மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஜூலை 2021

காமராஜருக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்

காமராஜருக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின், அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 119ஆவது பிறந்தநாள் இன்று (ஜூலை 15) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் காமராஜர் குறித்த நினைவலைகளைப் பகிர்ந்தும், அவரின் சாதனைகளை நினைவு கூர்ந்தும் வருகின்றனர்.

காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, அண்ணாசாலை பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள காமராஜரின் திரு உருவச் சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிலைக்குக் கீழே அவரது உருவப்படமும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அரசின் சார்பில் காமராஜரின் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், அமைச்சர்கள் பொன்முடி, வெள்ளக்கோவில் சாமிநாதன், அனிதா ராதாகிருஷ்ணன், சேகர் பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியின் புகைப்படங்களைத் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதல்வர் ஸ்டாலின், “எளிமையின் இலக்கணமாகத் திகழ்ந்த கர்மவீரர் பிறந்தநாள் இன்று!

ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்த கல்வியைக் கிட்டிடச் செய்த பெருந்தலைவர்!

அவர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட உத்தரவிட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவர் வழியில் கழக அரசு என்றென்றும் காமராஜரின் நினைவைப் போற்றும்!" என்று முகநூலில் பதிவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கல்வியும், வேளாண்மையுமே நாட்டை வளர்ச்சிப் பாதையில் பெருமை அடையச் செய்யும் எனும் தனது தொலைநோக்கு பார்வையால் எண்ணற்ற பள்ளிகளும், அணைகளும் தந்து தமிழ் சமுதாயத்தைத் தலைநிமிரச் செய்த பெருமைக்குரியவர், கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன்,” என கூறியுள்ளார்.

விருதுநகரில் உள்ள காமராஜரின் நினைவு இல்லம் மின் விளக்கு மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள நூற்றாண்டு மணிமண்டபத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு இன்று காலை திமுக எம்.பி. கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதுபோன்று தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உட்பட பல்வேறு இடங்களிலும் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

புதுச்சேரி

அண்ணாசாலையில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு, அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் முதல்வர் என்.ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

-பிரியா

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

வியாழன் 15 ஜூலை 2021