மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஜூலை 2021

சிறப்புக் கட்டுரை: சும்மா வந்ததா தமிழ்நாடு..? பகுதி 1

சிறப்புக் கட்டுரை: சும்மா வந்ததா தமிழ்நாடு..? பகுதி 1

கப்பிகுளம் ஜெ.பிரபாகர்

தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்றும், மேற்கு மாவட்டங்களை கொங்கு நாடு என்றும், சென்னை மாநகராட்சியை யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்றும் பல்வேறு கருத்துகளை சிலர் தேர்தல் அரசியலுக்காக முன்வைத்து வருகின்றனர். கற்காலம் தொடங்கி நிகழ்காலம் வரை நாகரிகத்திலும், பண்பாட்டிலும் தனித்துவம் கொண்டது தமிழ்நாடு. தமிழ் மொழிக்கென்று தனிச்சிறப்புண்டு. தமிழ்நாடு என்ற மாநிலம் உருவான வரலாறும் சிறப்புமிக்கது.

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு முன்பு வரை, இந்தியா என்ற நாட்டின் பெயர் கிடையாது. அன்றைய இந்திய நிலப்பரப்பில் கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாக வசதிக்காக கல்கத்தா பிரசிடென்சி, பாம்பே பிரசிடென்சி, மெட்ராஸ் பிரசிடென்சி என்ற மூன்று மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. மெட்ராஸ் பிரசிடென்சி என்றழைக்கப்பட்ட அன்றைய சென்னை மாகாணத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மட்டுமின்றி கர்நாடகத்தின் பல பகுதிகளும், ஒடிசாவின் சில பகுதிகளும் இருந்தன. கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகத்திலிருந்து இங்கிலாந்து அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் சென்றபோதும், சென்னை மாகாண ஆட்சியமைப்பு முறை அப்படியேதான் தொடர்ந்தது.

கி.பி.1930களுக்குப் பிறகு இந்திய மாகாணங்களுக்கு ஓரளவுக்கு சுயாட்சி உரிமை கிடைத்தது. மாகாணங்களில் தேர்தல்கள் நடைபெற்று இரட்டை ஆட்சி முறை நடைமுறைக்கு வந்தது. மன்னர் ஆட்சிப்பொறுப்பில் வாழ்ந்து வந்த சமஸ்தானங்கள் இந்த சுயாட்சி ஜனநாயக உரிமையைப் பெற்றுக்கொள்ள விரும்பினார்கள்.

1912ஆம் ஆண்டில் கொல்கத்தா மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஒடிசா, பீகார் மாகாணங்கள் நிர்வகிக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு 1936ஆம் ஆண்டு ஒடிசா மாகாணம் தனியாகவும், பீகார் மாகாணம் தனியாகவும் பிரிக்கப்பட்டன. பிரிட்டிஷ் ஆட்சியின்போதே, இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டுமென எழுந்த கோரிக்கையால்தான் ஒடிசா மாகாணம் பிரிக்கப்பட்டதாகப் பேசப்பட்டது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உலகநாடுகளில் குறிப்பாக ஐரோப்பியாவில் இனத்தின் அடிப்படையிலும், மதங்களின் அடிப்படையிலும், நாடுகள் தனித்தனியே பிரிந்து கொண்டன. புதிய நாடுகள் உருவாகின. அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. மதத்தின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் பிரிந்து கொள்வதற்கான போராட்டங்கள் நடைபெற்றன. உள்நாட்டில் மொழியின் அடிப்படையில் மாகாணங்களைத் தனித்தனி மாநிலங்களாகப் பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது.

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை பெற்றபோது, ஒன்பது மாநிலங்களும், மூன்று யூனியன் பிரதேசங்களும் இருந்தன. அப்போது, தெலுங்கு பேசுகின்ற மக்கள் ‘விசால ஆந்திரா’ உருவாக்க வேண்டுமென்றும், கன்னடம் பேசுகின்ற மக்கள், ‘அகண்ட கர்நாடகம்’ அறிவிக்க வேண்டுமெனவும், மலையாளம் பேசுகின்ற மக்கள், ‘ஐக்கிய கேரளா’ என்று பிரிக்கப்படக் கோரியும், மராட்டி பேசுகின்ற மக்கள், ‘சம்யுக்த மகாராஷ்டிரம்’ நிறைவேற்றிடவும், குஜராத்தி பேசுகின்ற மக்கள், ‘மகா குஜராத்’ அமைக்க வேண்டுமென்றும் போராட்டங்களைத் தொடங்கியிருந்தார்கள். இந்தியா விடுதலை அடைந்த மறுநாளில் இருந்தே தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலுவடையத் தொடங்கியிருந்தது.

சென்னை மாகாணத்துக்கு உட்பட்ட பகுதிகளாக கன்ஜம், விசாகப்பட்டினம், கோதாவரி, கிருஷ்ணா, கர்நூல், நெல்லூர், குண்டூர், அனந்தபூர், பெல்லாரி, வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு, மதராஸ், சேலம், நீலகிரி, தென் கனரா, மலபார், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி என்று 21 மாவட்டங்கள் இருந்தன. பங்கபள்ளி, புதுக்கோட்டை, சந்தூர் உள்ளிட்ட சமஸ்தானங்களும், புதுச்சேரி உள்ளிட்ட பிரெஞ்சு காலனியாதிக்கப் பகுதிகளும் சென்னை மாகாணத்தின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டன.

சென்னை மாகாணத்தில் தமிழ் பேசுகின்ற மக்கள் பெரும்பான்மையாகவும், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது பேசுகின்ற மக்கள் சிறுபான்மையாகவும் இருந்து வந்தனர்.

மொழிவழி மாநிலங்களை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கை நாடெங்கும் பரவியதால், பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர அலகாபாத் நீதிமன்றத்தின் நீதிபதி எஸ்.கே.தார் (S.K.Dhar) தலைமையில் States Reorganisation Commission - SRC எனப்படும் மாநிலங்கள் மறுகட்டமைப்பு ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கையில் நிர்வாக வசதிகளுக்காக மாநிலங்கள் பிரிக்கப்படலாம், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிப்பது அவசியமற்றது என்று தெரிவித்துவிட்டனர். ஆனாலும், பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை. அதன் பின்னர் பிரதமர் ஜவஹர்லால் நேரு, உள்துறை அமைச்சர் வல்லபபாய் படேல், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பட்டாபி சீதாராமையா ஆகிய மூவரைக்கொண்ட ஜேவிபி (JVP) ஆணையம் அமைக்கப்பட்டது. அந்தக் குழுவும் ஆய்வு செய்த பின்பு மொழிவாரி மாநிலங்கள் தேவையில்லை என்ற கருத்தையே முன்வைத்தனர். இந்திய விடுதலைக்காக ஒன்றுபட்டுப் போராடிய நம் மக்கள் மொழி உணர்வால் பிரிந்து ஒற்றுமை சீர்குலைந்துவிடக் கூடாது என்று பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு கருத்து தெரிவித்தார்.

சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர், “மொழிவாரி மாநிலங்கள் தேவையான ஒன்றுதான். ஆனால், அதனை முரட்டுத்தனமாக உருவாக்க முடியாது. மொழி உணர்வைத் தூண்டி அரசியல் கட்சிகள் ஆதாயம் அடைய நினைப்பார்கள்” என்று கருத்துத் தெரிவித்தார்.

564 சிற்றரசர்களை, பாளையக்காரர்களை, சமஸ்தானங்களை, மாகாணங்களை ஒன்று சேர்த்து இந்தியா என்ற ஒற்றைக்குடையின் கீழ் கொண்டு வந்த பின்பு, மீண்டும் பிரிக்கத் தொடங்கினால் மக்களின் ஒற்றுமை சிதறும் என்பது ஆட்சியாளர்களின் எண்ணமாக இருந்தது.

1937ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவின் அரசியல் நிர்வாக அமைப்பினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, நாடு முழுக்க ஒரே ஆட்சி மொழியாக இந்தியைக் கொண்டு வர சிலர் திட்டமிட்டனர். பல மொழிகள் பேசும் இந்தியாவில் ஒரே மொழி இந்தி என்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பிற்கான மக்கள் போராட்டத்தை அதிகரித்திட செய்தது. சென்னை மாகாணத்தில், அப்போது முதல்வராக இருந்த ராஜாஜி ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்கள் இந்தி படிக்க வேண்டுமென சட்டம் கொண்டு வந்தார். மறைமலையடிகளார், பெரியார் ஈவெரா, சோமசுந்தர பாரதியார், திரு.வி.கலியாணசுந்தரனார், கி.ஆ.பெ.விசுவநாதம், பாரதிதாசன் உள்ளிட்ட தலைவர்கள் பொதுக்கூட்டம் நடத்தி இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்நாடு தமிழனுக்கே என்ற முழக்கத்தை அந்தக் கூட்டத்தில் வைத்தனர். சென்னையை ஆந்திராவுக்குக் கொடுக்கக் கூடாது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ம.பொ.சிவஞானம் தலைமையில் தமிழ் மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கையோடு மாநாடுகளும், பொதுக்கூட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. தலையைக் கொடுத்தேனும், தலைநகரைக் காப்போம் என்ற முழக்கத்தை ம.பொ.சி. முன்வைத்தார். ஏற்கனவே இந்தி எதிர்ப்பு போராட்டங்களை எதிர்கொண்டிருக்கும் நிலையில், ஆந்திராவுக்குச் சென்னையைக் கொடுத்துவிட்டால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று ராஜாஜி கருத்து தெரிவித்தார்.

பிரதமர் நேருவின் பரிந்துரைப்படி சென்னை மாகாண அரசு அமைத்த முதல்வர் குமாரசாமி ராஜா தலைமையிலான குழு 1949ஆம் ஆண்டு டிசம்பரில் அறிக்கை அளித்தது. 1950 ஜனவரி 26 அன்று ஆந்திரா மாநிலம் பிரித்திட அக்குழு பரிந்துரை செய்தது. ஆனால், நடுவண் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிபதி வாஞ்ச் தலைமையில் புதிய குழு ஒன்றை அமைத்து நடுவண் அரசு உத்தரவிட்டது. 1952 பிப்ரவரியில் சமர்ப்பிக்கப்பட்ட நீதிபதி வாஞ்ச் குழுவின் அறிக்கையில் சென்னை தற்காலிக தலைநகரமாக அமைத்திட பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. சென்னை மேயர் செங்கல்வராயன் தலைமையில் சென்னையை ஆந்திராவுக்குக் கொடுக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடற்கரையில் பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் 16.02.1952 அன்று நடைபெற்றது. சென்னைக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் ராஜேந்திரப் பிரசாத்துக்கு கறுப்புக்கொடி காட்டிய திராவிட கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், 1952ஆம் ஆண்டு காந்தியவாதி பொட்டி ஸ்ரீராமுலு சென்னையிலுள்ள மயிலாப்பூரில் கோரிக்கை நிறைவேறும் வரை பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கினார். சென்னை மாகாணத்துக்குட்பட்ட தெலுங்கு பேசும் பகுதிகளைப் பிரித்து விசால ஆந்திரா உருவாக்கப்பட வேண்டுமென்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் தொடர்ந்தது. 56 நாட்கள் தொடர் பட்டினிப் போராட்டத்தை நடத்திய பொட்டி ஸ்ரீராமுலு 1952 டிசம்பர் 15ஆம் நாள் உயிரிழந்தார். அவரது மரணம் தெலுங்கு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது.

இறுதி ஊர்வலத்தின்போது அரசு அலுவலகங்கள் தாக்கப்பட்டன. ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமுந்திரி, ஓங்கோல், நெல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தப் பிரச்சினை நடுவண் அரசுக்குப் பெரும் நெருக்கடியை உண்டாக்கியது. டிசம்பர் 19 அன்று ஆந்திர மாநிலம் புதிதாக உருவாக்கப்படும் என்று பிரதமர் நேரு அறிவித்தார். மூன்று நாட்கள் நடைபெற்ற போராட்டங்களும் முடிவுக்கு வந்தன. 1953ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதலாம் நாள், விடுதலை இந்தியாவின் முதல் மாநிலமாக ஆந்திரா உதித்தது.

மதராஸ் ஸ்டேட் என்றழைக்கப்பட்டு வந்த சென்னை மாநிலத்திலிருந்து ஆந்திரா பிரிந்து செல்லும்போதும், ‘மதராஸ் மமதே’ கோரிக்கை வலுவாகவே ஒலித்தது. மதராஸ் முழுமையாக இல்லாவிட்டாலும், கூவம் ஆற்றை எல்லையாகக் கொண்டு பாதியை ஆந்திராவுக்குக் கொடுங்கள் என்றும் கோரிக்கை வைத்தனர். ஆனால், தமிழ்நாட்டுத் தலைவர்களின் எதிர்ப்பினால், மக்களின் போராட்டத்தினால் சென்னையை ஆந்திராவுக்குத் தரப்போவதில்லை என்று 25.03.1953 அன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு உறுதி கொடுத்தார். ஆந்திரா மாநிலத்தின் தலைநகராக கர்நூல் அறிவிக்கப்பட்டது.

தமிழ் பேசும் மக்கள் அடர்த்தியாக வாழ்ந்த, வட ஆற்காடு மாவட்டத்தின் ஒன்பது வட்டங்கள் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டிருந்தது. தேவிகுளம், பீர்மேடு, செங்கோட்டை, கன்னியாகுமரி, விளவங்கோடு உள்ளிட்ட பகுதிகளை திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரித்து தமிழ் மாநிலத்தோடு இணைக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. வடக்கு எல்லைப் போராட்டத்தினை, ம.பொ.சிவஞானம் தலைமையில் கே.விநாயகம், திருமலை, மங்கலக்கிழார், சித்தூர் அரங்கநாதன், ந.சுப்பிரமணியன், வேங்கடசாமி, பி.ஜனார்த்தனம் உள்ளிட்டோர் முன்னெடுத்தனர். இடதுசாரிக் கட்சியினரும், திராவிடக் கட்சியினரும் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட தமிழர்கள் திருவாலங்காடு கோவிந்தசாமி, பழனி மாணிக்கம் இருவரும் சிறையில் உயிர்நீத்தனர். வேங்கடமே தமிழகத்தின் எல்லை, தணிகை தமிழருக்கே என்ற முழக்கத்தோடு தமிழரசு கழகத்தின் ம.பொ.சி. தொடர் போராட்டங்களை நடத்தினார்.

தெற்கு எல்லைப் போராட்டத்தை மார்ஷல் நேசமணி, கவிமணி தேசிய விநாயகம், தாணுலிங்கம், காந்திராமன், குஞ்சன், சாம் நத்தானியேல், ராமசாமி, லூர்தம்மாள் சைமன், நூர் முகமது, பி.எஸ்.மணி, கொடிக்கால், காந்திராம், சிவதாணு, பொன்னப்பன், கோபாலகிருஷ்ணன், சிதம்பரம், டேனியல், நெய்யூர் சிங்கராயர் உள்ளிட்ட தலைவர்கள் முன்னின்று நடத்தி வந்தனர். மக்களின் எழுச்சி மிகு போராட்டம் தொடர்ந்ததால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மார்ஷல் நேசமணி, அப்துல் ரசாக், சிதம்பரநாதன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 1954 ஆகஸ்ட் 11 அன்று புதுக்கடையில் நடந்த போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. மார்த்தாண்டம் தொடுவட்டி, மூலச்சல் பகுதியிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. புதுக்கடை அருளப்பன், கிள்ளியூர் முத்துசுவாமி, புதுக்கடை செல்லப்பா, தேங்காய்பட்டணம் பீர் முகமது, தோட்டவரம் குமரன், தேம்பனூர் பொன்னையன், மேக்கன்கரை இராமையன், தோடுவெட்டி பப்பு, மணலி பாலையன், மாங்காடு தேவசகாயம், பைங்குளம் செல்லையா, புதுக்கடை முத்துக்கண்ணு உள்ளிட்டோர் உயிர் தியாகம் செய்தனர்.

தொடர்ச்சி மதியம் 1 மணி பதிப்பில்

.

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

செவ்வாய் 13 ஜூலை 2021