மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஜூலை 2021

உளவு பார்க்கப்பட்ட ராகுல்: அமித் ஷா ராஜினாமா செய்ய காங்கிரஸ் கோரிக்கை!

உளவு பார்க்கப்பட்ட  ராகுல்:   அமித் ஷா ராஜினாமா செய்ய காங்கிரஸ் கோரிக்கை!

இந்தியாவில் இஸ்ரேலிய பெகாசஸ் உளவு ஸ்பைவேர் மூலம் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கண்காணிக்கப்பட்ட விவகாரத்தில் அடுத்த திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த உளவு பார்க்கும் நடவடிக்கையின் இலக்குகளின் இரண்டாவது பட்டியல் நேற்று (ஜூலை 19) வெளியிடப்பட்டது. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி மற்றும் முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா ஆகியோர் பயன்படுத்திய மொபைல் போன்கள் அடங்கும் என்று தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் மழைக் காலக் கூட்டத் தொடர் தொடங்கும் நாளான நேற்று இந்தத் தகவல் மூலம் தேசிய அரசியலில் புயல் வீசிக் கொண்டிருக்கிறது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும், உளவு பார்த்ததாக கூறப்படும் நடவடிக்கையில் பிரதமர் நரேந்திர மோடியின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரியது. பாராளுமன்றத்தில் இந்த பிரச்சினையை தீவிரமாக எழுப்ப முடிவு செய்துள்ளது காங்கிரஸ்,

“ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்களில் குறைந்தது ஐந்து பேரின் தொலைபேசிகளும் ஸ்பைவேரைப் பயன்படுத்தி உளவு பார்க்கப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை ஸ்பைவேர் மூலம் ராகுல் காந்தியின் இரு அலைபேசி எண்கள் இந்த கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டன. அதாவது மக்களவைத் தேர்தலுக்கு முன் தொடங்கி, தேர்தல் முடிந்து சில மாதம் வரை. காந்தியின் நெருங்கிய உதவியாளர்களான அலங்கர் சவாய் மற்றும் சச்சின் ராவ் ஆகிய இருவரும் 2019 நடுப்பகுதியில் கண்காணிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதுபற்றி தி வயரிடம் பேசிய ராகுல் காந்தி, “எனக்கு கடந்த காலத்தில் கிடைத்த ஹேக்கிங் தொடர்பான எச்சரிக்கைகளால், என்னுடைய போன் நம்பரையும்,போனையும் அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்தேன். இதனால் அவர்களுக்கு என்னை கண்காணிப்பது கொஞ்சம் கடினமாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை, எதிர்க்கட்சி தலைவர்கள் அல்லது உண்மையில் இந்தியாவின் எந்தவொரு சட்டத்தை மதிக்கும் குடிமகனும் நீங்கள் விவரிக்கிற வகையில் கண்காணிக்கப்படுவது சட்டவிரோதமானது மற்றும் இழிவானது. உங்கள் தகவல் சரியாக இருந்தால், நீங்கள் விவரிக்கும் கண்காணிப்பின் அளவு மற்றும் தன்மை தனிநபர்களின் தனியுரிமை மீதான தாக்குதலுக்கு அப்பாற்பட்டது. இது நம் நாட்டின் ஜனநாயக அடித்தளங்கள் மீதான தாக்குதல். இது முழுமையாக விசாரிக்கப்பட்டு பொறுப்புள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார் ராகுல்.

அண்மையில் மேற்கு வங்க தேர்தல்களில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றிய தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் மற்றும் பானர்ஜியின் தனிப்பட்ட செயலாளர் ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.

மேலும் கடந்த மக்களவைத் தேர்தலின் போது பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கூறிய அப்போதைய தேர்தல் ஆணையர் லவாசாவின் போனும் பெகாசஸ் முறையில் கண்காணிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி வயர் கேட்டபோது லவாசா கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

-வேந்தன்

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

செவ்வாய் 20 ஜூலை 2021