸ் மீரான், ஷான் வின்சென்ட் டீ பால் பாடல்கள்.

முதலில் குறிப்பிட்ட அடர்த்திக்காகவும், சில புரிதல்களை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகவும் படத்தை இரண்டாவது முறை பார்த்தேன். முதல் தடவை பார்த்தபொழுதின் அதே விறுவிறுப்பு மறு பார்வையின்போதும் அப்படியே தொடர்ந்தது தனியொரு அனுபவம்.

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ ஐந்து வருடக் கணக்கு: கே.சி. ...

6 நிமிட வாசிப்பு

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ  ஐந்து வருடக் கணக்கு: கே.சி. வீரமணி ரெய்டு குறித்து அறப்போர்!

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

3 நிமிட வாசிப்பு

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

5 நிமிட வாசிப்பு

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

ஞாயிறு 25 ஜூலை 2021