மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஜூலை 2021

நீட் முடிவை மறுபரிசீலனை செய்க: பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தல்!

நீட் முடிவை மறுபரிசீலனை செய்க: பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தல்!

நீட் தேர்வை நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமரிடம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்து அந்தந்த மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று காலை கலந்துரையாடினார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அப்போது, தடுப்பூசித் திட்டத்தின் தற்போதைய நிலை பற்றியும், தங்களது மாநிலங்களில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மாநில முதல்வர்கள் பிரதமரிடம் விளக்கினர். தடுப்பூசித் திட்டத்தின் உத்தி பற்றிய தங்களது கருத்துக்களையும் தெரிவித்தனர். அப்போது, “பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட வேண்டும் ” என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கூறினார்.

பிரதமர் பேசுகையில், “கடந்த வாரத்தில் 80% பாதிப்புகளும், 84% உயிரிழப்புகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள மாநிலங்களில் பதிவாகியுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் மாநிலங்களில் மூன்றாவது அலை உருவாவதைத் தடுப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நீண்ட காலத்திற்குப் பாதிப்பு அதிகரித்தால், கொரோனா தொற்றின் உருமாறும் தன்மை அதிகரிப்பதற்கும், புதிய மாறுபாடுகள் உருவாகும் அபாயமும் ஏற்படக்கூடும் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே பரிசோதனை, தடம் அறிதல், சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆகிய உத்திகளைத் தொடர்ந்து பின்பற்றுவதோடு, மிகச்சிறிய கட்டுப்பாட்டு மண்டலங்களிலும் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். அதிக பாதிப்புகள் ஏற்படும் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஐரோப்பா, அமெரிக்கா, வங்கதேசம், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் பல்வேறு நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவது கவலை அளிப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், இது இந்தியாவிற்கும், உலகிற்குமான எச்சரிக்கை” என்று கூறினார்.

தமிழக முதல்வர் பேசுகையில், “கொரோனா பெருந்தொற்றைச் சமாளிக்கும் கடினமான பணியை, புதிதாகப் பொறுப்பேற்ற ஓர் அரசு எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்த ஒரே பெரிய மாநிலம் தமிழ்நாடுதான். எனது அரசு இச்சவாலை எதிர்கொண்டு, உயிரிழப்புகளைக் குறைத்து, நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

பிரதமரே, தங்களது நேரடித் தலையீட்டைக் கோரும் சில முக்கியமான விவகாரங்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவதை, எமது அரசு 6 விழுக்காட்டிலிருந்து முழுமையாகத் தவிர்த்துள்ளதுடன், தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வையும் பெரிய அளவில் வெற்றிகரமாக ஏற்படுத்தியுள்ளது. இதனால், தற்போது தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது. எனினும், பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்துக்கான ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்கக் கோரியிருக்கிறேன். இந்த முக்கியமான பிரச்சினையில், உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்.

இரண்டு கோடி குடும்பங்களுக்கு, இரு தவணைகளில் 4 ஆயிரம் ரூபாயை கொரோனா நிவாரணத் தொகையாகக் கொடுத்துள்ளோம். 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் இந்தக் குடும்பங்களுக்கு வழங்கியுள்ளோம். ஒன்றிய அரசு முன்னுரிமை அட்டைதாரர்களுக்கு வழங்கும் கூடுதல் அரிசியை அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் தமிழ்நாடு அரசு விரிவுபடுத்தியுள்ளது. இதைப்போன்று, தகுதியுடைய அனைத்து அட்டைதாரர்களுக்கும் இத்திட்டத்தை ஒன்றிய அரசு விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்ததாக, தற்போது நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, கொரோனா தொடர்பான அனைத்துப் பொருட்களுக்கும் சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும். மூன்றாம் அலை வரும் எனக் கூறப்படுகிற நிலையில், அதனைச் சமாளிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

அதனை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, மாநிலங்களுக்கு மேலும் பல உதவிகளை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும். பள்ளி - கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் தற்போதைய சூழலில், நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்று பரவலுக்கு வழி வகுத்துவிடலாம். எனவே, பிரதமர் இம்முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும். இப்பெருந்தொற்றைக் கையாள்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வெள்ளி 16 ஜூலை 2021