மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஜூலை 2021

புதிய ஹைதர் அலி- போட்டி தமுமுக: மண்ணடியில் நடந்தது என்ன?

புதிய ஹைதர் அலி- போட்டி தமுமுக:  மண்ணடியில் நடந்தது என்ன?

சென்னை மண்ணடியில் வடமரைக்காயர் தெருவில் ஜவாஹிருல்லா தலைமையில் மனித நேய மக்கள் கட்சி அலுவலகமும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அலுவலகமும் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் அதற்கு சில மீட்டர்கள் தூரத்திலேயே இருக்கும் அங்கப்ப நாயக்கன் தெருவில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாநிலத் தலைமையகம் என்ற பெயரில் ஒரு இடத்தில் நேற்று (ஜூலை 13) போர்டு வைக்கப்பட்டது. கொஞ்ச நேரத்திலேயே இது மமக அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு தெரியவர, தகவல் வெகுவேகமாகப் பரவுகிறது. உடனடியாக மண்ணடியில் இருக்கும் மமக தமுமுக அலுவலகத்துக்கு நூற்றுக்கணக்கான நிர்வாகிகளும், தொண்டர்களும் குவிந்தார்கள்.

தகவல் அறிந்து மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப், மாநில அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் ஜெயினுலாபுதீன், மாநில இளைஞரணிச் செயலாளர் புழல் ஷேக் முகமது அலி உள்ளிட்டோரும் தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவுடன் போனில் பேசி நிலவரத்தை விளக்கினார்கள். அதன்பேரில் உடனடியாக கடற்கரை காவல்நிலையத்தில் புதிய போர்டு வைத்தவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸ் பேச்சுவார்த்தைக்கு ஜெயினுலாபுதீன் சென்றுவிட மாநிலத் தலைமையகத்தில் யாக்கூப்பும், ஷேக் முகமது அலியும் இருந்தனர். நூற்றுக் கணக்கில் கூடிய தொண்டர்கள், அந்த போர்டை போய் அகற்றிவிட்டுவருவோம் என்று குரல் எழுப்ப, ‘போலீஸ்ல புகார் கொடுத்திருக்கோம். வெயிட் பண்ணுங்க’என்று அவர்கள் கூறினார்கள். ஆனால் ஐந்து மணி நேரமாகியும் பேச்சுவார்த்தை நீடித்தது.

“ஏற்கனவே தமுமுக பொதுச் செயலாளராக இருந்து 2018 இல் சிங்கப்பெருமாள் பொதுக்குழுவில் நீக்கப்பட்ட எஸ். ஹைதர் அலிதான் இதற்குக் காரணம். தமுமுக என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என்று ஹைதர் அலிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. அதனால் அந்த புதிய பெயர் பலகையை அகற்ற வேண்டும்” என்றும் ஜவாஹிருல்லா தரப்பினர் வலியுறுத்தினார்கள்.

ஆனால் புதிய பலகை வைத்தவர்களோ, “நாங்கள் அந்த எஸ். ஹைதர் அலியின் ஆதரவாளர்கள் இல்லை. எம். ஹைதர் அலி என்பவர் பெயரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை தமிழ்நாடு சொசைட்டி ஆக்ட்டின்படியும், டிரேட் மார்க் சட்டத்தின்படியும் 2015 இலேயே பதிவு செய்திருக்கிறோம். பதிவு எண் 1/2015. 30-4-2021 இல் இது குறித்து பத்திரிகைகளில் விளம்பரமும் செய்திருக்கிறோம். அதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லாத நிலையிதான் இந்த அலுவலகத்தைத் திறந்திருக்கிறோம். நீதிமன்ற தடை உத்தரவு எஸ்.ஹைதர் அலிக்குதான் இருக்கிறது ” என்று பதில் கூற போலீசார் குழம்பிக்கொண்டிருந்தனர்.

அதற்குள் ஐந்து மணி நேரம் ஆன நிலையில் இரவு 9.30 மணியளவில் மமக தலைமையகத்தில் இருந்த தொண்டர்கள் புறப்பட்டுப் போய் அரைகிலோ மீட்டர் தூரத்திலே இருக்கும் அந்த புதிய போர்டை கிழித்துத் தள்ளினார்கள். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதமும் தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது. வீட்டு வாசலில் நின்ற பெண்களை எல்லாம் உள்ளே செல்லுங்கள் என்று உத்தரவிட்டுக்கொண்டே ஒரு தரப்பினர் வேகமாக சென்றனர். இது தொடர்பாக அந்த இடம் பதற்றமாக காணப்பட்டது. இதையடுத்து இரு அலுவலக பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதிதாக போர்டு வைக்கப்பட்ட இடம் தமுமுகவின் கிளை அமைப்பான இஸ்லாமிய பிரச்சாரப் பேரவையின் அலுவலமாக செயல்பட்டு வந்தது. அப்போது அந்த இடத்துக்கு அட்வான்ஸ் கொடுத்தவர் தமுமுகவின் அப்போதைய பொதுச் செயலாளரான ஹைதர் அலிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.அந்த இடத்தில்தான் தமுமுக மாநிலத் தலைமையகம் என்று இப்போது போர்டு வைத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து தமுமுக துணைப் பொதுச் செயலாளர் (ஹைதர் அலி தரப்பு) நெல்லை உஸ்மானிடம் மின்னம்பலம் சார்பாகப் பேசினோம்

“2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயக்கங்கள் பதிவு சட்டபடி முறையாக பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெற்ற அமைப்பு தான் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம்.பதிவு எண் 2015/01.

இந்த பதிவின் படி தமிழகத்தில் இந்த பதிவுள்ளவர்கள் மட்டும் தமுமுக பெயரை பயன்படுத்தி செயல்பட முடியும் என்கிறது தமிழக அரசின் சட்டத்துறை மேலும் அதை உறுதிப்படுத்தியிருக்கிறது நீதித்துறை.

இந்நிலையில் ஜவாஹிருல்லா தன்னுடையதாக சொல்கின்ற தமுமுக பெயரில் எந்த பதிவும் இல்லை, எந்த அரசு ஆவணங்களும் இல்லை.

அந்த பதிவை கொண்டு தமுமுக என்கிற பெயரில் நாங்கள் செயல்படும் போது ஜவாஹிருல்லா தரப்பு பல்வேறு புகார் மனுக்களை பல்வேறு பகுதிகளில் கொடுக்கின்றது. ஆனால் அந்தப் புகார்களுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லாததால் புகாரை எடுத்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் நேற்று இரவு வன்முறையைக் கையிலெடுத்துள்ளனர்.

நீதிமன்ற தீர்ப்பு வந்தது 2020ஆம் ஆண்டு. தமுமுக பதிவு செய்யப்பட்ட ஆண்டு 2015 ஆம் ஆண்டு. பதிவு பெற்று செயலாற்றி வரும் தமுமுகவிற்கு எதிராக எந்த தடையும் இல்லாததால் தான் காவல்துறை எங்களைத் தடுக்கவில்லை” என்கிறார்.

இதுகுறித்து மமகவின் இளைஞரணிச் செயலாளர் புழல் ஷேக் முகமது அலியிடம் மின்னம்பலம் சார்பாக பேசினோம்.

“ஏற்கனவே சிங்கப்பெருமாள் கோவிலில் நடந்த தமுமுக பொதுக்குழு மூலம் ஒருமனதாக நீக்கப்பட்ட எஸ். ஹைதர் அலிக்கு நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தமுமுக பெயரில் செயல்பட அனுமதி இல்லை. ஆனால் குறுகிய நோக்கத்தோடு சட்டத்தை ஏமாற்றும் வகையில் எம். ஹைதர் அலி என்பவர் பெயரில் டிரேட் மார்க் சட்டத்தில் செய்யப்பட்ட பதிவை வைத்துக் கொண்டு இப்போது இந்த மலிவான செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அவர்கள் டிஎம்எம்கே என்ற பெயரில் பதிவு செய்திருக்கிறார்கள். இதுபோலவே டிஎம்கே என்ற பெயரில் பதிவு செய்து கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை உரிமை கொண்டாட முடியுமா? அதுபோலத்தான் இது. மக்கள் இயக்கமாக இந்தியாவிலேயே மிகப்பெரிய சேவை நிறுவனமாக இயங்கி வரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சுருக்கமான பெயரைச் சொல்லி டிரேட் மார்க் சட்டத்தில் பதிவு செய்து இயக்கத்துக்கு உரிமை கோருவது, சட்டத்தின் சந்துபொந்துகளை பயன்படுத்தும் கீழ்த்தரமான செயல். நாங்கள் எப்போதுமே சட்டத்தின்படி செயல்படுவோம்” என்கிறார்.

புதிதாக இப்போது வெளியே வந்திருக்கும் எம். ஹைதர் அலி யார் என்று விசாரித்தோம்.

“காஞ்சி மாவட்ட தமுமுகவில் ஆறேழு வருடங்களுக்கு முன் இருந்தவர். அப்போது காஞ்சி மாவட்டத்தில் வளர்ந்துகொண்டிருந்த தாம்பரம் யாக்கூபுக்கும் இவரும் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்துகொண்டிருந்தனர். தொழில் போட்டி இயக்கப் போட்டியாக மாறியது. இருவரும் எதிரெதிர் துருவமானார்கள். ஒரு கட்டத்தில் எம். ஹைதர் அலி ஓரங்கட்டப்பட்டார். இவர்தான் இப்போது நீக்கப்பட்ட தமுமுக பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலிக்கு ஆதரவாக களமிறங்கியிருக்கிறார். எல்லாவற்றுக்கும் பின்னால் ஒரு அரசியல் கணக்கு இருக்கிறது” என்கிறார்கள்.

அந்த இன்னொரு ஹைதர் அலியிடம் இன்று பகல் அலைபேசியில் பேசினோம். நாம் என்ன ஊடகம் என்றெல்லாம் விசாரித்துவிட்டு,”நான் பிறகு உங்களிடம் பேசுகிறேன்” என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.

சில நிமிடங்களில் அவரது அறிக்கை ஒன்றை நமக்கு அனுப்பி வைத்தார். அதில், “தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் எம். ஹைதர்அலி” என்று தன்னை விளித்துக் கொண்டுள்ள அவர், “ தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் தமிழ்நாடு சொஸைட்டி சட்டம் கீழும் (பதிவு எண் 1/2015),இந்திய காப்புரிமை சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்பட்டு முறையாக இயங்கி வருகிறது.

இந்த நிலையில் மண்ணடியில் உள்ள எங்கள் தலைமையகத்தின் பெயர்ப்பலகை புனரமைக்கப்பட்டு மாட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா தூண்டுதலின் பேரில் நேற்று நண்பகலில் காவல்துறை வசம் புகார் அளித்து இருக்கின்றனர்.

புகாரின் அடிப்படையில் எங்களிடம் விசாரணை செய்தசென்னை மாநகர கடற்கரை காவல் நிலைய ஆய்வாளரிடம் எங்கள் அமைப்பு சார்ந்த ஆவணங்கள் ஒப்படைத்து அவர்கள் நீதிமன்ற தடை இருப்பதாக குறிப்பிடும் எஸ். ஹைதர்அலி நான் அல்ல என்பதையும் அந்த இடைக்கால வழக்கு தமுமுக அறக்கட்டளை தொடர்பானது என்பதையும் நீதிமன்ற இடைக்கால உத்தரவை அவர்கள் எப்படி மோசடியாக தங்களுக்கு சாதகமாக சொல்கிறார்கள் என்று விளக்கினோம்.

ஆனால் இதையெல்லாம் காதில் போட்டு கொள்ளாமல் காவல் உதவி ஆணையாளர் கோடிலிங்கம் தலைமையில் ஜவாஹிருல்லா தூண்டுதலின் பேரில் ஊர்வலமாக வந்த குண்டர்கள் எங்கள் அமைப்பின் நிர்வாகிகளை தாக்கியதோடு எங்கள் அமைப்பின் பெயர்பலகையை சேதப்படுத்தி சென்றுள்ளனர்.இவையனைத்தையும் கோடிலிங்கம் தலைமையிலான காவல்துறை எங்கள் உடைமைகளை சேதப்படுத்தும் வரை குண்டர்களுக்கு பாதுகாப்பாக வந்ததோடு வந்த வேலை முடிந்ததும் அவர்களை பத்திரமாக அழைத்தும் சென்றதை காணொளி மூலம் அனைவரும் காணலாம்.

மாநிலத்தில் உள்ள எந்த தரப்புக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் அனைவருக்கும் நல்லாட்சி வழங்கிட உழைத்து கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு களங்கத்தையும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையிலும் குண்டர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட உதவி ஆணையாளரை உடனடியாக பணிமாற்றம் துறை ரீதியான நடவடிக்கை ஆகியவை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதோடு,திராவிட முன்னேற்ற கழகத்தின் சின்னத்தில் தேர்தலில் வெற்றி பெற்று விட்ட காரணத்தாலேயே ஒட்டுமொத்த அரசு அதிகாரம் தனக்கு இருப்பதாக இறுமாப்புடன் செயல்படும் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மண்ணடியில் மேலும் பதற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக போலீசார் சுற்றிச் சுற்றி வருகின்றனர். இரு தரப்பிலும் சிலரை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-வேந்தன்

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

புதன் 14 ஜூலை 2021