மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஜூலை 2021

சசிகலா- எடப்பாடி: அப்பலோவில் நடந்தது என்ன?

சசிகலா- எடப்பாடி: அப்பலோவில் நடந்தது என்ன?

அதிமுகவின் அவைத் தலைவரும், தேர்தல் ஆணையத்தால் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் ஒப்படைக்கப்பட்டவருமான மதுசூதனன், சிறுநீரகங்கள் பாதிப்பால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தர்மயுத்தம் தொடங்கியபோது ஓ.பன்னீருடன் இருந்த மதுசூதனனை நேற்று (ஜூலை 19) இரவே ஓ.பன்னீர் செல்வம் அப்பல்லோ சென்று உடல் நலம் பற்றி விசாரித்துவிட்டுச் சென்றார். இதற்கிடையே சசிகலா இன்று (ஜூன் 20) காலை அப்பல்லோ சென்று மதுசூதனனின் உடல் நலம் விசாரிக்கச் செல்வதாக நேற்று இரவே தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்தத் தகவலை அறிந்துகொண்ட முன்னாள் முதல்வரும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11.45மணிக்கே அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கே சென்று மதுசூதனனின் உடல் நலம் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். இந்தத் தகவல் சசிகலாவுக்கு சென்றதும் திட்டமிட்ட நேரத்தை விட சில நிமிடங்கள் தாமதமாகவே தன் வீட்டில் இருந்து அப்பல்லோவுக்குப் புறப்பட்டார். ஆனால் அப்பல்லோ வாசலில் சசிகலாவின் ஆதரவாளர்கள் கூடிவிட்டார்கள்.

சசிகலாவும் வந்துகொண்டிருக்கிறார் என்று தகவல் அறிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி வெளியே வந்து செய்தியாளர்களை சந்திக்கத் திட்டமிட்டிருந்தவர் அதைத் தவிர்த்துவிட்டு சசிகலாவை நேருக்கு நேர் சந்திப்பதையும் தவிர்த்து அப்பல்லோவில் இருந்து புறப்பட்டுவிட்டார்.

அதன் பிறகே சசிகலா மருத்துவமனைக்கு அதிமுககொடி கட்டிய காரில் வந்து இறங்கினார். மதுசூதனனையும் அவரது குடும்பத்தினரையும் பார்த்து நலம் விசாரித்துவிட்டு சில நிமிடங்களில் புறப்பட்டார். அப்போது காரில் இருந்தபடியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் சசிகலா.

“1952ஆம் ஆண்டு மதுசூதனனுக்கு வயது 14. அந்த 14 வயதினிலேயே அவர் தலைவருக்காக வட சென்னையில் எம்.ஜி.ஆர். மன்றம் ஆரம்பித்தவர். தலைவர் மீது மிகவும் பற்று கொண்டவர். தலைவர் காலத்தில் எம்.எல்..சியாக இருந்தார். தலைவர் மறைவுக்குப் பின் அம்மாவின் ஆட்சியில் அமைச்சராக பணியாற்றியவர்.

எங்களுடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக குடும்பத்தின்மூத்த சகோதரர். அவர் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதை கேள்விப்பட்டு பார்த்துவிட்டுச் செல்கிறேன். அவர் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அவரது உறவினர்களிடம் விசாரித்துவிட்டு, அவரையும் பார்த்துவிட்டு வருகிறேன். நன்றி” என்று சொல்லிவிட்டு காரில் புறப்பட்டார் சசிகலா.

ஜெயலலிதா பயன்படுத்திய அதே காரில்தான் சசிகலாவும் இன்று அதிமுக கொடி கட்டிக் கொண்டு அப்பல்லோவுக்கு வந்து சென்றிருக்கிறார்.

இதையடுத்து சில நிமிடங்களில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “சசிகலா மருத்துவமனைக்கு சென்று மதுசூதனனை பார்ப்பதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்க முடியாது. ஆனால் அவர் அதிமுக கொடி கட்டிய காரில் வந்து சென்றது கண்டிக்கத் தக்கது. அதிமுகவுக்கும் அவருக்கும் தொடர்பே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

அலைபேசி வழியாக தொண்டர்களுடன், நிர்வாகிகளுடன் உரையாடல், சேனல்களுக்கு பேட்டி என்று கொஞ்சம் கொஞ்சமாக ஸ்டெப் எடுத்து வைத்து வரும் சசிகலா... தனது முதல் வெளியுலக பிரவேசமாக அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனனைப் பார்க்கச் சென்றிருக்கிறார். அங்கே, ‘எங்கள் அதிமுக’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

சசிகலாவின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு அச்சாரமிட்டிருக்கிறது இந்த அப்பல்லோ விசிட்.

-வேந்தன்

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

செவ்வாய் 20 ஜூலை 2021