xநாடாளுமன்றத்தில் எதிரொலித்த உளவு விவகாரம்!

politics

இந்தியாவில் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பிரதமர் மோடி தலைமையிலான அரசில் பணியாற்றும் இரு அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள், நீதிபதிகள் என பல்வேறு தரப்பினரும், இஸ்ரேலிய ஸ்பைவேர் பெகாசஸ் மூலம் அரசாங்கத்தால் உளவு பார்க்கப்பட்டதாக தி வயர் உள்ளிட்ட சர்வதேச இதழ்களில் செய்திகள் வெளியாகின.

இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட பலர் உளவு பார்க்கப்பட்டதாக பட்டியல்கள் வெளியான நிலையில், இந்த விவகாரம் இன்று (ஜூலை 20) நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது.

மழைக் காலக்கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று காலை 11 மணிக்கு அவை நடவடிக்கைகள் தொடங்கிய சில நிமிடங்களில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நாடாளுமன்றத்துக்கு செல்லும் முன்னர் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெகாசஸ் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக ஒன்று கூடி ஆலோசித்தனர். அதேநேரம் பாஜகவும் தனது எம்பிக்கள் கூட்டத்தை நடத்தியது.

எதிர்க்கட்சிகள் இன்று பெகாசஸ் உளவு விவகாரத்தை எழுப்பும் என்பதால் அதுகுறித்து இன்று ஒன்றிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் அறிக்கை வெளியிட உள்ளார் என்றும் பாஜக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆனால் காலை 11 மணிக்கு மக்களவை, மாநிலங்களவை கூடியதுமே எதிர்க்கட்சி எம்பிக்கள் உளவு பார்த்த விவகாரத்தில் பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை எழுப்பினார்கள். இதனால் இரு அவைகளிலும் சலசலப்பு ஏற்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், கௌரவ் கோகாய் ஆகியோர் பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று ஒத்திவைப்பு கோரிக்கைகளை சபாநாயகரிடம் கொடுத்திருந்தனர். இதன் அடிப்படையில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர்.

துறை அமைச்சர் அறிக்கை விடுவதற்கு முன்னர் இதில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தீவிரமாக இருந்ததால் அமளி ஏற்பட்டு இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *