“எல்லாம் சரியாக உள்ளது”: விஜயபாஸ்கரின் வழக்கறிஞர்!

politics

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களின் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடந்து வருகிறது.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் பல்வேறு ஊழல்கள் நடந்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த ஆட்சியில் வாகனங்களுக்கான ஜிபிஎஸ் கருவிகள் விற்க 118 நிறுவனங்கள் இருக்கும்போது, 8 நிறுவனங்களிடம் மட்டும் அவற்றை வாங்குமாறு போக்குவரத்துத் துறை பிறப்பித்த உத்தரவுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

இதனிடையே திமுக ஆட்சிக்கு வந்தால் முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, முதல் நடவடிக்கையாக இன்று (ஜூலை 22) முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடந்து வருகிறது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு மற்றும் ரெயின்போ டையிங், விஸ்வா எக்ஸ்போர்ட், எம்.சேண்ட் நிறுவனம் மற்றும் அவரது சகோதரர் சேகர் வீடு என மொத்தம் 20 இடங்களிலும், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சாய் கிருபா அப்பார்ட்மெண்ட்டில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

விஜயபாஸ்கரின் உதவியாளர் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளிலும் சோதனை தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சோதனை குறித்து விஜயபாஸ்கரின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “லஞ்ச ஒழிப்புத் துறை அவர்களது நடைமுறையின் படி, இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அவர்களிடத்தில் கேட்டால் எங்களைச் சோதனை செய்யச் சொன்னார்கள் என்றனர். இதுபோன்ற சோதனைகள் எப்படி வரும் என்பது அனைவருக்கும் தெரியும். எங்களிடம் அனைத்து கணக்கு தரவுகளும் உள்ளன. விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரது சொத்து விவரங்கள் குறித்துக் கேட்டனர். விஜயபாஸ்கரும் அதற்கு ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கிறார். எல்லாம் சரியாக உள்ளது. சோதனைக்கு ஒத்துழைப்புத் தருகிறோம்” என்றார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *