மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஜூலை 2021

முகக்கவசம் அணியாமல் மக்கள் : கவலையில் பிரதமர் மோடி

முகக்கவசம் அணியாமல் மக்கள் : கவலையில் பிரதமர் மோடி

கொரோனா மூன்றாவது அலை விரைவில் தாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டு வரும் நிலையில், மலை பிரதேசங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமல் கூட்டமாக கூடுவது கவலை அளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தணிய தொடங்கி, தினசரி பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் கீழ் வந்துள்ளது. இருப்பினும் வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.

இந்நிலையில், எட்டு வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜூலை 13) ஆலோசனை நடத்தினார். காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.

கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைவிடக்கூடாது. நாட்டின் ஒரு சில பகுதிகளில் தொற்று அதிகரித்து வருகிறது. பரிசோதனை, தடம் அறிதல், கண்காணித்தல் மற்றும் தடுப்பூசி செலுத்துதல் போன்றவற்றை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்” என கூறினார்.

இதையடுத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மூன்றாவது அலையை தடுக்க மக்கள் கட்டாயம் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கொரோனா தொற்று முழுமையாக முடிவதற்குள் ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் மலையடிவாரங்கள், சந்தைகளில் மக்கள் முகக்கவசம் அணியாமல் கூட்டமாக இருப்பது கவலை அளிக்கிறது.

கொரோனா வைரஸ் காரணமாக சுற்றுலா மற்றும் வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன என்பது உண்மைதான்… ஆனால் முகக்கவசம் அணியாமல் மலைபிரதேசங்களிலும், சந்தைகளிலும் பெரும் கூட்டம் கூடுவது சரியில்லை என்பது மட்டும் உறுதி.

வைரஸ் தாமாக வருவதில்லை…. பாதுகாப்பு விதிகளை மீறும்போது, அது நம்முடன் வருகிறது. வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பதில் அலட்சியம், கவனக்குறைவு இருந்தால், அது கொரோனா பரவல் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் மீண்டும் மீண்டும் எச்சரிக்கின்றனர். இருப்பினும், மக்கள் அதை கண்டுகொள்வதில்லை.

கொரோனா வைரஸின் ஒவ்வொரு மாறுபாட்டையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மாறி கொண்டே இருக்கும் சூழ்நிலையில் தடுப்பு நடவடிக்கை மற்றும் சிகிச்சை போன்றவைதான் முக்கியம். அதனால், கொரோனா மூன்றாவது அலையை தடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

கொரோனா அதிகரித்து வரும் மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து பரவலை குறைக்க வேண்டும். தொற்றுநோயை சமாளிக்க ஒன்றிய அரசு 23,000 கோடி ரூபாய் தொகுப்புக்கு ஒப்புதல் அளித்தது. இதன்மூலம், வடகிழக்கு மாநிலங்கள் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த உதவி கிடைக்கும்.

மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராக இருப்பதைவிட, அதை தடுப்பதே சிறந்ததாகும். மூன்றாவது அலையை எதிர்த்துப் போராட தடுப்பூசி பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும். மக்களிடம் இருக்கும் தடுப்பூசி தொடர்பான குழப்பங்களை விழிப்புணர்வு மூலம் தெளிவுப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

இதன் தொடர்ச்சியாக ஜூலை 16ஆம் தேதி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். அன்று காலை 11 மணிக்கு நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் தடுப்பூசி இயக்கம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

-வினிதா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

செவ்வாய் 13 ஜூலை 2021