மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஜூலை 2021

மணல் கடத்தல்: திமுக மாவட்டப் பொறுப்பாளர், எம்.எல்.ஏ.மீதும் நடவடிக்கையா?

மணல் கடத்தல்:  திமுக  மாவட்டப் பொறுப்பாளர், எம்.எல்.ஏ.மீதும் நடவடிக்கையா?

திருச்சி மாவட்டம் மணப்பாறை கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஆரோக்கியசாமி மணல் கடத்தல் விவகாரத்தில் ஈடுபட்டதாக வந்த புகார்களின் பேரில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

’ஆரோக்கியசாமி கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறார்” என்று நேற்று(ஜூலை 15) திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்திருக்கிறார்.

திருச்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளரும், இப்போதைய தலைமைக் கழக முதன்மைச் செயலாளருமான கே.என். நேருவிடம் தெரிவித்துவிட்டே இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார் திமுக தலைவர்.

மணப்பாறையில் என்ன நடந்தது என்று விசாரித்தோம்.

”மணப்பாறை ஒன்றியத்திலுள்ள வயல் பகுதிகளில் மணலை எடுத்து சலித்து விற்பனை செய்வதுதான் ஆரோக்கிய சாமியின் தொழிலாகவே இருந்து வந்தது. கொரோனா காலம், தேர்தல் தொடர்பாக நிறுத்தி வைத்திருந்தார். இடையில் திருச்சி மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து மத்திய மாவட்டப் பொறுப்பாளராக வைரமணி நியமிக்கப்பட்டார்.

மணப்பாறை ஒன்றியத்தின் ஏழு பஞ்சாயத்துகள் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்டதாக வருகிறது. ஸ்ரீரங்கம் தொகுதி மத்திய மாவட்டத்துக்குள் வருகிறது. அதேநேரம் மணப்பாறை தொகுதி அன்பில் மகேஷின் திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருகிறது. எனவே மணப்பாறை ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து வைரமணியின் மாவட்டத்தில் வரும் பகுதிகளுக்கு ஆரோக்கிய சாமி ஒன்றிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

ஆரோக்கியம் வைரமணியின் தீவிர ஆதரவாளர். மேலும் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட்ட பழனியாண்டிக்கு தனது ஒன்றியத்தில் நன்றாக செலவு செய்தார். பழனியாண்டி எம்.எல்.ஏ. ஆகிவிட்டார். இந்த நிலையில் மாவட்டப் பொறுப்பாளர் வைரமணி, ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ.பழனியாண்டி ஆகியோரின் ஆசியோடும் ஆதரவோடும் அவர்களுக்கு உரிய பங்கைக் கொடுத்துவிட்டும்தான் ஆரோக்கியம் மணல் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

உள்ளூரில் மணல் அள்ளும் பிற லாரி உரிமையாளர்கள் தடுக்கப்பட்டனர். இதனால் கோபமான உள்ளூர் லாரி உரிமையாளர்கள், ‘மணப்பாறை போலீஸ் ஸ்டேஷன் உதவியோடு ஆரோக்கியசாமி மட்டும் மணல் அள்ளுவதை எஸ்பி, டிஐஜி, ஐஜி ஆகியோரிடம் புகாராகக் கொடுத்தார்கள்.

மணப்பாறை அருகே உள்ள முத்தன்புடைப்பட்டியில் ஆரோக்கியசாமியின் டிப்பர் லாரிகள் மண்ணள்ளிக் கொண்டிருப்பது பற்றி லோக்கல் லாரி உரிமையாளர்கள் எஸ்பிக்கு புகார் செய்ய, அவர் உடனே பெல் நகர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டு லாரிகளை கைப்பற்ற உத்தரவிட்டார். ஆனால் அப்போது ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி இன்ஸ்பெக்டரிடம் பேசி ஆரோக்கியசாமியின் வாகனங்களை மீட்டுக் கொண்டு போய்விட்டார்.

இதையறிந்த லோக்கல் லாரி உரிமையாளர்கள் இந்த விஷயத்தை திருச்சி ஐஜி வரை கொண்டுபோய்விட்டனர். ’அவங்க என்ன கொடுத்து ஓட்டுறாங்களோ அதையே நாங்களும் கொடுத்து ஓட்டிக்கிறோம்’என்று பேசினார்கள். ஆட்சி மேலிடத்துக்கும் தகவல் சென்றது. இதையடுத்து ஐஜி உத்தரவின் பேரில் டிஎஸ்பி பிருந்தா பேசி விடுவிக்கப்பட்ட லாரிகளை மீண்டும் சீஸ் செய்ய ஏற்பாடு செய்தார். இந்த விவகாரத்தில் மணப்பாறை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அன்பழகனும், டிஎஸ்பி பிருந்தாவும் திமுக ஒன்றிய பொறுப்பாளர் ஆரோக்கியசாமி வீடு தேடிச் சென்று வாகனங்களை ஒப்படைக்குமாறு கேட்டனர். ஆனால் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி மீண்டும் போலீஸிடம் பேசி, இரண்டு வாகனங்களை மட்டும் எடுத்துச் செல்ல அனுமதி அளித்துள்ளார். அந்த இரண்டு வண்டிகளை மட்டும் எடுத்துக்கொண்டு சென்று வழக்கு போட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் தகவல் டிஜிபி வரைக்கும் போய், முதல்வர் அலுவலகத்துக்கும் சென்றுள்ளது. உடனடியாக திருச்சி மாவட்ட அமைச்சரும் திமுகவின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவிடம் ஆலோசித்த முதல்வர் உடனடியாக மணல் கடத்தல் வாகனங்களுக்கு உரிமையாளரான ஆரோக்கியசாமியை கட்சியில் இருந்து நீக்குமாறு பொதுச் செயலாளர் துரைமுருகனிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து இன்றைய முரசொலியில் ஆரோக்கியசாமியின் நீக்க அறிவிப்பு வெளியானது”என்று விலாவாரியாக விளக்கிய திமுகவினரே,

“இந்த விவகாரத்தில் ஆரோக்கியசாமியை நீக்கினால் மட்டும் போதாது. ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி, திருச்சி மத்திய மாவட்டப் பொறுப்பாளர் வைரமணி ஆகிய ஆரோக்கியசாமியின் பார்ட்னர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மாவட்டப் பொறுப்பாளர் வைரமணி மீதும், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ.பழனியாண்டி மீதும் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார் அமைச்சர் நேரு.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வெள்ளி 16 ஜூலை 2021