மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஜூலை 2021

சட்டமன்றத்தில் கலைஞர் படம்: வருகை தரும் குடியரசுத் தலைவர்

சட்டமன்றத்தில் கலைஞர் படம்: வருகை தரும் குடியரசுத் தலைவர்

தமிழக சட்டமன்ற வளாக நிகழ்வுகளுக்காக குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஆகஸ்டு 2 ஆம் தேதி தமிழ்நாடு வருவதாக தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இன்று (ஜூலை 24) மாலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, “தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்த கலைஞர் திருவுருவப்பட திறப்பு விழா நிகழ்ச்சி ஆகஸ்டு 2 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் பேரவை வளாகத்தில் வைத்து மாலை 5 மணிக்கு சிறப்பாக நடைபெற இருக்கிறது.

இந்த விழாவுக்கு மேதகு இந்திய குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்தினராக வந்து சிறப்பிக்கவும், தமிழக ஆளுநர் தலைமை தாங்கிடவும், முதல்வர் ஸ்டாலின் முன்னிலை வகிக்கவும் இசைவு தெரிவித்துள்ளார்கள். இந்நிகழ்ச்சிகளுக்கான பணிகள் தமிழக சட்டப்பேரவை செயலகத்தின் மூலம் செய்யப்பட்டு வருகிறது”என்று கூறினார்.

கடந்த ஜூலை 19 ஆம் தேதி டெல்லி சென்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அதன் பின் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“ சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளோடு தனித்தன்மையாக செயல்பட்ட சட்டமன்றம் 12-1- 1921 அன்று தொடங்கிவைக்கப்பட்டது. அதை நினைவுபடுத்தக் கூடிய வகையில் சட்டமன்ற நூற்றாண்டு விழாவைக் கொண்டாட அரசு முடிவு செய்திருக்கிறது.

அந்த விழாவுக்கு தலைமை தாங்கி விழாவை நடத்தித் தர வேண்டும் என்று நான் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை வைத்தேன். அந்த கோரிக்கையை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அந்த விழாவில் கலைஞரின் திருவுருவப் படத்தை சட்டமன்றத்தில் திறந்து வைக்க வேண்டும் என்ற செய்தியையும் அவரிடம் சொல்லியிருக்கிறோம்.

அதையொட்டி மதுரையில் தலைவர் கலைஞர் பெயரில் அமையக் கூடிய நூலக அடிக்கல் நாட்டு விழா, சென்னை கிண்டியில் நடைபெற இருக்கும் அரசு பன்னோக்கு மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா, நம் நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆவதை ஒட்டி சென்னை கடற்கரையில் அமைய இருக்கும் நினைவுத் தூண் திறப்பு விழாவையும் நடத்தித் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தந்திருக்கிறார். தேதியை இரண்டொரு நாட்களில் வழங்குவதாக உறுதியளித்திருக்கிறார்” என்று தெரிவித்திருந்தார் ஸ்டாலின்.

அதன்படியே குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து இந்த நிகழ்ச்சியை நடத்தும் சட்டப்பேரவை செயலகத்துக்கு இன்று ராம் நாத் கோவிந்த்தின் தமிழக வருகையை உறுதிப்படுத்தி செய்தி அனுப்பப்பட்டது. அதையடுத்து சபாநாயகர் அப்பாவு இதை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திமுக அரசு பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் பிரம்மாண்ட விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.

-வேந்தன்

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

சனி 24 ஜூலை 2021