மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஜூலை 2021

பாகுபாடின்றி அனைத்து மாவட்டங்களுக்கும் சரிசமமான வசதி: கே.என்.நேரு

பாகுபாடின்றி அனைத்து மாவட்டங்களுக்கும் சரிசமமான வசதி: கே.என்.நேரு

முன்னேறிய மாவட்டம் பின்தங்கிய மாவட்டம் என்ற பாகுபாடு இன்றி அனைத்து மாவட்ட மக்களுக்கும் அனைத்து அடிப்படை தேவைகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.

இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மேகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரில் யாரேனும் ஒருவரை இழந்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 4 குழந்தைகளுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது. அதுபோன்று பணி காலத்தில் உயிரிழந்த அங்கன்வாடி மைய ஊழியர்கள் 5 பேரின் வாரிசுகளுக்கும், ஆதிதிராவிடர் நலத்துறை ஊழியர் ஒருவரின் வாரிசுதாரருக்கும் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார்.

"ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக கடந்த ஆட்சியில் 80 சதவிகிதம் செலவு செய்து விட்டார்கள். மீதமுள்ள பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள், சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரியும் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் அந்தந்த தொகுதிக்கு குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். நகராட்சியை விரிவுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். அவர்களின் கோரிக்கை குறிப்பு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் உள்ள சிரமங்களையும் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை திட்டம், உடைப்பு ஏற்பட்ட சாக்கடைகளை சரிசெய்தல், சாலை வசதி, பாதுகாக்கப்பப்பட்ட குடிநீர் வசதி, ஏற்கனவே கட்டப்பட்டு பழுதடைந்துள்ள கட்டிடங்களை சரிசெய்தல், பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைத்தல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

திருச்சியில் உள்ள காவிரி ஆற்றில் 48 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலத்தை கடந்த ஆட்சியில் அதிகம் சேதப்படுத்தி விட்டார்கள். எனவே காவிரியின் குறுக்கே புதிய பாலம் கட்ட திட்டம் உள்ளது. திருச்சியில் சுற்றுச்சாலை பணிகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பின்தங்கிய மாவட்டம், முன்னேறிய மாவட்டம் என்று பாகுபாடு இல்லாமல் அனைத்து மாவட்டங்களுக்கும் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்து கொடுக்கப்படும்.

சென்னையில் சாலைகள் அமைப்பதற்கு விடப்பட்ட டெண்டர் ரத்து செய்யபட்டது. எதற்காக இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது என்று ஆராய்ந்து, மற்ற மாநகராட்சிகளில் சாலை அமைப்பதற்காக விடப்பட்ட டெண்டரிலும் பிரச்சினைகள் இருக்கிறதா என ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை குறித்து பேசிய அவர், தவறு செய்திருப்பதாக தெரியவந்த காரணத்தால் சோதனை நடத்தப்பட்டது. தவறு செய்திருப்பது நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிட்டார்.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

ஞாயிறு 25 ஜூலை 2021