மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஜூலை 2021

‘நல்லா இருக்க தமிழ்நாட்டை ஏன் பிரிக்கணும்’: வடிவேலு

‘நல்லா இருக்க தமிழ்நாட்டை ஏன் பிரிக்கணும்’: வடிவேலு

தமிழ்நாட்டை எதற்காகப் பிரிக்க வேண்டும், அதைக் கேட்டாலே தலை சுற்றுகிறது என்று நடிகர் வடிவேலு கூறினார்.

அதிகரித்து வரும் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்குத் தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அதனடிப்படையில் பலரும் நிதியுதவி வழங்கி வரும் நிலையில், நகைச்சுவை நடிகர் வடிவேலு இன்று (ஜூலை 14) முதல்வரைச் சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, “முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். மிகவும் எளிமையாக, குடும்பத்தில் ஒருவர் போல பேசினார். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் கொடுத்தேன்” என்றார்.

அப்போது அவரிடம், திமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ததால், உங்களுக்குப் பட வாய்ப்புகள் குறைந்ததாகப் பேச்சுகள் பரவலாக உள்ளது. இப்போது 10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. இனிவரும் காலங்களில் அதிகமான திரைப்படங்களில் உங்களைப் பார்க்கலாமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, “கண்டிப்பாக நல்லதே நடக்கும்” என்றார்.

மேலும், “உலகமே உற்றுப்பார்க்கும் அளவுக்கு கொரோனா பரவலைத் தமிழக முதல்வர் கட்டுப்படுத்தியுள்ளார். அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என மக்களைக் கெஞ்சிக் கேட்டு, அவர்களைத் தன்வசப்படுத்தி அழகாகச் செய்தார். மக்களே ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளும் அளவிற்கு முதல்வரின் பேச்சு இருந்தது. பெண்களுக்கு இலவச பயணம் என மக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றுகிறார். உண்மையில் மக்களுக்கு இதுவொரு பொற்கால ஆட்சி என நினைக்கிறேன்” என்றார்.

கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசிய அவர், ”மாஸ்க் போடுங்கள் என்றால், ஒரு சிலர் நாங்கள் எல்லாம் தேக்கு என்கின்றனர். தேக்காக இருந்தாலும் கொரோனா அரித்துவிடுகிறது எனச் சொல்கிறோம். ஆனாலும் கேட்பதில்லை.

அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நான் இரண்டு டோஸும் செலுத்திக்கொண்டேன். இன்னும் 40 ஊசி போட சொன்னாலும் போட்டுக்கொள்வேன். மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி சந்ததியைக் காக்க வேண்டும். தயவுசெய்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

திரையுலகம் அடுத்தடுத்த மாற்றங்களைக் கண்டு வரும் நிலையில், அதுகுறித்து பேசிய வடிவேலு, ”சினிமா அடுத்த நிலைக்குச் சென்றுவிட்டது. சினிமாவிலும் வாரிசுகள் என வரிசையாகப் போய்க்கொண்டிருக்கிறது. இனி ஓடிடி ஒரு குட்டி போடும். காலத்துக்கேற்றவாறு நாமும் நடிக்க வேண்டியதுதான். படம் நடிப்பது தொடர்பாக நிறையப் பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டிருக்கிறது. நல்லதே நடக்கும்” எனக் குறிப்பிட்டார்.

கொங்குநாடு சர்ச்சை குறித்து, “ராம்நாடு, ஒரத்தநாடு என பல நாடுகள் இருக்கிறது. இதையெல்லாம் பிரித்தால் அவ்வளவுதான். நல்லா இருக்கும் தமிழகத்தை எதற்குப் பிரிக்க வேண்டும். அரசியல் பேசவில்லை, அது வேண்டாம். இவற்றையெல்லாம் கேட்கும்போது தலை சுற்றுகிறது” என்றார் வடிவேலு.

-பிரியா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

புதன் 14 ஜூலை 2021