மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஜூலை 2021

தடுப்பூசி தட்டுப்பாடு : டெல்லி செல்லும் சுகாதார அமைச்சர்!

தடுப்பூசி தட்டுப்பாடு : டெல்லி செல்லும் சுகாதார அமைச்சர்!

தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விவாதிப்பதற்காக நாளை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரை சந்திக்கவுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தேசிய நலவாழ்வு மைய கூட்டரங்கில் மாநில அளவிலான தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக அரசுக்கு 9 கோடி மதிப்பிலான 1000 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இன்று(ஜூலை 14) வழங்கப்பட்டது.

இதனை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். அப்போது, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சுகாதாத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,” தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த கால கட்டத்தில் ஆக்சிஜன் தேவை அதிகளவில் தேவைப்பட்டது. முதல்வர் வேண்டுகோளின்படி பல தன்னார்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி வருகின்றன. அதுபோன்றுதான் பூமி என்ற தன்னார்வ அமைப்பு 1000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளன.

ஜனவரி மாதத்திலிருந்து மாதத்திற்கு 40,50 பேர் டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்டு வந்தனர். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது நலமுடன் இருக்கிறார்கள். கொசு உற்பத்தியை தடுப்பதற்கு சென்னை மாநகராட்சி சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் சந்திப்பது தொடர்பான கேள்விக்கு, “ நாளை பிற்பகல் 2.30 மணியளவில் ஒன்றிய சுகாதார அமைச்சரை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த சந்திப்பில் தடுப்பூசி தட்டுப்பாடு, ஹெச்எல்எல் மற்றும் பாஸ்டியர் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் மற்றும் மாணவர் சேர்க்கை, 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, கொரோனா, கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து வழங்குதல் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து பேசவுள்ளோம்” என்று தெரிவித்தார்.

நீட் ஆய்வுக் குழு தொடர்பான கேள்விக்கு,” 83 ஆயிரம் பேரிடம் பெற்ற கருத்துகளை ஆய்வு செய்து 165 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஏ.கே.ராஜன் குழு முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளது. இதுகுறித்தான விவரங்களை முதல்வர் சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, ஆராய்ந்த பின் செய்தியாளர்களிடம் தெரிவிப்பார்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ”இதுவரை கருப்பு பூஞ்சை நோய்க்கு 3950 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான மருந்து 21,375 வயல் கையிருப்பில் உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கொரோனா விதிமீறலில் ஈடுபடுபவர்களிடம் அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதையெல்லாம் தாண்டி மக்களுக்கு சுய கட்டுப்பாடு தேவை.

ஒவ்வொரு செய்தியாளர்கள் சந்திப்பிலும், ஆய்வுக்காக மாவட்டங்களுக்கு செல்லும்போது அனைத்து அமைச்சர்களும், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதைதான் வலியுறுத்துகிறோம். கொரோனாவிலிருந்து நாம் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இங்கிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரம் என்ற அளவில் இருக்கிறது.

அதனால்தான் தளர்வுகள் அளிக்கப்படும்போது ஒருசில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அரசியல் கூட்டங்களுக்கு தடை, திருமணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. இந்த சட்டங்கள், திட்டங்கள் எல்லாமே நமக்குதான் என்பதை பொதுமக்களும் உணர்ந்து செயல்பட வேண்டும். தேர்தல் காரணமாகதான் இரண்டாவது அலை ஏற்பட்டது என்ற குற்றசாட்டு வைக்கப்பட்டது. மீண்டும் அரசியல் நிகழ்வுகள் நடத்தி, அதன்மூலம் மூன்றாவது அலைக்கு நாம் வழிவகுத்துவிட கூடாது. அதற்கு அரசியல் கட்சிகள் காரணமாக அமைந்து விடக் கூடாது” என்று தெரிவித்தார்.

-வினிதா

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

புதன் 14 ஜூலை 2021