மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஜூலை 2021

செங்கல்பட்டு ஆலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: திருச்சி சிவா

செங்கல்பட்டு ஆலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: திருச்சி சிவா

செங்கல்பட்டு மாவட்டத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள தடுப்பூசி தயாரிப்பு தொழிற்சாலையைப் பயன்படுத்திக்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரண்டாவது நாளாக இன்று (ஜூலை 20) நடைபெற்றது. அப்போது திருச்சி சிவா எம்.பி பேசுகையில், “மருத்துவர்கள், காவல்துறையினர், துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு முதலில் இங்கு வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் ஒன்றிய அரசு தோல்வியடைந்துவிட்டது. 2019ல் சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. ஜனவரி 11, 2020ல் உலக சுகாதார அமைப்பு 'இது உலகளாவிய நோய்த்தொற்று’ என்று அறிவித்தது.

ஆனால், இந்த அறிவிப்புக்குப் பிறகு மார்ச் 23, 2020 வரை நாடாளுமன்ற அலுவல் நடைபெற்றது. அப்போது, உலகம் முழுவதிலுமிருந்து இந்தியாவுக்கு விமானங்கள் இயக்கப்பட்டது, சந்தைகள் திறக்கப்பட்டிருந்தன, ரயில்கள் இயங்கின. இதனால் கொரோனா பரவியது. புலம்பெயர் தொழிலாளர்கள் உட்படப் பலர் பாதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா இரண்டாம் அலையால், மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்” என்று சுட்டிக்காட்டினார்.

மேலும்,

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்

என்ற திருக்குறளை கூறி, முதலில் என்ன நோய், அது எப்படி வந்தது, அதற்கான தீர்வு என்ன என்று ஆராய்ந்து அதனைச் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்த அவர்,

”கொரோனா என்பது கடுமையான சுவாச நோய் என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கு அடிப்படைத் தேவை ஆக்சிஜன் என்பதும் தெரியும். ஆனால் என்ன நடந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறையால், மக்கள் ஆக்சிஜன் தேவைக்கும், மருத்துவமனைகள் படுக்கைக்கும் தேடித் தேடி அலைந்தனர்.

அதுபோன்று தான் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடும். தடுப்பூசி உற்பத்திக்காக ஒன்றிய அரசு போதிய நடவடிக்கையை எடுக்கவில்லை. 700 கோடி முதலீட்டில் செங்கல்பட்டில் கட்டப்பட்ட தடுப்பூசி மையம் செயல்படாமல் உள்ளது. இந்த தடுப்பூசி உற்பத்தி ஆலையைக் குத்தகை அடிப்படையில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படியானால் இங்கு உடனடியாக தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

இங்குத் தடுப்பூசி உற்பத்தி செய்வதற்குத் தனியார் பங்குதாரரைத் தமிழ்நாடு அரசே அடையாளம் காணும். தனியார் உதவியுடன் செங்கல்பட்டில் விரைந்து தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும். ஒன்றிய அரசு நிதி உதவி செய்து மாநிலங்களே தடுப்பூசி உற்பத்தி செய்ய அனுமதி அளிக்க வேண்டும்” என்றார்.

மேலும், ”கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்துக்குக் குறைவாகத்தான் தடுப்பூசி ஒதுக்கப்படுகிறது. ஏன் இந்த பாகுபாடு. தமிழகத்துக்குத் தேவையான தடுப்பூசிகளை வழங்க வேண்டும்” என்றும் திருச்சி சிவா எம்.பி.கோரிக்கை விடுத்தார்.

அதுபோன்று, செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் தம்பிதுரையும் வலியுறுத்தினார்.

-பிரியா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

செவ்வாய் 20 ஜூலை 2021