மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 23 ஜூலை 2021

அதிமுக ஆர்பாட்டம்: பாஜகவுக்கு செக்!

அதிமுக ஆர்பாட்டம்:  பாஜகவுக்கு செக்!

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாமதம் செய்து வருவதாக கூறி திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வரும் ஜூலை 27 ஆம் தேதி புதன் கிழமை காலை 10 மணிக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி ஆகிய பகுதிகளில் தங்கள் வீடுகளின் முன்னே பதாகைகளை ஏந்தி, கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்பி தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலாய் ஒலிக்க வேண்டும் என்று இன்று (ஜூலை 22) ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோரின் கூட்டறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.

அந்த அறிக்கையில், “ நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தேர்தல் நேரத்தில் கூறிவிட்டு இப்போது நீட் தேர்வு அறிவிக்கப்பட்டதும் நீட் தேர்வுக்கு தயாராகும்படி மாணவர்களுக்கு உத்தரவிடுகிறது திமுக அரசு. தங்களுக்கு மட்டுமே தெரிந்த வல்லமையையும் சூத்திரத்தையும் பயன்படுத்தி நீட் தேர்வை திமுக அரசு ரத்து செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழ்நாட்டு மக்களிடம் இருக்கிறது. அதை நிறைவேற்றும் வகையில் திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

மக்களின் அடிப்படைத் தேவைக்கான பொருட்களின் விலையும்,கட்டுமானப் பொருட்களின் விலையும் உயந்துவிட்டது. ஆட்சி அமைந்தவுடன் பெட்ரோல் விலையை 5 ம், டீசல் விலையை 4ம் குறைத்து, சமைய எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தருவோம் என்று சொன்ன திமுக இப்போது அதுபற்றி வாய் திறக்காமல் இருக்கிறது.

விவசாயிகளுக்கு விதை, உரம், இடுபொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்திடவும், தடையில்லா மின்சாரம் கிடைத்திடவும் திமுக அரசு இதுவரை எதையும் செய்யவில்லை. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, முளைத்து வீணாகிப் போகிறது. இதைத் தடுக்க நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளும், லஞ்ச லாவண்யங்களும் இல்லாமல் உடனடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும்.

தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணையக் கட்டியிருக்கிறது. கர்நாடகத்தில் காவிரியில் மேகதாட்டு என்ற இடத்தில் பெரும் அணையைக் கட்ட அம்மாநில முயற்சித்து வருகிறது.

இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் நிலையில் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடும் மலிவான ஆயுதத்தைக் கையிலெடுத்திருக்கிறது திமுக அரசு” என்று குற்றம் சாட்டி இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள் ஓ.பன்னீரும், எடப்பாடியும்.

இந்த அறிவிப்பின் பின்னணி பற்றி அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.

அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஜூலை 1 காலை 11 மணி வாக்கில் சென்னையிலுள்ள அதிமுக தலைமைக் கழகத்துக்கு சென்றார். கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் இல்லாமலேயே சென்னையில் இருக்கும் மாவட்டச் செயலாளர்களையும், மாநில நிர்வாகிகளையும் கூப்பிட்டு ஒருமணி நேரம் ஆலோசனை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. சென்னையில் இருக்கும் மாசெக்களான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வெங்கடேஷ் பாபு, ஆர்.கே.ராஜேஷ், , ஆதிராஜாராம், வேளச்சேரி அசோக், தி.நகர் சத்யா, விருகை ரவி, பாலகங்கா, கே.பி.கந்தன் உள்ளிட்டோருடன் நடப்பு நிலவரம் குறித்து விரிவாகவே பேசியிருக்கிறார் எடப்பாடி.

நிர்வாகிகள் சிலர் எடப்பாடியிடம், ’திமுக ஆட்சியை பற்றி வெறும் அறிக்கைதான் நாம விட்டுக்கிட்டிருக்கோம். பாருங்க தேமுதிக கூட போராட்டம் அறிவிச்சுட்டாங்க. நாமளும் நிறைய ஆர்பாட்டம் போராட்டம் பண்ணனும்”என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதற்கு அவர், “நீங்க சொல்றது ரைட்டுதான். திமுக காரன் ஆட்சியில்லாமல் பத்து வருஷம் கூட பொறுமையா இருக்கான். ஆனா நம்மளால ஒரு மாசம் கூட பொறுமையா இருக்க முடியல. மொதல்ல ஒரு ஆறுமாசம் அமைதியா இருப்போம்”என்று சொல்லியிருந்தார்.

இதை நாம் மின்னம்பலத்தில் ஜூலை 2 ஆம் தேதி சசிகலா-திமுக ஆட்சி: மனம் திறந்த எடப்பாடி என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.

ஆறு மாதம் பொறுமை காக்கச் சொன்னவர், அதே மாதத்தில் ஆர்பாட்ட முடிவெடுக்கக் காரணம் என்ன?

“தமிழக பாஜக தலைவராக கொங்கு பகுதியைச் சேர்ந்த அண்ணாமலையை நியமித்திருக்கிறது அக்கட்சியின் தேசியத் தலைமை. இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு கோவையில் இருந்து சென்னை வரை கட்சி அலுவலகத்துக்கு பொறுப்பேற்க வந்ததையே சுற்றுப் பயணம் போல கொரோனா விதிமுறைகளை எல்லாம் மீறி சாலை மார்க்கமாக வந்தார் அண்ணாமலை. அதை திமுக அரசும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

கோவை முதல் சென்னை வரையிலான அண்ணாமலையின் பயணத்தில் பெரும்பகுதி கொங்கு மண்டலத்தில்தான் வருகிறது. எனவே அண்ணாமலையை தலைவராக நியமித்து கொங்கு மண்டலத்தில் பாஜகவை வலுப்படுத்த பாஜக துல்லியமாகத் திட்டமிடுகிறது. அதிமுகவை சிதைத்து அதன் வாக்கு வங்கியை மெல்ல மெல்ல பாஜக பக்கம் திருப்பும் திட்டத்தோடுதான் அண்ணாமலையை தலைவராக நியமித்துள்ளார்கள். மேலும் அண்ணாமலை தலைவராக பதவியேற்பு விழாவில் பேசிய பலரும், இனி தமிழகத்தில் திமுகவுக்கு எதிர்கட்சி என்றால் அது பாஜகதான் என்று பேசினார்கள். அண்ணாமலையும் அவ்வாறே பேசினார். ஆனால் இதற்கு அதிமுக தரப்பில் அதிகாரபூர்வ பதில் ஏதும் சூடாக தரப்படவில்லை.

இந்தப் பின்னணியில்தான் இனியும் அதிமுக போராட்டம் நடத்தாமல் இருந்தால் எதிர்க்கட்சி என்ற பெயரை பாஜக தட்டிவிடும் என்று அதிமுகவின் சீனியர்கள் சிலர் எச்சரித்ததை அடுத்துதான் இந்த ஆர்பாட்டத்துக்கு அதிமுக தயாராகியுள்ளது. அதன் அடிப்படையிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திமுக அரசு அமைந்து ஆகஸ்டு 7 அன்றுதான் மூன்று மாதங்கள் நிறைவுபெறுகின்றன. முதலில் ஆறு மாதம் பொறுமைகாக்க திட்டமிட்ட எடப்பாடி பாஜகவின் பாய்ச்சலால்தான் தன்னை நிரூபிக்க வேண்டிய நிலையில் இந்த ஆர்பாட்டத்தை அறிவித்திருக்கிறார். திமுக அரசுக்கு எதிரான ஆர்பாட்டமாக இது அறிவிக்கப்பட்டிருந்தாலும் பாஜகவுக்க் செக் வைப்பதற்கான அரசியலும் இதில் இருக்கிறது” என்கிறார்கள் அதிமுக கொங்குப் புள்ளிகள்..

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வெள்ளி 23 ஜூலை 2021