மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 19 ஜூலை 2021

கோ பேக் மோடி- வெல்கம் ராம்நாத்- ஸ்டாலினின் ’தேசிய திட்டம்’!

கோ பேக் மோடி-  வெல்கம் ராம்நாத்-   ஸ்டாலினின் ’தேசிய திட்டம்’!

தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 19) பிற்பகல், குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கு குடியரசுத் தலைவர் கலந்துகொள்ளுமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.

குடியரசுத் தலைவரை சந்தித்த பிறகு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்,

“தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு குடியரசுத் தலைவர் அவர்களை முதல் முறை சந்திப்பதற்காக வந்தேன். முதலமைச்சராக பொறுப்பேற்றதற்காக அவர் எனக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளோடு தனித்தன்மையாக செயல்பட்ட சட்டமன்றம் 12-1- 1921 அன்று தொடங்கிவைக்கப்பட்டது. அதை நினைவுபடுத்தக் கூடிய வகையில் சட்டமன்ற நூற்றாண்டு விழாவைக் கொண்டாட அரசு முடிவு செய்திருக்கிறது.

அந்த விழாவுக்கு தலைமை தாங்கி விழாவை நடத்தித் தர வேண்டும் என்று நான் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை வைத்தேன். அந்த கோரிக்கையை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அந்த விழாவில் கலைஞரின் திருவுருவப் படத்தை சட்டமன்றத்தில் திறந்து வைக்க வேண்டும் என்ற செய்தியையும் அவரிடம் சொல்லியிருக்கிறோம்.

அதையொட்டி மதுரையில் தலைவர் கலைஞர் பெயரில் அமையக் கூடிய நூலக அடிக்கல் நாட்டு விழா, சென்னை கிண்டியில் நடைபெற இருக்கும் அரசு பன்னோக்கு மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா, நம் நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆவதை ஒட்டி சென்னை கடற்கரையில் அமைய இருக்கும் நினைவுத் தூண் திறப்பு விழாவையும் நடத்தித் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தந்திருக்கிறார். தேதியை இரண்டொரு நாட்களில் வழங்குவதாக உறுதியளித்திருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

கடந்த அதிமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றின் தொடக்க விழாக்களுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைத்தார். அப்போது அதிமுகவும் பாஜகவும் கூட்டணிக் கட்சிகளாக இருந்ததால் மோடியும் கூப்பிட்டபோதெல்லாம் சென்னை வந்தார்.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இங்கே திமுக ஆட்சி நடந்தது. அப்போது பிரதமர் மன்மோகன் சிங்,சோனியாகாந்தி ஆகியோரை திமுக அரசு பல விழாக்களுக்கு அழைத்தது.

இப்போது திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து மத்திய அரசை ஒன்றிய அரசு என குறிப்பிட்டு வருகிறது. இது சட்டப்படியான வார்த்தைதான் என்று முதல்வர் சட்டமன்றத்திலேயே விளக்கம் அளித்தபோதும் பாஜகவினர், திமுக மீது தொடர்ந்து பிரிவினைவாத முத்திரையை குத்தி வருகின்றனர். மேலும், கடந்த முறை டெல்லி சென்றபோது முதல்வர் ஸ்டாலினை உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்திக்க நேரம் கொடுக்கவில்லை. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கோ பேக் மோடி என்று பிரதமர் மோடிக்கு தமிழகத்தில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. அதை மனதில் வைத்து இப்போது பாஜக அமைச்சர்கள் டெல்லியில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க அப்பாயின்மென்ட் கொடுக்கவில்லை என்றும் முதல்வரின் முதல் டெல்லி பயணத்தின்போதே தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் திமுகவின் தேசிய முக்கியத்துவம் குறைந்துவிட வில்லை என்பதை வெளிப்படுத்தவும், திமுகவின் தேசப் பற்று யாருக்கும் குறைந்ததில்லை என்பதை வெளிப்படுத்தவும் சில நிகழ்ச்சிகளை நடத்த ஆலோசனை செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்தப் பின்னணியில்தான் தமிழக அரசு நடத்தும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களுக்கு குடியரசுத் தலைவரை அழைப்பது என்று முடிவெடுத்து அதன்படியே டெல்லி சென்று அழைப்பு விடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

“நாங்கள் பாஜகவுக்கு எதிரானவர்களே தவிர, இந்திய ஒருமைப்பாட்டுக்கோ, தேசத்துக்கோ எதிரானவர்கள் இல்லை”என்பதுதான் இதன் மூலம் ஸ்டாலின் டெல்லிக்கு சொல்லிய செய்தி என்கிறார்கள் திமுக எம்பிக்கள் வட்டாரத்தில்.

குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இந்த விழாக்களுக்காக தமிழகம் வருகை தரும்போது அவருக்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.

-வேந்தன்

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

திங்கள் 19 ஜூலை 2021