மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஜூலை 2021

நாங்கள் திருடர்களா?: நிதியமைச்சருக்கு விவசாயிகள் கண்டனம்!

நாங்கள் திருடர்களா?: நிதியமைச்சருக்கு விவசாயிகள் கண்டனம்!

மக்களுக்கு அடிப்படைத் தேவையாக இருக்கும் தண்ணீர் பிரச்சினை மட்டும் முடிந்த பாடில்லை. குழாயடி தொடங்கி முல்லைப் பெரியாறு, மேகதாது அணை என நீர் பிரச்சினை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

முல்லைப் பெரியாறு ஆற்றுப் பகுதியில் வசிக்கும் விவசாயிகள் அந்த பகுதியில் போர் அல்லது கிணறு அமைத்து மின் இணைப்பை வாங்கி பம்ப்செட் மூலம் தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில், தண்ணீர் திருடப்படுவதாகக் கூறி முல்லைப் பெரியாறு அணை பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது விவசாயிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை 8ஆம் தேதி, முல்லைப் பெரியாறு லோயா் கேம்ப் பகுதியிலிருந்து மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகா், தேனி ஆட்சியர் முரளிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “பெரியாறு அணையிலிருந்து வரக்கூடிய நீர் 2,19,000 ஏக்கர் ஆயக்கட்டு பகுதிக்கு முறைப்படி வழங்கப்பட வேண்டும். இது மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு உரிமையானது. இதிலும் குறிப்பாகக் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி மற்றும் மதுரையில் சில பகுதிகளுக்கு இரண்டு போகத்துக்குச் சொந்தமானது.

15 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக இந்த ஆண்டு ஜூன் 1ஆம் தேதி வைகையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

5 ஆண்டுகளுக்கு முன்பே முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வைகைக்கு வரும் நீர் திருடப்படுவது குறித்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு எடுத்துச் சென்றேன். எதிர்க்கட்சி உறுப்பினராக அவருக்கு எழுதிய கடிதத்தில், “இந்த பகுதியிலிருந்து முறைகேடாக தண்ணீர் எடுக்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகள் அல்லாமல், தொழில் ரீதியாக (industrial strength) 10ஹெச்பி முதல் 20 ஹெச்பி (குதிரை வேகம்) திறன் கொண்ட மோட்டரை பயன்படுத்தி சட்டவிரோதமாகத் தண்ணீர் எடுக்கின்றனர்.

பட்டா இடங்களிலும், பட்டா இல்லாத அரசு மற்றும் வனத்துறை இடங்களிலும் ஆக்கிரமிப்பு நிலங்களுக்காக இந்தத் தண்ணீரை எடுக்கின்றனர். இதனால் ஆயக்கட்டுக்கு தண்ணீரைப் பெற முடியாமல் பல விவசாயிகள் விவசாயத் தொழிலையே விட்டுவிடுகின்றனர். வன விலங்குகளுக்கு இடையில் மோதல் ஏற்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தேன்.

அப்போது, தேனி மாவட்டத்தில் சோதனை முயற்சியாக ஆற்றின் இரு கரைகளிலும் சோதனை நடத்தி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன்மூலம் வைகை அணைக்கு வந்து சேரும் நீரின் அளவு ஒரே நாளில் 160கன அடியாக அதிகரித்தது. ஆனால், ஜெயலலிதா மறைந்த பின்னர் நிலைமை மேலும் மோசமடைந்தது. தண்ணீர் திருட்டு மீண்டும் அதிகரித்தது.

தற்போது ஆட்சி மாறியவுடன் முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் சென்றேன். அவர், இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்றார்.

எனவே, இவ்வளவு நாள் நடந்து வந்த தவற்றை, பொதுப்பணித் துறை, மின்சாரத் துறையினருடன் இணைந்து யார் யார் செய்கிறார்கள், எந்த அளவுக்குத் தண்ணீர் திருடப்பட்டுள்ளது என ஆய்வு செய்தனர்.

இதில், முல்லைப் பெரியாறு பாசனப் பகுதியில் 527 இடங்களில் தண்ணீர் திருட்டு நடைபெறுவது கண்டறியப்பட்டது. ஆற்றிலிருந்தும் அதை ஒட்டிய பகுதிகளில், போடக் கூடாத இடங்களில் போர் போட்டும் தண்ணீர் திருடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் அதிவேக மின் மோட்டார்களைப் பயன்படுத்தி தண்ணீர் திருடப்பட்டதால், மின் துறைக்கு நாளொன்றுக்கு ரூ.30 லட்சம் வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற சமுதாய துரோகத்தை எங்கேயும் பார்த்திருக்க முடியாது. அப்போது யார் ஆட்சி நடந்தது, அந்த மாவட்டம் யார் பொறுப்பிலிருந்தது என்று அனைவருக்கும் தெரியும். இதில், பல அதிகாரிகள் கைகோர்த்து வேலை செய்திருக்க வேண்டும். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தித் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

நிதியமைச்சர் இவ்வாறு கூறியிருந்த நிலையில், தமிழ்நாடு மின்வாரிய விஜிலென்ஸ் டிஜிபி ரவி தலைமையில் 13 குழுக்கள் தேனி மாவட்டத்தில் ஜூலை 19ஆம் தேதி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். வைகை அணை முதல் லோயர்கேம்ப் வரை முல்லைப் பெரியாற்றின் கரை வழியே ரோந்து சென்று ஆய்வு செய்தனர். இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதற்கு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் அழுத்தம் தான் காரணம் என்று கம்பம் பள்ளத்தாக்கு விவசாய சங்கத்தினர், தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு கடந்த ஜூலை 22ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, உழவர் கருத்துக் கேட்புக் கூட்டத்துக்காக வந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை, விவசாயச் சங்கத் தலைவர் நாராயணன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது, “விவசாயிகளாகிய நாங்கள் உணவு உற்பத்திக்காகத்தான் தண்ணீரை எடுக்கிறோமே தவிர வேறு எந்த பயன்பாட்டுக்கும் இல்லை. எங்களுக்கு நிதியமைச்சர் திருடர்கள் பட்டம் கொடுத்துள்ளார். இது எங்களை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது” என்று அமைச்சரிடம் தெரிவித்தனர். இந்த விவகாரத்தை முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் சென்று விவசாயிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது, தென் மாவட்ட விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டம் நடத்த விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.

-பிரியா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

சனி 24 ஜூலை 2021