மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஜூலை 2021

திமுகவுக்கு போட்டி பாஜகதான்: அதிமுகவுக்கு அண்ணாமலையின் மெசேஜ் !

திமுகவுக்கு போட்டி பாஜகதான்: அதிமுகவுக்கு அண்ணாமலையின் மெசேஜ் !

பாஜக தலைவராக கே. அண்ணாமலை இன்று (ஜூலை 16) பிற்பகல் பதவியேற்றுக் கொண்டார். 37 வயதேயான அண்ணாமலை கோவையில் இருந்து 14ஆம் தேதி புறப்பட்டு சாலை மார்க்கமாக சென்னை வந்து கமலாலயத்தில் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் பாஜக தமிழக அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், தமிழக பொறுப்பாளர் டி.சி.ரவி, துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன், பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், சட்டமன்ற கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் இல கணேசன், பொன். ராதாகிருஷ்ணன், சிபி.ராதாகிருஷ்ணன் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் மேடையில் இருந்தனர். ஹெச். ராஜாவுக்கு இரண்டாம் வரிசையில்தான் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மேடையில் ஒரே பென்ணாக பாஜகவின் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சரஸ்வதி அமர்ந்திருந்தார்.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்ட தேசியத் தலைமையின் ஆணையை தமிழக பொறுப்பாளர் சி.டி. ரவியும், முன்னாள் பாஜக தலைவரும் தற்போதைய ஒன்றிய அமைச்சருமான எல். முருகனும் இணைந்து அண்ணாமலையிடம் ஒப்படைத்தனர்.

வரவேற்புரையாற்றிய பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், ”தமிழகத்தில் திமுகவுக்கு எதிரான சக்தி பாஜகதான் என்பதை இன்று நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்” என்று குறிப்பிட்டு நிகழ்வை சூடேற்றினார்.

முன்னாள் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசுகையில், “தமிழக பாஜகவின் தலைவராக மட்டுமல்லாமல் தளபதியாகவும் அண்ணாமலை இருந்து நம்மை வழி நடத்துவார். நான்கு எம்.எல்.ஏ. சீட்டுகள் நாற்பதாகும், பின் 140 ஆகும்” என்று கூறினார்.

இல. கணேசன் பேசும்போது, “வேலை கையிலெடுத்தார் முருகன். ஆனால் வேலை முடியவில்லை. முடிந்தவரையில் வெற்றி. ஆனால் வேலை இருக்கிற காரணத்தால் டெல்லி சென்றுவிட்டார். டெல்லிக்கு சென்றது இழப்பு என்று நினைத்தாலும் கூட, தன்னுடைய கண்டுபிடிப்பாக கொங்குநாடு என்று குறிப்பிட்டார்” என்று இல.கணேசன் பேசிக் கொண்டிருக்கும்போது மேடையிலேயே முருகன்,’ஜி... அதை விட்டுடுங்க.அது தவறானது’என்று விளக்கம் கொடுத்தார்.

ஆனால் இல.கணேசன், “முருகன் அவர்களே அதை தவறு என்று சொல்ல வேண்டாம். தினமலருக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். கொங்குநாடு என்று சொல்லும்போது உனக்கு பற்றி எரிகிறது. பாரத நாட்டைதுண்டாட நினைக்கும் போது எவ்வளவு பற்றி எரியும். தெரிந்தோ தெரியாமலோ நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி.

அண்ணாமலையிடம் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை வந்திருக்கிறது. தமிழகம் உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறது. அண்ணாமலை உங்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்”என்று பேசினார்.

மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி பேசுகையில், “2026இல் அண்ணாமலையை தமிழகத்தின் முதலமைச்சராக்குவோம்” என்று உறுதியேற்றார்,’

மேலிட துணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, “வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றிக் கொடி கட்ட வேண்டும்”என்றார்.

வி.பி. துரைசாமி பேசும்போது, “இங்கே ஒரு ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் பார்க்கிறேன். ஆச்சரியம் 37 வயதில் தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக அமர்த்தப்பட்டிருப்பது. அவர் ஆற்றல் மிக்கவர். மிஸ்டர் முருகன் மக்களவையிலோ மாநிலங்களவையிலோ உறுப்பினர் கிடையாது. ஆனால், இரு அவையிலும் உறுப்பினராக அல்லாத ஒரு எளிய மனிதரை அமைச்சராக்கிய பிஜேபிக்கு இணையான ஒரு கட்சியை பார்க்க முடியாது. நானும் ஆறு ஆண்டுகளாக எம்பியாக இருந்திருக்கிறேன். இந்த ஒரு இயக்கம்தான் சாதி பார்ப்பதில்லை, மதம் பார்ப்பதில்லை. யாருக்கு அறிவு இருக்கிறதோ ஆற்றல் இருக்கிறதோ அவர்களுக்கு அமைச்சர் பதவி தந்திருக்கிறார்கள். லோக்கல் பாடி எலக்‌ஷனில் தேர்தலிலே நாம் கவனம் செலுத்த வேண்டும். நாம் மேயர், துணை மேயர் ஆக வேண்டும்” என்று பேசினார்.

தமிழகப் பொறுப்பாளர் சி.டி. ரவி பேசுகையில், “தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு ரியல் சிங்கம் முருகன் போயிருக்கிறது. அங்கே பிற கட்சி சார்பாக இருப்பவர்கள் ரீல் சிங்கங்கள்”என்றார்.

நிறைவாக ஏற்புரையாற்றிய அண்ணாமலை , “ஒரு அரசியல் கட்சி எவ்வாறு இருக்க வேண்டுமென்பதற்கு பாஜக உதாரணமாக இருக்கிறது. ஒரு கட்சி என்றால் அதில் சமூக நீதி இருக்க வேண்டும். அதன்படிதான் நமது முன்னாள் மாநில தலைவர் முருகன் கடுமையாக வேலை செய்து நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை சட்டமன்றத்துக்கு அனுப்பினார்.கொரோனா காலத்தில் கூட ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சுற்றுப் பயணம் செய்து கட்சியிலே எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். இரு வருடமாக தமிழகத்துக்கு மத்திய அமைச்சரவையிலே இடம்பெற வாய்ப்பு ஏற்படவில்லை. 2019 இல் நாம் எம்பிக்களைப் பெறவில்லை. ஆனாலும் மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் அதிக அளவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு முத்தாய்ப்பாக நமது முருகன் அவர்களை மத்திய அமைச்சராக்கியிருக்கிறார்கள். இதுதான் சமூக நீதி. இதைவிட சமூக நீதியை நீங்கள் புத்தகங்களில் தேடிப் படித்துக் கொண்டிருக்க வேண்டாம்.

அதேபோல் என்னைப் போல் சிறு வயதுள்ள ஒருவனை, நான் கட்சியில் சேர்ந்து சில சமயம்தான் ஆகியிருந்தாலும் கூட எனக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு அளித்திருக்கிறார்கள். என்னை விட திறமையிலே தகுதியிலே பொறுப்புணர்விலே அதிகம் பெற்றவர்கள் இந்த அரங்கத்திலே இருக்கிறார்கள். ஆனாலும் இந்த கட்சியின் செயல்பாடு என்னவென்றால் அவர்கள் எல்லாரும் என்னை மனம் திறந்து ஆசி வழங்கி வாழ்த்தியிருக்கிறார்கள். இதுதான் நம் கட்சியின் இரண்டாவது பெருமை.

மூன்றாவதாக இளைஞர்கள் பட்டாளம் நம்மை நோக்கி வருகிறது. காரணம் ஒருபக்கம் கழக ஆட்சி என்று சொல்லும் குடும்ப ஆட்சி. மகனா, மருமகனா என்று கட்சி தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது. பாதி பேர் மகனிடம் போகிறார்கள், பாதி பேர் மருமகனிடம் போகிறார்கள். இந்த இருபக்கமும் போக முடியாதவர்கள் கிச்சன் கேபினட் மூலமாக அந்த அம்மாவை போய் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கே அனைவருக்கும் பொறுப்பு. தேசியத்தின் அடிப்படையில் ஆன்மிகத்தின் அடிப்படையில் வளர்க்க வேண்டும் என்ற பொறுப்புடன் வேலை செய்துகொண்டிருக்கிறோம். இது இரண்டையும் பார்க்கும்போது ஏன் இங்கே வரக் கூடாது என்று யோசித்து இங்கே வருகிறார்கள்.

திராவிடக் கட்சிக்கு எல்லா விஷயத்திலும் போட்டியாக இருப்பது பாஜகதான். மத்திய அரசின் சிறப்பு கவனம் தமிழகம் மீது இருக்கிறது.எனவே இனி வரும் காலம் பாஜகவின் காலம்.

நிறைய தலைவர்கள் கொஞ்சம் ஒதுங்கியிருக்கிறார்கள். இங்கே இருக்கும் இந்த ஒற்றுமை மண்டல அளவிலும் அதற்கு கீழும் இருக்க வேண்டும். எனவே எல்லாரும் முன் வந்து கூட்டாக வேலை செய்ய வேண்டும். நாம் அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது. மத்திய தலைமை நம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறது. அந்த நம்பிக்கையை வாக்குகளாக மாற்றி எம்.எல்.ஏ.க்களாகவும், எம்பிக்களாகவும் மாற்ற வேண்டும். அனைவரும் சேர்ந்துதான் இந்த வேலையைச் செய்ய வேண்டும். வரும் தேர்தலில் 20 எம்பி என்ன அனைத்து எம்பிக்களையும் நாம் பெறமுடியும்.

2ஜி ஊழல் செய்த ஒரு எம்பி, சன் டிவி கனெக்‌ஷனை வீட்டுக்கு கொண்டு சென்ற எம்பி எல்லாம் இருக்கும்போது நம் கட்சியின் சார்பில் ஏன் எம்பியாகக் கூடாது.

ஆகஸ்டு 1 ஆம் தேதியில் இருந்து ஒரு மனிதருக்கு 25 பேர்களை சந்திக்க வேண்டும். ஆகஸ்டு 1 முதல் இந்த டார்கெட். இதை வைத்துதான் நாம் பாஸா பெயிலா என்பது தெரியும்.

நான் என் மனைவியிடமும், குழந்தையிடமும் சொல்லிவிட்டேன். எப்பவாச்சும் தான் லீவு போடுவேன், தயாராக இருங்கள் என்று சொல்லிவிட்டேன். ஒவ்வொரு நாளும் நான் சுற்றுப் பயணத்தில்தான் இருப்பேன். இதுவரை நான் செய்த வேலையை விட இரு மடங்கு செய்யத் தயாராகிவிட்டேன். நீங்களும் தயாராகுங்கள்” என்று பேசினார் அண்ணாமலை.

பதவியேற்பு விழாவில் பேசிய அண்ணாமலை உள்ளிட்ட அனைவருமே திமுகவுக்கு போட்டி இனி பாஜகதான் என்றும், தமிழகத்தின் தற்போதைய எதிர்க்கட்சி பாஜகதான் என்றும் பேசினார்கள். எனவே அதிமுகவோடு பாஜக கூட்டணியில் இருக்கிறதா என்ற கேள்வி இந்த நிகழ்ச்சி மூலம் எழுகிறது.

-ராகவேந்திரா ஆரா

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் ...

8 நிமிட வாசிப்பு

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்:  உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி -  எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி!

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ? ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி! ...

4 நிமிட வாசிப்பு

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ?  ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி!

ராஜ்யசபா: காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

3 நிமிட வாசிப்பு

ராஜ்யசபா:  காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

வெள்ளி 16 ஜூலை 2021