மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஜூலை 2021

மேகதாது - டெல்லி சென்ற தமிழக குழு: எடியூரப்பாவும் செல்கிறார்!

மேகதாது - டெல்லி சென்ற தமிழக குழு: எடியூரப்பாவும் செல்கிறார்!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஒன்றிய அமைச்சரிடம் கொடுக்க தமிழக சட்டப்பேரவை அனைத்துக் கட்சிக் குழு டெல்லி புறப்பட்டுச் சென்றது.

கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பாவின் மேகதாது அணைக் கட்டும் முயற்சிக்குத் தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. கடந்த 12ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்,

‘உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின், முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமான பணியையும் மேற்கொள்ளக் கூடாது. கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது.

இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளைத் தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், அனைத்து கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும்.

தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாகப் பிரதிபலிக்கும் வகையில், இக்கூட்டத்தின் தீர்மானங்களை ஒன்றிய அரசிடம் அனைத்து கட்சியினரும் நேரில் சென்று வழங்கும்’ என மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானங்களைப் பிரதமரிடமும், ஒன்றிய நீர் வளத் துறை அமைச்சரிடமும் கொடுப்பதற்காக, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் அடங்கிய குழுவினர் சென்னையிலிருந்து இன்று மாலை டெல்லிக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றனர்.

இவர்கள், நாளை மதியம் 1.30 மணியளவில் ஒன்றிய நீர்வள துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து மேகதாது அணை விவகாரம் குறித்து பேச உள்ளனர்.

டெல்லி புறப்படுவதற்கு முன் இக்குழுவில் இடம்பெற்றுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் பேசுகையில், “தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவே ஏழரை கோடி தமிழர்களின் ஒட்டுமொத்த குரலாக அனைத்து கட்சிகளும் சேர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஒன்றிய அமைச்சரிடம் எடுத்துக் கூற செல்கிறோம்” என்றார்.

அப்போது தமிழகத்தின் குரலுக்கு ஒன்றிய அரசு செவி சாய்க்குமா என்ற செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த வைகோ, “ ஒன்றிய அரசு மீது எனக்கு நம்பிக்கையில்லை. புதிய கல்வித் திட்டம், நீட், மேகதாது என மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழகத்துக்கு வஞ்சகம் செய்து வருகிறது” என்று கூறினார்.

தமிழக சட்டப்பேரவை அனைத்துக் கட்சிகள் குழு டெல்லி சென்றுள்ள நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது அடுத்தக் கட்ட நடவடிக்கையாகப் பிரதமர் மோடியை நாளை சந்தித்து மேகதாது அணை குறித்துப் பேசவுள்ளார். இதற்காக விமானம் மூலம் நாளை மதியம் 2 மணியளவில் டெல்லி புறப்படுகிறார்.

எடியூரப்பா மற்றும் தமிழக சட்டப்பேரவை அனைத்து கட்சித் தலைவர்கள் என இரண்டு பயணங்களும் மேகதாது விவகாரத்தில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

-பிரியா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

வியாழன் 15 ஜூலை 2021