மருத்துவ கழிவுகள்: போரூர் ஏரியில் அமைச்சர் ஆய்வு !

politics

போரூர் ஏரியில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அதோடு, போரூர் ஏரியில் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

சென்னை மக்களுக்குக் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக இருக்கும் போரூர் ஏரியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், “நீர் மாசினை தடுக்கும் வகையிலும், சுகாதாரக் கேடு ஏற்படுவதை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும், ஏரிகளில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டப்படுவதைத் தடுத்து நிறுத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டுமென்றும், மருத்துவக் கழிவுகளை தரம் பிரித்துக் கையாள மருத்துவமனைகளுக்குத் தகுந்த அறிவுரைகள் வழங்க உத்தரவிட வேண்டுமென்றும் தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் போரூர் ஏரியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்குப் பதிலளித்தார்.

தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள தியாகிகள் மணி மண்டபத்தில் தியாகிகள் ஆர்யா (எ) பாஷ்யம், சங்கரலிங்கனார், செண்பகராமன் ஆகியோரின் உருவப் படங்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் போரூர் ஏரியில் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் மண்ணை கொட்டி மூடுவதற்காக முயற்சி செய்தனர். ஏரியைச் சமன் செய்ய முயற்சி செய்த போது, முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நடத்திய போராட்டத்தால்தான் தற்போது போரூர் ஏரி இருக்கிறது. அன்று ஓபிஎஸ் தான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். தற்போது போரூர் ஏரியின் மீது அவருக்கு அக்கறை வந்துள்ளது. போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டால் தடுத்து நிறுத்தப்படும். மருத்துவ கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

இந்த நிலையில் தற்போது போரூர் ஏரி பகுதிகளில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், திருவள்ளூர் மாவட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *