மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஜூலை 2021

’வெளிச்சத்திற்கு வந்த தமிழ் மகள்’: அமைச்சர் ட்வீட்!

’வெளிச்சத்திற்கு வந்த தமிழ் மகள்’: அமைச்சர் ட்வீட்!

கீழடி அருகே கண்டெடுக்கப்பட்ட அழகிய கொண்டையுடன் கூடிய, பெண் உருவ சிற்பம் குறித்து ’இரண்டாயிரம் ஆண்டுகள் மறைந்திருந்து வெளிச்சத்திற்கு வந்திருக்கும் தமிழ் மகள்' என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட் செய்துள்ளார்.

கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தமிழர்களின் கலாச்சாரம்,பண்பாடு, நாகரீகம், போன்றவற்றை பறைசாற்றும் வகையில் ஆவணங்கள் கிடைத்து வருகின்றன.

அகழாய்வு பணியில் கிடைக்கக் கூடிய பொருட்கள் அனைத்துமே ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், பார்த்தவுடன் மனதை கவரும் வகையில் கிடைக்கக் கூடிய பொருட்கள் குறித்து ஒவ்வொரு முறையும் அமைச்சர் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்.

கீழடியில் சுடு மண்ணால் ஆன அழகிய வேலைபாடுகளுடன் கண்டெடுக்கப்பட்ட தொட்டி கிடைத்தபோது,“கீழடி, அள்ள அள்ளக் குறையாத தமிழ்ப் பண்பாட்டுச் செல்வம்” என்று அமைச்சர் பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மயிலாடும்பாறையில் நடைபெற்ற அகழாய்வு பணியில் உடைந்த நிலையில் நீண்ட வாள் ஒன்று கண்டறியப்பட்டது குறித்து, “ ஓடிந்த வாளானாலும் ஒரு வாள் கொடுங்கள்” என்ற கலைஞர் கருணாநிதியின் வைர வரிகளை போட்டு ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில், அகழாய்வில் அழகிய கொண்டையுடன் கூடிய, பெண் உருவம் போன்ற தோற்றம் கொண்ட மண்ணாலான சுதைச் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது குறித்து, அமைச்சர் தங்கம் தென்னரசு “'தமிழ்ப் பொண்ணு! இரண்டாயிரம் ஆண்டுகள் மறைந்திருந்து வெளிச்சத்திற்கு வந்திருக்கும் தமிழ் மகள். இந்த ஹேர் ஸ்டைல் எல்லாம் அந்த காலத்திலேயே அத்துப்படி” என்று நெகிழ்ச்சி பொங்க ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து கீழடி அகழாய்வு இணை இயக்குநர் பாஸ்கரன் பேசுகையில், 'மிகப்பழமை வாய்ந்த மண்ணாலான பாவையின் சிற்பம், கீழடியின் மிக குறிப்பிடத்தகுந்த கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்றாக அமையும். நமது சங்க இலக்கியங்களில் பெண்களின் சிகை அலங்காரம் குறித்து பல்வேறு புலவர்களால் பாடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தப் பாவையின் சிகை அலங்காரம் அழகு வாய்ந்தது மட்டுமல்லாமல், சிறப்பு வாய்ந்ததும் ஆகும்” என்று தெரிவித்தார்.

இன்று சமூக வலைதளங்களில் பலரும் இந்த கொண்டையுடன் கூடிய மண் சிற்பத்தை பகிர்ந்து வருவதை காண முடிகிறது.

-வினிதா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

வியாழன் 15 ஜூலை 2021