மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஜூலை 2021

'எனக்குச் சொந்த வீடே கிடையாது': எம்.ஆர்.விஜயபாஸ்கர்

'எனக்குச் சொந்த வீடே கிடையாது': எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இரண்டு தினங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திய நிலையில், 'எனக்குச் சொந்த வீடே இல்லை' என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் அமைச்சராக இருந்த போது போக்குவரத்துத் துறையில் பல்வேறு ஊழல்கள் நடந்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அதன்படி அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப் பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேற்று முன்தினம் (ஜூலை 22), சென்னை, கரூர் உள்ளிட்ட 26 இடங்களில் சோதனை நடத்தினர். இதன் முடிவில் பல்வேறு ஆவணங்களும், ரூ. 25 லட்சம் பணமும் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்தது.

இந்நிலையில் இன்று (ஜூலை 24) எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சோதனையின் போது எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்களின் நகலை வழக்கறிஞர்கள் மூலம் கேட்டுப் பெற்றிருக்கிறோம். பணம் எடுத்திருக்கிறார்கள். அதற்கான கணக்கு இருக்கிறது. இதற்குக் காவல் துறையினர் சம்மன் கொடுக்கும்போது, உரியப் பதிலைத் தெரிவிப்போம். எனது வங்கிக் கணக்கு முடக்கப்படவில்லை.

இந்த சோதனை என்பது, பொய் வழக்குகளைப் போட்டு திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையைத் துவங்கி உள்ளதைக் காட்டுகிறது. மிரட்டல் மூலம் கரூரில் கட்சியின் செயல்பாட்டைத் தடுக்கலாம் என நினைக்கின்றனர்.

தேர்தலுக்குப் பிறகு, கூட்டுறவுச் சங்கம், உள்ளாட்சிகளில் இருக்கக் கூடிய நிர்வாகிகளை மிரட்டி, தொழில் சம்பந்தமாகத் தொல்லைகளைக் கொடுத்து கட்சி மாற்றம் செய்து வருகின்றனர். அரசு பதவிகளில் இருப்பவர்களை இடமாற்றம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

இந்த சோதனை எதிர்பார்த்த ஒன்றுதான். சட்டப்படி இதனை எதிர்கொள்வோம். எனக்கு சென்னை, கரூரில் சொந்த வீடு கிடையாது. வாடகை வீட்டில் தான் இருக்கிறேன். ஆனால் 35 ஆண்டுகளாகத் தொழில் செய்து வருகிறேன். பத்திரிக்கை செய்திகள் மூலம் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது. பொய் பிரச்சாரம் செய்து கட்சிக்கு ஆள் சேர்க்கின்றனர்.

போக்குவரத்துத் துறையில் அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகளை வேண்டும் என்றே திட்டமிட்டு இடமாற்றம் செய்து வருகின்றனர். எல்லா துறைகளிலும் இது போன்று நடந்து வருகிறது” என்றார்.

மேலும் அவர், “கொரோனா முதல் அலையின் போது இறப்பு விகிதம் குறைவாக இருந்தது, இரண்டாம் அலையில் உயிரிழப்பு அதிகமாக இருக்கிறது. கொரோனா தடுப்பூசி போடுவதிலும் அரசியல் செய்கின்றனர். 250 டோக்கன் வழங்கப்படும் என்று சொன்னால், 100 டோக்கன் தான் கொடுக்கிறார்கள். 150 டோக்கனை திமுகவினர் வாங்கி வைத்துக்கொண்டு அவர்களுக்கு வேண்டியவர்களுக்குக் கொடுக்கின்றனர். இதுபோன்று ரேஷன் கடைகளிலும் திமுகவுக்குத்தான் முதலில் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்” என்று குற்றம்சாட்டினார்.

-பிரியா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

சனி 24 ஜூலை 2021