மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 ஜூலை 2021

செந்தில்பாலாஜியிடம் பேசினேன், சபரீசனை சந்திக்கவில்லை: சோளிங்கர் பார்த்திபன் விளக்கம்!

செந்தில்பாலாஜியிடம் பேசினேன், சபரீசனை சந்திக்கவில்லை: சோளிங்கர் பார்த்திபன் விளக்கம்!

தன்னுடன் அமமுகவில் இருந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்களை திமுகவுக்குக் கொண்டு செல்வதில் அமைச்சர் செந்தில்பாலாஜி தீவிரமாக இருக்கிறார்.

அந்த வகையில் அவர் அமமுகவின் தற்போதைய மாவட்டச் செயலாளரான சோளிங்கர் பார்த்திபனோடு பேசியிருப்பதாகவும், இது தொடர்பாக பார்த்திபன் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசனை சந்தித்ததாகவும் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் அமமுகவின் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளரும், தேர்தல் பிரிவுச் செயலாளரும், மண்டலப் பொறுப்பாளருமான பார்த்திபன் நம்மைத் தொடர்புகொண்டு விளக்கம் அளித்துள்ளார்.

“தற்போது திமுக அரசில்அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜி எனக்கு 2006இல் இருந்தே பழக்கம். நான் அதிமுகவின் மாணவரணிச் செயலாளராகவும், மாவட்டச் செயலாளராகவும் இருந்தேன். அப்போது செந்தில்பாலாஜியுடன் சக அதிமுக நிர்வாகி என்ற அடிப்படையில் பழக்கம் உண்டு. அவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து சென்ற பிறகு அவருடன் பேசவில்லை.

இப்போது சமீபத்தில் நானும் செந்தில்பாலாஜியும் பர்சனல் விஷயமாக பேசினோம். அவர் பேசினார், நான் பேசினேன். அவ்வளவுதான். அதில் அரசியல் ஏதும் இல்லை. செந்தில்பாலாஜி என்னை திமுகவுக்கு வாருங்கள் என்று கூப்பிடவும் இல்லை, நான் திமுகவுக்குப் போகும் எண்ணத்திலும் இல்லை.

நான் திமுகவில் சேருவதை திமுக மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான காந்தி விரும்பவில்லை என்றும், அதனால் நான் சபரீசனை சென்று சந்தித்தேன் என்றும் அமமுகவில் இருந்து திமுகவுக்கு போன சிலர் கிளப்பிவிடுகிறார்கள். நாங்கள் பாரம்பரியமாக அதிமுகவைச் சேர்ந்தவர்கள். என் தந்தை, தாய், நான் என குடும்பமே அதிமுகவில்தான் இருந்திருக்கிறோம். என் அப்பா 1989 இல் சேவல் வேட்பாளர். அந்த அடிப்படையில் இப்போது நான் சின்னம்மா, டிடிவி சாரின் தலைமையை ஏற்று பயணித்துக் கொண்டிருக்கிறேன். இந்நிலையில் என்னை திமுகவில் இருந்து யாரும் அழைக்கவும் இல்லை. அதுபோல ஓர் எண்ணம் என் அடிமனதில் கூட இல்லை.

நான் இருபது வருடம் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்திருக்கிறேன்.எனக்கு எல்லா கட்சிகளிலும் நண்பர்கள் வட்டாரம் உண்டு. யாராவது பேசினால் நான் நட்பின் அடிப்படையில் பேசியிருப்பேனே தவிர, சத்தியமாக அரசியல் பேசியதில்லை. செந்தில்பாலாஜியிடம் கூட நான் அரசியல் பேசியதில்லை. அந்த வகையில் நான் சபரீசனையும் சந்திக்கவில்லை. எனக்கு திமுகவில் சேரும் ஈடுபாடும் இல்லை.

அமமுக தொடங்கப்பட்டதில் இருந்து நான் மாவட்டச் செயலாளர், தேர்தல் பிரிவு செயலாளர், மண்டலப் பொறுப்பாளராக இருக்கிறேன். என் கட்சிக்கும் எங்கள் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கும் விசுவாசமாக இருக்கிறேன்.

இந்த நிலையில் என்னைப் பற்றி அமமுகவில் இருந்து விலகிச் சென்ற சிலர் சில தகவல்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். எனவே நான் திமுகவுக்குச் செல்வதாக வெளிவரும் தகவல்களை திட்டவட்டமாக மறுக்கிறேன்” என்று பொறுமையாக விளக்கமளித்திருக்கிறார் சோளிங்கர் பார்த்திபன்.

-வேந்தன்

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்: முதல்வர் ...

8 நிமிட வாசிப்பு

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்:  முதல்வர்  ஆக்‌ஷன் என்ன?

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

6 நிமிட வாசிப்பு

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

நான் வழக்குப் போட்டேனா? திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

4 நிமிட வாசிப்பு

நான்  வழக்குப் போட்டேனா?  திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

ஞாயிறு 18 ஜூலை 2021