மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 23 ஜூலை 2021

400 பேரின் வாழ்த்தே பெரிது: அமைச்சர் மா.சு

400 பேரின் வாழ்த்தே பெரிது: அமைச்சர் மா.சு

குட்கா, பான்பராக் போன்ற பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கும்போது, நான்கு பேர் சபித்தாலும், 400 பேர் பாராட்டுவார்கள், அந்தப் பாராட்டே பெரிது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் குட்கா, பான் பராக் உள்ளிட்ட போதை பொருட்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும், அதன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கடந்த சில வாரத்திற்கு முன்பு இளைஞர்கள் சேர்ந்து போதை ஊசி போட்டுக் கொள்ளும் வீடியோ ஒன்று வைரலானது. போதை பொருள் பழக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெற்ற மாநில அளவிலான புகையிலை தடுப்பு நடவடிக்கைகளுக்கான கூட்டம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று (ஜூலை 22) நடைபெற்றது.

இதில் பேசிய அமைச்சர், "தமிழ்நாட்டில் புகையிலை கிடைப்பது உண்மைதான். அதை மறுக்கவில்லை. கடந்த இரண்டு மாதங்களில் குட்கா விற்பனையை தடுப்பதில் நாம் கவனம் செலுத்தவில்லை என்பது உண்மைதான். கொரோனா தடுப்புப் பணியில்தான் அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இனி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தமிழ்நாட்டிலுள்ள எந்த கடைகளிலும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கைகள் எடுக்கப்படும். முதன்முறை நோட்டீஸ், இரண்டாவது முறை அபராதம், அடுத்ததாக சீல் வைப்பு என தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஆயிரம், இரண்டாயிரம் கடைகளுக்குச் சீல் வைத்தோம் என்பதை வெளியில் கூறினால், அவர்கள் குட்கா பொருட்களை விற்பனை செய்ய மாட்டார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் 10, 20 நிறுவனங்களுக்குச் சீல் வைத்தால் இரண்டு மாதத்திற்குள் தமிழ்நாட்டில் குட்கா, பான்பராக் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை நடைபெறாது.

ஆட்சிக்கு நல்ல பெயர் வருகிறதா, கெட்ட பெயர் வருகிறதா என்பது முக்கியமல்ல. குட்காவை ஒழிப்பதால் நான்கு பேர் சபித்தாலும், 400 பேர் வாழ்த்துவார்கள். 400 பேரின் வாழ்த்தே பெரிது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "மாணவர்கள் மத்தியில்தான் போதை பொருள் பழக்கம் அதிகமாக இருப்பதால், மாணவர்கள் பயன்படுத்தும் நோட்டு புத்தகங்களில் புகையிலை தொடர்பான நிறுவனங்களின் பெயரை தவிர்த்து விழிப்புணர்வு வாசகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

குட்கா, பான் பராக் விற்பனையை முழுமையாக ஒழிக்கும் மாவட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் கையால் சான்றிதழ் வழங்கப்படும்.

புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மட்டுமல்லாமல் எங்கிருந்து வருகிறது என தெரியும் பட்சத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். வியாபாரிகளும் குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் குட்கா உள்ளிட்ட போதை பொருள்கள் பயன்பாட்டில் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். தமிழ்நாடு புகையிலை இல்லா மாநிலமாக மாற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவது அவசியம். கடந்த ஆண்டுகளில் முறைகேடாக விற்பனை செய்த 30 கோடி ரூபாய் மதிப்புள்ள குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்று கூறினார்.

-வினிதா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

வெள்ளி 23 ஜூலை 2021