மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஜூலை 2021

வரதட்சணை: உண்ணாவிரதப் போராட்டத்தில் கேரள ஆளுநர்!

வரதட்சணை: உண்ணாவிரதப் போராட்டத்தில் கேரள ஆளுநர்!

கேரளாவில் வரதட்சணைக்கு எதிராக அம்மாநில ஆளுநர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கேரள மாநிலம் கொல்லம் சாஸ்தான் கோட்டையைச் சேர்ந்தவர் கிரண் குமார். மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் நிலமேடு பகுதியைச் சேர்ந்த, விஸ்மயா என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

இந்நிலையில், கடந்த ஜூன் 21 ஆம் தேதி விஸ்மயாவின் உடல் அவரது கணவர் வீட்டில் உள்ள குளியலறையில் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

ஆனால் இது வரதட்சணை கொடுமையால் நடந்தது என்று பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். பெண்ணின் தந்தை கூறுகையில், எனது மகளுக்கு 800 கிராம் தங்கம் போட்டு, 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், டொயோட்டா யாரிஸ் கார் வாங்கிக் கொடுத்து திருமணம் செய்து வைத்தேன். ஆனால் என் மகளை திருமணம் செய்துகொண்ட கிரணுக்கு கார் வாங்கிக் கொடுத்ததில் மகிழ்ச்சி இல்லை. காருக்குப் பதிலாக பணம் வேண்டுமென்று கேட்டு, தினமும் எனது மகளை கொடுமைப்படுத்தி வந்தார் என்று கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து கடந்த ஜூன் 22ஆம் தேதி கிரண்குமார் கைது செய்யப்பட்டார். விஸ்மயா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தனது உறவினருக்குத் தான் காயமடைந்த சில புகைப்படங்களை அனுப்பியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விஸ்மயா தற்கொலை தொடர்பாக கேரள மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

அதே ஜூன் 21ஆம் தேதி திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அர்ச்சனா(24) என்ற பெண் மர்மமான முறையில் இறந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அர்ச்சனாவின் கணவர்தான் தற்கொலைக்குக் காரணம் என்று பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். அர்ச்சனாவின் கணவர் சுரேஷின் தந்தை ரூ. 3 லட்சம் கேட்டு வாங்கியதாகவும், அதனைத் தொடர்ந்தும் பணம் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பிரச்சினை நடந்து வந்த நிலையில் அர்ச்சனா தற்கொலை செய்துகொண்டதாகக் கணவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அர்ச்சனாவின் தந்தை அசோகன், தனது மகள் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று அளித்த புகாரின் பேரில் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

இதுபோன்று அடுத்தடுத்து சம்பவங்கள் நடந்தது முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் வரதட்சணை கேட்பதைக் கண்டித்து உண்ணாவிரதம் மற்றும் போராட்டம் நடத்தக் கேரளாவைச் சேர்ந்த காந்தியன் அமைப்புகள் முடிவு செய்திருந்தன. இந்த போராட்டத்திற்குக் கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் ஆதரவு தெரிவித்துள்ளார். வரதட்சணை கொடுப்பதும், கேட்பதும் தவறு என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அவர் ஆளுநர் மாளிகையில் இன்று காலையில் உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளார்.

காலை 8 மணி முதல் 4.30 வரை ராஜ் பவனில் உண்ணாவிரதம் இருக்கும் அவர், 4.30 முதல் 6 மணி வரை காந்தி பவனில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்.

-பிரியா

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

புதன் 14 ஜூலை 2021