மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஜூலை 2021

இயலாமையை மறைக்க என் மீது பழி போடுகிறார்: ஈபிஎஸ்

இயலாமையை மறைக்க என் மீது பழி போடுகிறார்: ஈபிஎஸ்

நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம். அதற்கான வழி எங்களுக்குத் தெரியும் என்றும் வாய் வீரம் காட்டிய முதல்வர் ஸ்டாலின், தன்னுடைய இயலாமையை மறைப்பதற்காக என் மீது பழி போடுகிறார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்பை வரவேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில் ’நீட் விவகாரத்தில் பாஜகவின் இரட்டை வேடம், அதிமுகவின் அடிமைச் சேவகம் ஆகிய இரண்டுக்கும் சேர்த்து, தனது தீர்ப்பின் மூலம் நெத்தியடி கொடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்’ என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் நேற்று (ஜூலை 14) எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தன்னுடைய தேர்தல் பரப்புரையின்போது , தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்பதுதான் என்று கூறியது.

நீட்டை ரத்து செய்யும் வழிமுறைகள் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், இப்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும் என்று அவர்களது இளைஞர் அணித் தலைவர் முதல் கடைக்கோடி பேச்சாளர்கள் வரை தேர்தல் மேடைகளில் வெற்று முழக்கமிட்டு, மக்களைத் திசை திருப்பி, வெற்றியும் பெற்றுவிட்டனர்.

கடந்த மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஆளுநர் உரையின் மீது பேசும்போதுகூட, நீட் தேர்வுக்குத் தமிழ்நாட்டு மாணவர்கள் தயாராக வேண்டுமா, வேண்டாமா என்று கேட்டேன்.

ஆனால், அதற்கு முதலமைச்சர் நேரடியாக எந்தப் பதிலும் தரவில்லை. நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பரிந்துரையின்பேரில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதில் அளித்தனர்.

நீட் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இன்றுவரை பல்வேறு திருப்பங்களைத் தமிழ்நாட்டு மாணவர்கள் சந்தித்துள்ளனர். திமுக அன்று அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில், ஒன்றிய அரசிதழ் நாள் 2010 டிசம்பர் 21இல் நீட் தேர்வு குறித்து அறிவிக்கப்பட்டது.

அப்போது, குலாம்நபி ஆசாத் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராகவும், திமுகவின் காந்திசெல்வன் இணை அமைச்சராகவும் பதவி வகித்தனர். 2011ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தது முதல் 2016 வரை, அவர் உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றார். உச்ச நீதிமன்றம் 2016 மே 9ஆம் தேதியிட்ட தீர்ப்பில் நீட் தேர்வின் மூலம்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று கூறியது. எனது தலைமையிலான அம்மாவின் அரசு, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று 2017 ஜனவரி 31 அன்று சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியது.

ஆனால், ஒன்றிய அரசு அதற்கான ஒப்புதலை வழங்கவில்லை. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மற்றும் பல் மருத்துவச் சேர்க்கையினை கொண்டுவரும் வகையில், மருத்துவக் கழகச் சட்டம் 1956 மற்றும் பல் மருத்துவச் சட்டம் 1948, அதனுடன் தொடர்புடைய இதரச் சட்டங்களின் தொடர்புடைய பிரிவுகளில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள ஒரு அவசரச் சட்டத்தினை உருவாக்கித் தர வேண்டி, பிரதமர், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு எனது தலைமையிலான அரசு 2020 ஜூலை 8 அன்று கடிதம் அனுப்பியது.

இப்படி, நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு கேட்டு ஒன்றிய அரசிடம் ஜெயலலிதாவின் அரசு கடுமையாகப் போராடியது.

தற்போதைய திமுக அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் நீட் பாதிப்பு குறித்து அறிய அமைத்த குழு, உச்ச நீதிமன்றத்தின் வரம்புக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளது என்று ஒரு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குக்குப் பதில் மனு தாக்கல் செய்த திமுக அரசு, நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி மட்டுமே இந்தக் குழு ஆராயும். இந்தக் குழுவின் பரிந்துரை நீட் தேர்வு நடைபெறுவதற்கு எந்தவிதமான இடையூறையும்,பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவோ, ஒன்றிய அரசின் சட்டங்களுக்கு எதிராகவோ இந்தக் குழு அமைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தது.

இந்த அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இந்தக் குழு நீட் தேர்வினை ரத்துசெய்ய அமைக்கப்பட்டிருப்பதாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. ஏ.கே. ராஜன் குழுவிற்கு எதிரான மனுவைத் தள்ளுபடி செய்த நிலையில், ஏதோ இன்றே இந்த அரசு தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டதுபோல, ஸ்டாலின் வானத்திற்கும், பூமிக்கும் குதித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

தேர்தல் நேரத்தில், ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் நீட் தேர்வை ரத்துசெய்ய நடவடிக்கை எடுப்போம். அதற்கான வழி எங்களுக்குத் தெரியும் என்றும் வாய் வீரம் காட்டிய ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய இயலாமையை மறைப்பதற்காக என் மீது பழி சுமத்தியுள்ளார்.

எங்களைப் பார்த்து, “பாதம் தாங்கிகள், எதிர்க்கட்சியான பிறகும் பாஜகவின் அடிமைகள்’’ என்றெல்லாம் அரசியல் நனி நாகரிகமின்றி, தான் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கான தகுதியை உணராமல், அறிக்கை என்ற பெயரில் நஞ்சை கக்கியிருக்கிறார்.

1999-2004 காலக்கட்டத்தில் ஒன்றிய பாஜக அரசில் பங்குகொண்டு, ஐந்து ஆண்டுகள் பதவி சுகம் அனுபவித்து, 2001ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு 26 இடங்களை அள்ளி வழங்கி குலாவியபோதும், இவர்கள் எதைத் தாங்கிக் கொண்டிருந்தார்கள் என்று திருப்பிக் கேட்க எங்களுக்கு ஒரு நிமிடம் ஆகாது. ஆனால், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரால் வளர்க்கப்பட்ட நாங்கள், அநாகரிகமாக நடந்து கொள்ள மாட்டோம்.

திமுகவினரின் பேச்சை கேட்டு, நீட் ஒழிந்துவிடும் என்று தேர்வுக்கு தயாராகாத மாணவர்கள் மத்தியில் செப்டம்பர் 12இல் நீட் தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பு அவர்களின் தலையில் இடிபோல் இறங்கியுள்ளது.

நீட் தேர்வுக்கு படிக்கும் படிப்பு, மருத்துவரான பின்பும் அவர்களுக்குக் கைக்கொடுக்கும். நீட் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது, மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் மன உளைச்சல் ஏற்படாமல் இருக்கவே, நீட் தேர்விற்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது என்ற அரிய விஞ்ஞான கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர்.

திமுக அரசு தேர்தலுக்காக வாய் ஜாலம் காட்டிவிட்டோமே என்ற நிலையில், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று அறிவிலிகள் அரற்றுவதுபோல் பிதற்றிக்கொண்டு, நேர்மையாக நடவடிக்கைகள் எடுத்த ஜெயலலிதாவின் அரசைத் தூற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

2019இல் மருத்துவம் பயில அரசு பள்ளிகளில் பயின்ற 6 மாணவர்கள் மட்டுமே தேர்வான நிலையில், 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டை சட்டமாகி, அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை முதலமைச்சராக இருந்தபோது நனவாக்கினேன். இதன் மூலம் 2020ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளில் படித்த 435 மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும், 17 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இன்றைய திமுக ஆட்சியாளர்கள் நீட் சம்பந்தமாக, தேர்தலின்போது அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றும் வகையில் உரிய நடவடிக்கையினை உடனடியாக எடுக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-வினிதா

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

வியாழன் 15 ஜூலை 2021