மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 22 ஜூலை 2021

சிறையில் அமைச்சரிடம் கோரிக்கை வைத்த நளினி

சிறையில் அமைச்சரிடம் கோரிக்கை வைத்த நளினி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினியும் முருகனும் நீண்ட நாள் விடுப்பு வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்றால், அதைச் செயல்படுத்த அரசு தயாராக உள்ளது என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.

வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறை, பெண்கள் தனிச்சிறை ஆகியவற்றை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று (ஜூலை 21) ஆய்வு மேற்கொண்டார்.

அங்குள்ள கைதிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர், ஆண்கள் சிறையில் உள்ள சமையல் கூடம், கைதிகள் அறைகள், கைதிகளுக்கான தொழில் வாய்ப்பு, சிறை நடைமுறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

பின்னர் பெண்கள் தனிச்சிறையில் ஆய்வுக்குச் சென்ற அமைச்சர் ரகுபதி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் நளினியைச் சந்தித்து பேசி, அவரின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, “ஆண்கள் மத்திய சிறையில் 742 பேரும், பெண்கள் சிறையில் 97 பேரும் உள்ளனர். சிறையில் உள்ள அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தேன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள முருகன், நளினி, சாந்தன் உள்பட அனைத்துக் கைதிகளையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தேன். முருகன், நளினி இருவரும் தங்களுக்கு நீண்ட நாள் விடுப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். எங்களால் 30 நாள்களுக்கு மட்டும்தான் விடுப்பு வழங்க முடியும். அதைத் தாண்டி கூடுதலாக மேலும் 30 நாள்கள் வழங்க முடியும். ஆனால், நீண்ட விடுப்புக்கு அவர்கள் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்றால், தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, அதை நடைமுறைப்படுத்த தயாராக உள்ளது.

வேலூர் சிறையில் ஷூ, பெல்ட், மருத்துமனைக்குத் தேவையான பேன்டேஜ் போன்றவை தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டு, கைதிகள் வேலை செய்து மாதம் ரூ.6,000 வரை சம்பாதிக்கின்றனர். இந்தத் தொழிற்கூடங்கள் விரிவாக்கம் செய்யப்படும். பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்களில் தலைமை நீதிமன்றங்கள் அமைப்பது குறித்து, உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படியே செயல்பட முடியும். இது குறித்து உயர் நீதிமன்றத்திலிருந்து பரிந்துரைகள் வந்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏற்கனவே வேலூர் சிறைக் கைதிகளால் ஒரு பெட்ரோல் பங்க் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மேலும் ஆறு இடங்களில் கைதிகளால் நடத்தப்படும், பெட்ரோல் பங்க் விரைவில் திறக்கப்படும். கைதிகள் அனைவருக்கும் தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். வேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்ப நாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். கிளை சிறைகளைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருள்கள் கொண்டு செல்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் சிறையிலிருந்து பரோலில் சென்ற கைதி தற்கொலை செய்துகொண்டது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. சிறைக் காவலர்கள் மிரட்டியதாகக் கூறுவது உண்மையல்ல. அவர் ஏற்கனவே ஒன்பது முறை பரோலில் சென்று வந்துள்ளார். ஆக, அவரை மிரட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை” என்று கூறினார்.

-வினிதா

அமித் ஷாவிடம் ஒகே சொன்ன ஓபிஎஸ்- அவகாசம் கேட்ட இபிஎஸ்

6 நிமிட வாசிப்பு

அமித் ஷாவிடம்  ஒகே சொன்ன ஓபிஎஸ்- அவகாசம் கேட்ட இபிஎஸ்

சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்: அதிமுகவில் திடீர் திருப்பம்! ...

2 நிமிட வாசிப்பு

சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்: அதிமுகவில் திடீர் திருப்பம்!

டிஜிபிக்கு எதிராக ஸ்டாலினுக்குக் காவலர்கள் எழுதிய கடிதம்!

7 நிமிட வாசிப்பு

டிஜிபிக்கு எதிராக ஸ்டாலினுக்குக் காவலர்கள் எழுதிய கடிதம்!

வியாழன் 22 ஜூலை 2021