ஜூலை 18ல் அனைத்துக் கட்சி கூட்டம்: ஒன்றிய அரசு அழைப்பு!

politics

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி வரும் 18ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.

ஜூலை 19 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும். இந்த அவை 19 நாட்கள் நடைபெறும். இதில் 40 மசோதாக்கள், 5 அவசர சட்டங்கள் நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது என இரண்டு நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்திருந்தார். மேலும், உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதல் டோஸ் செலுத்திக் கொண்டவர்கள் ஆர்டி-பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள தேவையில்லை. அமர்வின் போது பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன் ஜூலை 18 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.

ஜூலை 18ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பங்கேற்க இருக்கின்றன. கூட்டத்தொடரின்போது அவையின் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக இந்தக் கூட்டம் கூடுகிறது.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம், நீட் தேர்வு உள்ளிட்டவைகள் குறித்து கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது, தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடராகும்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *