மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஜூலை 2021

கட்சி மாறுபவர்களைக் கண்டுபிடிக்க தினகரனின் திட்டம்!

கட்சி மாறுபவர்களைக் கண்டுபிடிக்க தினகரனின் திட்டம்!

தேர்தல் தோல்விக்குப் பின் அமமுகவின் மாவட்டச் செயலாளர் உட்பட பல நிர்வாகிகள் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் தாவிக் கொண்டிருக்கிறார்கள். அமமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பனும் திமுகவில் சேர்ந்துவிட்டார்.

கடந்த ஆட்சியில் தினகரனுக்கு ஆதரவளித்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் மேலும் சிலர் செந்தில் பாலாஜி மூலமாக திமுகவில் சேர்வதற்குத் திட்டமிட்டு சென்னையில் அமைச்சர் பங்களாவில் அவரை சந்தித்து விருந்தும் சாப்பிட்டுவிட்டனர்.

இந்த நிலையில்தான் கடந்த ஒரு வாரமாக அமமுகவில் தொகுதி ரீதியாக நிர்வாகிகள் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று தினகரன் உத்தரவிட்டு, அதன்படியே கூட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தக் கூட்டங்கள் தோல்விக்கான காரணங்கள் பற்றி ஆராயவும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது பற்றி விவாதிக்கவும் என்று சொல்லப்படுகின்றன. ஆனால், உண்மையில் இந்தக் கூட்டங்களின் நோக்கம் வேறு என்கிறார்கள் அமமுக நிர்வாகிகள்.

“தினகரனுக்கு உகந்த குக்கர் சின்னம் கிடைத்தும் பல தொகுதிகளில் ஆயிரம், இரண்டாயிரம் என மிக சொற்ப ஓட்டுகளே கடந்த சட்டமன்றத் தேர்தலில் கிடைத்திருக்கின்றன. தேர்தல் தோல்விக்குப் பின் கட்சியின் பொதுச் செயலாளரான தினகரன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் கூட பேசவில்லை. தனது வலதுகரம் போல இருக்கும் பழனியப்பனிடம்கூட அவர் பேசவில்லை.

இந்த நிலையில் அமமுக நிர்வாகிகள் பலருக்கும் தங்கள் அரசியல் வாழ்வு பற்றிய ஒரு நிச்சயமற்ற உணர்வு உண்டாகிவிட்டது. அதனால்தான் சிலர் அதிமுகவை நோக்கியும், பலர் ஆளுங்கட்சியான திமுகவை நோக்கியும் நகர ஆரம்பித்துவிட்டனர். வெளியே இதெல்லாம் சகஜம் என்பதைப் போல தினகரன் அலட்டிக் கொள்ளாவிட்டாலும் உள்ளுக்குள் உடைந்துபோய்தான் இருக்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் தினகரன் நம்பிக்கை வைத்த பலர் வேறு கட்சிகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் ஒவ்வொரு தொகுதி வாரியாகவும் நிர்வாகிகள் கூட்டம் போடச் சொல்லியிருக்கிறது அமமுக தலைமை. இதற்கு ஒரே காரணம், யார் யார் வருகிறார்கள், யார் யார் வெளியே போகும் மூடில் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிவதற்குத்தான். மாவட்ட ரீதியாகக் கூட்டம் போட்டால் எல்லா நிர்வாகிகளையும் ட்ரேஸ் பண்ண முடியாது என்பதால்தான், தொகுதி வாரியாக கூட்டம் நடத்தச் சொல்லியிருக்கிறார்கள். சென்னை போன்ற மாநகரங்களில் வட்ட வாரியாக கூட்டம் நடத்த உத்தரவாகியிருக்கிறது.

இந்தக் கூட்டங்களில் கலந்துகொள்கிறவர்கள் கட்சியில் தொடர்வார்கள் என்றும், கலந்துகொள்ளாதவர்கள் கட்சியைவிட்டுப் போகிறவர்கள் என்றும் கருதப்படுகிறார்கள். கொங்கு மாவட்டத்தில் ஒரு மாவட்டத் துணை நிர்வாகி தனக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால் கூட்டத்துக்கு வர முடியாது என்று தெரிவித்திருக்கிறார். அவரிடம் மாவட்டச் செயலாளர், ‘நீங்க வரலைன்னா வேற கட்சிக்குப் போறீங்கனு லிஸ்ட் தலைமைக்குப் போயிடும். அதனாலதான் சொல்றேன். வலியை பொறுத்துக்கிட்டு எட்டிப் பாத்துட்டுப் போயிடுங்க’ என்று உரிமையாக சொல்லியிருக்கிறார். அதன் பிறகே அந்த நிர்வாகி கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார். அப்போதும் கூட்டத்தில் சிலரே கலந்து கொண்டிருக்கிறார்கள். ‘இதுக்காய்யா என்னை வர சொன்னீங்க’ என்று அந்த நிர்வாகி வலியால் முணகிக் கொண்டே சென்றிருக்கிறார்.

இன்னும் சில மாவட்டங்களில் திமுகவுடன் தொடர்பு வைத்துக் கொண்டே இதுபோன்ற கூட்டங்களை மாசெக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சசிகலாவுடன் அலைபேசியில் பேசியவர்கள்கூட இன்னொரு பக்கம் திமுகவோடு பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆக, கட்சி மாறுகிறவர்களை கண்டுபிடிக்கத்தான் இந்தக் கூட்டங்கள் என்றபோதிலும் அந்தக் கூட்டங்களை நடத்தும் சிலரே கட்சி மாற தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் அமமுகவின் தற்போதைய நிலைமை” என்கிறார்கள்.

-வேந்தன்

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

வியாழன் 15 ஜூலை 2021