மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஜூலை 2021

நீட் குழு : 165 பக்கங்கள் கொண்ட அறிக்கை சமர்ப்பிப்பு!

நீட் குழு : 165 பக்கங்கள் கொண்ட அறிக்கை சமர்ப்பிப்பு!

நீட் தேர்வு தாக்கம் குறித்த ஆய்வறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் சமர்ப்பித்தார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு பாதிப்பு மற்றும் மாற்றுவழி குறித்து ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை கடந்த ஜூன் 10ஆம் தேதி தமிழ்நாடு அரசு அமைத்தது. ஒரு மாதத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அதன்படி, இக்குழு நான்கு ஆய்வு கூட்டங்களை நடத்தி, நீட் தேர்வு தாக்கம் குறித்து பல்வேறு தரவுகளை திரட்டியும், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும் ஆய்வு மேற்கொண்டது.

இதற்கிடையில், நீட் ஆய்வுக் குழுவை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ஏ.கே.ராஜன் குழு செல்லும் என்று கூறி பாஜக மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நீட் குழுவுக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று (ஜூலை 14) நீதிபதி ஏ.கே.ராஜன் குழு முதல்வர் ஸ்டாலினிடம் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஏ.கே.ராஜன்,” நீட் தேர்வின் தாக்கம் குறித்து 165 பக்கங்கள் கொண்ட முழு அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. நீட் தேர்வின் தாக்கம் தொடர்பான முக்கிய அம்சங்கள் முதல்வரிடம் விளக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் 86,342 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். பெரும்பாலானவர்கள் நீட் தேர்வு வேண்டாம் என்றே கருத்து தெரிவித்துள்ளனர். மற்றபடி ஆய்வு தொடர்பான தகவல்களை நாங்கள் சொல்லக்கூடாது. சொன்னால் தப்பாகிவிடும். அதைச் சொல்வதற்கான அதிகாரமும் எங்களிடம் இல்லை.

அனைத்து விதமான கருத்துக்களையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறோம். எங்களது தனிப்பட்ட கருத்துக்களை நாங்கள் ஆய்வு அறிக்கையில் முன் வைக்கவில்லை.

கருத்துக்கள் அடிப்படையிலான ஆய்வறிக்கையை வழங்குவது மட்டும் தான் எங்களுடைய பணி. அதனடிப்படையில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை எங்களால் சொல்ல முடியாது. மற்றவைகள் எல்லாம் தமிழ்நாடு அரசு தான் தெரிவிக்கும். ஆய்வு நடத்தியது திருப்தியாக இருந்தது. எங்களுடைய பணி காலம் முடிவடைந்தது” என்று தெரிவித்தார்.

அந்த அறிக்கையின் அடிப்படையிலேயே தமிழ்நாடு அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என தெரிகிறது.

இந்த சூழலில் மருத்துவ படிப்புக்கான முதுநிலை நீட் தேர்வு செப்டம்பர் 11ஆம் தேதியும், இளங்கலை நீட் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

புதன் 14 ஜூலை 2021