மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஜூலை 2021

இன்னும் தேசத்துரோக வழக்கு தேவையா?: உச்ச நீதிமன்றம் கேள்வி!

இன்னும் தேசத்துரோக வழக்கு தேவையா?: உச்ச நீதிமன்றம் கேள்வி!

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் போராட்ட வீரர்களை ஒடுக்க கொண்டுவரப்பட்ட தேசத்துரோக வழக்கு, சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகும் தேவையா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.ஜி. வாம்பாத்கரே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்று தொடர்ந்திருந்தார். அதில், “இந்திய தண்டனை சட்டத்தில் 124-ஏ பிரிவு என்பது தேசத்துரோகச் சட்டத்தைக் குறிக்கிறது. இந்தச் சட்டம் முற்றிலும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

இது, அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19(சி) வழங்கியுள்ள பேச்சுரிமை, கருத்துரிமை ஆகியவற்றுக்குத் தேவையற்ற வகையில் கட்டுப்பாடு விதிக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளை அனுமதிக்காமல் மறுக்கிறது.

1962ஆம் ஆண்டு கேதார்நாத் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்பது ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டது. எனவே, இந்த சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நேற்று (ஜூலை 15) உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேசத்துரோக வழக்கு என்பது ஒரு தச்சரிடம் மரத்தை வெட்ட கொடுக்கப்பட்ட கோடாரி போன்றது. அந்த கோடாரியை தவறாகப் பயன்படுத்தினால் ஓட்டுமொத்த காட்டையும் அழித்துவிட முடியும். விசாரணை அமைப்புகளால் தேசத்துரோகச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்ற தகவல் வேதனை அளிக்கிறது.

இதுபோன்ற சட்டம் அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் கட்சிகள், அமைப்புகள், அப்பாவி மக்களுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்படுகிறது” என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மகாத்மா காந்தி, திலகர் உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை ஒடுக்க கொண்டுவரப்பட்ட தேசத்துரோகச் சட்டப்பிரிவு தற்போது தேவையா? நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் தேசத்துரோகச் சட்டத்தைக் கடைப்பிடிப்பது ஏன்?

இந்திய விடுதலைக்குப் பிறகு பல்வேறு பழைய சட்டங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்தி திருத்தம் செய்து கொண்ட இந்திய அரசு, எப்படி இந்த குறிப்பிட்ட சட்டப்பிரிவை மட்டும் மாற்ற பரிசீலிக்காமல் போனது என நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், இந்த முழு சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டியதில்லை. அதற்கு பதிலாக அதன் நோக்கம் சட்டபூர்வமாக அமல்படுத்தப்படுவதற்கான வழிகாட்டுதல்களை வகுக்கலாம்” என்று கூறினார்.

இதையடுத்து பேசிய நீதிபதிகள், இதுகுறித்து ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்துக்கு பலரும் வரவேற்பு அளித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்துகளை நாங்கள் வரவேற்கிறோம்” என்று ட்வீட் செய்துள்ளார்.

-வினிதா

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

வெள்ளி 16 ஜூலை 2021