மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஜூலை 2021

புதுவை போன்று பள்ளிகளைத் திறக்க ஆலோசனை: அன்பில் மகேஷ்

புதுவை போன்று பள்ளிகளைத் திறக்க ஆலோசனை: அன்பில் மகேஷ்

புதுச்சேரி போன்று நாமும் ஏன் பள்ளிகளைத் திறக்கக் கூடாது என்று ஆலோசித்ததாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

புதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காகப் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இந்நிலையில், தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள் உள்ளனர்.

இதுதொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறிய தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, புதுச்சேரியைப் போலவே தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். துறை சார்ந்த அதிகாரிகள் மட்டத்தில் நேற்று ஆலோசனை நடத்தினோம். நாமும் ஏன் பள்ளிகளை திறக்கக் கூடாது என்ற வகையில் தான் ஆலோசனை நடைபெற்றது. எனினும் இன்றைய கொரோனா சூழலைப் பொறுத்து முதல்வர் என்ன வழி வகைகளைத் தெரிவிக்கிறாரோ, அவற்றைப் பின்பற்றுவோம் என்று தெரிவித்தார்.

மேலும், நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து 3.40 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு வந்துள்ளனர். இவ்வாறு வரும் மாணவர்களைத் தக்க வைத்துக்கொள்ளும் வகையில் அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மட்டுமின்றி ஆசிரியர்களைப் போதிய எண்ணிக்கையில் நியமிப்பது, அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

நீட் தேர்வு வேண்டாம் என்பதே அரசின் நிலைப்பாடு. எனினும் கடந்த நவம்பர் மாதம் முதல் மாணவர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஜேஇஇ போன்ற தேர்வுகளுக்கும் பிப்ரவரி முதல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 17 சதவிகிதமாக உள்ள பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை 5 சதவிகிதமாகக் குறைப்பதுதான் தமிழக அரசின் இலக்கு. இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை குறித்துக் கணக்கெடுப்பு நடத்த, துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பள்ளி இடைநிற்றலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

-பிரியா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

செவ்வாய் 13 ஜூலை 2021