மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஜூலை 2021

அங்கீகாரம் இல்லாத இடங்களை வாங்க வேண்டாம்: அமைச்சர் ராமச்சந்திரன்

அங்கீகாரம் இல்லாத இடங்களை வாங்க வேண்டாம்: அமைச்சர்  ராமச்சந்திரன்

அங்கீகாரம் இல்லாத மனைகளில் வசிப்பவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதில் சிக்கல் உள்ளது என்றும், அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம் என்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஜூலை 19) நடைபெற்றது.

மேற்குறிப்பிட்ட மூன்று மாவட்டங்களிலும் வருவாய்த்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்தும், அதற்கான ஆவணங்களின் நிலை குறித்தும் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், வருவாய்த்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில், பல ஆண்டுகளாக சாதி சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்த நெல்லை மாவட்டம் தருவையை சேர்ந்த காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் 144 பேருக்கு சாதி சான்றிதழ், 751 பேருக்கு சமுதாய பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்தோறும், ரூ.1,000 உதவித்தொகை திட்டம், 550 பேருக்கு 1.29 கோடி மதிப்பிலான வீட்டுமனை பட்டா, 49 பேருக்கு புதிய குடும்ப அட்டை வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்டங்களை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின்கீழ் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் பெறப்பட்ட 43,803 மனுக்களில், 13,462 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன.

பட்டா வழங்குதல் சர்வே செய்வதில் இருக்கும் தாமதத்தை உடனடியாக நிவர்த்தி செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தை விரிவுப்படுத்தவும், இத்திட்டத்துக்கான பலன்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டாலும்கூட அதற்கான வருவாய் கோட்டங்கள் பிரிக்கப்படாமல் இருக்கின்றன. அதற்கான தகுந்த ஆணையை விரைவில் முதல்வர் வெளியிடுவார்.

வருவாய்த்துறையில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சிக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம். தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 3,000 கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “சர்வே செய்யப்படாத இடங்களில் நீதிமன்ற ஆணைப்படி உரிமம் பெற்ற சர்வேயர் மூலம் அளவீடு செய்து மனு கொடுத்தால்,15 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். இலவச பட்டாக்கள் வழங்கும்போது சர்வே செய்து அவர்களுக்கான இடங்களை அடையாளம் காட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்த அன்றே அந்த இடத்துக்கான பட்டா மாறுதலும் உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திட்ட அனுமதி இல்லாத இடங்களை வாங்க வேண்டாம் எனத் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். அங்கீகாரம் இல்லாத மனைகளில் வசிப்பவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதில் சிக்கல் உள்ளது.

அரசுக்குத் தேவையான நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் செய்யக் கூடாது என அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். நிலம் கையகப்படுத்தும்போது உள்ள பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய தளர்வுகளுடனான சந்தை விலையை வழங்கி பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

-வினிதா

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

3 நிமிட வாசிப்பு

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

9 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

செவ்வாய் 20 ஜூலை 2021