மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 21 ஜூலை 2021

கேமரா டெக்னிக் அல்ல ஆக்டிங் டெக்னிக்: கதாபாத்திரங்களுக்கு உயிர் ஊட்டிய சிவாஜி

கேமரா டெக்னிக் அல்ல ஆக்டிங் டெக்னிக்: கதாபாத்திரங்களுக்கு உயிர் ஊட்டிய சிவாஜி

ஜூலை 21 - சிவாஜி கணேசன் நினைவு நாள் சிறப்புப் பார்வை

இந்திய சினிமாவில் தன் நடிப்பு ஆளுமையால் இன்றுவரை மற்ற நடிகர்களால் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்திலிருந்து, மறைந்தவர் நடிகர்திலகம் சிவாஜி கணேசன். இவரின் சமகால நடிகரான இந்தி நடிகர் திலீப்குமார், சிவாஜி கணேசன் நடித்த ஒரு படத்தை இந்தியில் மறு ஆக்கம் செய்ய முயற்சி செய்த போது, படத்தைப் பார்த்த திலீப்குமார் சிவாஜியைப் போன்று தன்னால் நடிக்க இயலாது என்பதை உணர்ந்து அந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். சிவாஜி கணேசன் நினைவுநாள் இன்று (ஜூலை 21) அவரது நடிப்பு ஆளுமையை நினைவு கூறும் வகையில் இந்த பதிவு வெளியிடப்படுகிறது.

திரைப்படம் என்பது பல்வேறு திறமையாளர்களின் கூட்டு முயற்சி, அத்தகைய முயற்சியில், சம்பந்தப்பட்ட அனைவரும் தங்களின் முழுமையான தொழில் திறமை, உழைப்பை அர்ப்பணிப்போடு அளிக்கும்போது சிறந்த திரைப்படம் உருவாகிறது.

1973ல் வெளிவந்து வெற்றிபெற்ற படம் ’கௌரவம்’. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும், வசனங்களும் நகரம் முதல் கிராமங்கள் வரை விசேச வீடுகளில் கட்டப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கியில் மக்களைச் சென்றடைந்தது

வியட்நாம் வீடு சுந்தரம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய கௌரவம் திரைப்படம் சிவாஜி கணேசனின் நடிப்பு ஆளுமையைப் பதிவு செய்த படங்களில் ஒன்று. ஒரு படத்தில் எத்தனை வேடங்களில் நடித்தாலும் தன்முகபாவனை, உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பால் வித்தியாசம் காட்டும் வித்தைக்கு சொந்தக்காரர் சிவாஜி கணேசன்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கண்ணதாசனின் பாடல்கள் பிரமிக்க வைத்தன. அதில் ஒரு பாடல் நடிப்பு, இசை மற்றும் அனைத்து வகையிலும் சினிமா வரலாற்றில் எதிர்கால திரைத்துறை கலைஞர்களுக்கு தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வழிகாட்டும் பாடமாக அமைந்துவிட்டது.

தனது படிப்பு, உழைப்பு மற்றும் அறிவால் நீதிமன்றமே வியந்து பார்க்கும் வழக்கறிஞராக வலம் வரும் சிவாஜியின் ‘பாரிஸ்டர் ரஜினிகாந்த்’ என்ற கதாபாத்திரத்தை எதிர்த்து அவரது வளர்ப்பு மகனான வழக்கறிஞர் கண்ணன் என்ற இன்னொரு சிவாஜி கதாபாத்திரம் எதிர் வழக்காட முடிவு செய்கின்றது. இதனைக் கண்டு ஆத்திரமடைந்த பாரிஸ்டர் ரஜினிகாந்த் தன் வளர்ப்பு மகனை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லிவிடுகிறார். அதனால் ஏற்படும்

ஆழ்மன வேதனையின் வெளிப்பாடாக ‘பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்துப் பார்த்த கிளி’ என்ற பாடலை பாடுகிறார். பாடல் காட்சிக்கு முதல் காட்சியாகத் தந்தையான பாரிஸ்டர் ரஜினிகாந்த் வளர்ப்பு மகனுடன் கோபமாக விவாதித்து வீட்டை விட்டு வெளியேறச் சொல்கிறார். மகனும் மறுப்பு ஏதும் சொல்லாமல் வெளியேறுகிறார்.

ஏற்கனவே கோபத்தில் ஒரு பாட்டில் மதுவைக் குடிக்க ஆரம்பிக்கும் தந்தை, கையில் மதுக் கோப்பையுடன் மனைவியிடம் பேசி மகன் வெளியேறிவிட்டதை அறிந்து வருத்தத்துடன் "கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து அது ஆத்த விட்டே பறந்துடுத்து" என்ற வசனத்தைக் கூறிவிட்டுப் பாலூட்டி வளர்த்த கிளி பாடலைப் பாடுகிறார்.

தன் திறமையால் யாரிடமும் வளைந்து கொடுக்காமல் ‘தான்’ என்ற அகங்காரத்தை வளர்த்துக் கொண்ட கதாபாத்திரமான பாரிஸ்டர் ரஜினிகாந்த்தின் பாசப் போராட்டம் டி.எம்.சௌந்தர ராஜனின் நவரசம் தெறிக்கும் குரலில் 'பாலூட்டி வளர்த்த கிளி...' என்ற பாடலாக வெடிக்கிறது.

கம்பீரத்தின் அடையாளமான தன் கணவனை என்றுமே இந்த நிலையில் பார்த்திராததால் கையறு நிலையில் கண்ணீர்க் கடலாகும் பண்டரிபாயிடம். சிவாஜி ஒரு குழந்தை போல் தன மனக்குமுறலைக் கண்ணதாசனின் வரிகளில் வெளிப்படுத்துகின்றார்.

பாடலின் தொடக்கத்தில் ஆக்ரோஷத்தோடு மதுவை அருந்தும் சிவாஜி பாடலின் மூன்று சரணங்களிலும் மது போதையால் ஏற்படும் உடல் தளர்ச்சியை மெல்ல மெல்ல மிக நுணுக்கமாக வெளிப்படுத்துகிறார். கடைசி சரணம் முடிந்து மனைவியின் மடியில் தலைவைத்து கால் நீட்டிப் படுக்கிறார். பாடலின் தாளம் தரும் வேகம் பிசகாமல் தன் உடலின் அனைத்து அங்கங்களிலும் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் சிவாஜி.

பொதுவாக டி.எம்.எஸ் குரலில் பதிவு செய்யப்பட்ட பாடல்களுக்கு நடிக்கும்போது சிவாஜி வாயசைத்துப் பாடுவது வழக்கம். ஆனால் சில காரணங்களால் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடி சிவாஜி வாயசைத்து படமாக்கப்பட்ட இந்தப் பாடல் காட்சியில் எம்.எஸ்.விக்கு திருப்தியில்லாததால், மீண்டும் பாடல் காட்சியைத் திரையில் ஓடவிட்டு அதற்கேற்ற பாவங்களுடன் டி.எம்.சௌந்தர்ராஜனைப் பாட வைத்துப் பதிவு செய்தார்.

சிவாஜி என்ற வரலாற்று திரை நாயகனின் மிக நுணுக்கமான நடிப்பிற்கேற்றபடி அந்தப் பாடலைப் பாடிக் கொடுத்து பாடல் காட்சிகளில் சிவாஜியின் ஆன்மா தனது குரல் தான் என்று நிரூபித்த படம் கௌரவம்.

இந்த படத்தின் வெற்றி காரணமாக இந்தியில் படத்தைத் தயாரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்தி மறுஆக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு படத்தைப் பார்த்தார் திலீப்குமார்.

படம் பார்த்து முடித்ததும் தமிழில் ஒளிப்பதிவு செய்தவரே இந்தியிலும் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அந்த ஒளிப்பதிவாளர் வின்சென்ட் மாஸ்டர். (மாஸ்டர் என்கிற அடைமொழியை திரையுலகம் கொடுத்தது பின்னால்தான்). திலீப் குமாரே வின்சென்டை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறார்

உங்களைச் சந்திக்க விரும்புகிறேன்.. நீங்கள் மும்பை வந்தாலும் சரி.. அல்லது நான் சென்னை வருகிறேன்.. அதுவும் என்னுடைய ஊர்தானே?’ என்கிறார். வின்சென்ட் மாஸ்டர் பம்பாய் சென்று நடிகர் திலீப்குமாரை சந்தித்துப் பேசுகிறார்.

அப்போது திலீப்குமார் மிகவும் ஆர்வமாக, பாரிஸ்டர் சிவாஜி, இளவயது சிவாஜியை விடச் சற்று உயரமாகத் தெரிகிறார். இதை உங்களுடைய ஒளிப்பதிவில் எப்படி சாத்தியமாக்கினீர்கள்? என்று கேட்கிறார். அதற்கு வின்சென்ட் இதில் கேமரா டெக்னிக் எதுவும் இல்லை. வயதான கேரக்டருக்கான மேக்கப்பை போடும்போதே அந்த கதாபாத்திரத்திற்கான கம்பீரம், அரோகன்ஸ், உடல் மொழி எல்லாமே இயல்பாக வந்துவிடும், தானாகவே நெஞ்சுப்பகுதி நிமிர்ந்து கொள்ளும். அதனால் தான் அவர் உயரமாகத் தெரிகிறார்.

அதேபோல், கண்ணன் கதாபாத்திரத்துக்கான மேக்கப்பை போட்டுக்கொள்ளும்போதே அந்த கேரக்டருக்குத் தேவையானபடி அந்த பணிவு, கூச்சம் எல்லாமே அவரிடம் ஒட்டிக்கொள்ளும். படப்பிடிப்பு இடைவேளையில் கூட நம்மிடம் கண்ணன் மாதிரியே பேசிக்கொண்டிருப்பார்.. இது அவர் பின்பற்றிவரும் ஆக்டிங் டெக்னிக் என்று இயல்பாகக் கூறுகிறார் வின்சென்ட்

அதைக் கேட்டுப் பிரமித்துப் போன திலீப் குமார். அடுத்த ஒரு நிமிடம் ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தவர், மிஸ்டர் வின்சென்ட். அந்த உயர வித்தியாசத்துக்கு நிச்சயமாக நீங்கள் கேமரா டெக்னிக்கைத்தான் பயன்படுத்தியிருப்பீர்கள் என்று நினைத்திருந்தேன்.

நடிப்பிலேயே அந்த வித்தியாசத்தைக் கொண்டவராக நடிக்கச் சிவாஜி கணேசன் ஒருவரால் மட்டும்தான் முடியும். இந்தி மறுஆக்கம் குறித்து ஒருமுறை நான் யோசிக்க வேண்டும் என்று சொல்லி விடை பெற்றுக்கொண்டார் திலீப்குமார். வின்சென்ட் எதிர்பார்த்தது போலவே.. திலீப் குமார் ‘கௌரவம்,’ படத்தின் இந்தி மறு ஆக்கத்தில் நடிப்பதைத் தவிர்த்துவிட்டார் (வின்சென்ட் மாஸ்டரின் பேட்டி ஒன்றிலிருந்து).

தொகுப்பு: இராமானுஜம்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 21 ஜூலை 2021