மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஜூலை 2021

பன்னீர் டெல்லி பயணம்: அஜெண்டா சசிகலா

பன்னீர் டெல்லி பயணம்:  அஜெண்டா சசிகலா

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் இன்று (ஜூலை 25) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.

கடந்த ஜூலை 19 ஆம் தேதி அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அன்றே மருத்துவமனைக்கு விரைந்த ஓபிஎஸ் மதுசூதனின் உடல் நலம் விசாரித்தார். தர்மயுத்தம் நடத்தியபோது ஓபிஎஸ் சுடன் இருந்தார் அவைத் தலைவர் மதுசூதனன். தேர்தல் ஆணையம், முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை அவைத் தலைவரான மதுசூதனனிடம்தான் முறைப்படி வழங்கியது.

ஓபிஎஸ் அப்பல்லோவுக்கு வந்து சென்ற மறுநாள்தான் எடப்பாடி பழனிசாமி அப்பல்லோ சென்றார். அதேநேரத்தில் சசிகலாவும் அப்பல்லோவுக்கு செல்ல அங்கே பரபரப்பானது. சசிகலாவை நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்க்க எடப்பாடி அவசர அவசரமாக புறப்பட்டுச் சென்றுவிட்டார் என்று தகவல்கள் வந்தன.

இதற்கிடையில் சசிகலா அதிமுகவில் இணைவது பற்றி எடப்பாடி எதிர்மறையாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில் ஓ.பன்னீரோ, “அம்மாவுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்திருக்கிறார். அவர் மேல் எங்களுக்கு நல்லெண்ணம் உள்ளது. இதே செட்டப் (ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்) தொடர்வதை ஏற்றால் அவர் அதிமுகவுக்குள் திரும்புவது பற்றி பரிசீலிக்கலாம்” என்றும் கூறியிருந்தார் ஓபிஎஸ்.

ஆனால் சில நாட்களுக்கு முன் ஜெயா டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் ஓபிஎஸ் -எடப்பாடி இடையே ஒற்றுமை இல்லை என்பதை வெளிப்படையாகச் சொன்ன சசிகலா, “தொண்டர்கள் முடிவின்படி செயற்குழு, பொதுக்குழுவில் என்னை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்து ஆச்சர்யப்படுத்தினார்.

இந்தப் பின்னனியில்தான் ஓ.பன்னீர் செல்வம் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். அவரது டெல்லி பயணம் குறித்து தேனியில் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம்.‘

“போனவாரமே இந்தப் பயணத்துக்கு திட்டமிட்டிருந்தார் ஓபிஎஸ். ஆனால் டெல்லியில் இருந்து சிக்னல் கிடைத்ததை ஒட்டி இன்று புறப்பட்டுச் செல்கிறார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார். மேகதாது பிரச்சினை உள்ளிட்ட சில விஷயங்களை வெளிப்படையாக பேசினாலும் சசிகலா விவகாரம்தான் பன்னீர் டெல்லி பயணத்தின் அஜெண்டா. அன்றைக்கு எப்படி ஓபிஎஸ்சையும், எடப்பாடியையும் டெல்லி சேர்த்து வைத்ததோ அதேபோல இன்று சசிகலாவையும் அதிமுகவையும் சேர்த்து வைக்கும் இணைப்புக்கான சாவி டெல்லியிடம்தானே இருக்கிறது” என்கிறார்கள்.

பன்னீரின் டெல்லி நிகழ்வுகள் அதிமுகவுக்குள் அதிர்வுகளை ஏற்படுத்தலாம்!

-வேந்தன்

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ ஐந்து வருடக் கணக்கு: கே.சி. ...

6 நிமிட வாசிப்பு

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ  ஐந்து வருடக் கணக்கு: கே.சி. வீரமணி ரெய்டு குறித்து அறப்போர்!

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

3 நிமிட வாசிப்பு

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

5 நிமிட வாசிப்பு

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

ஞாயிறு 25 ஜூலை 2021