மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஜூலை 2021

'விரைவில் மேகதாது அணை கட்டும் பணி’: எடியூரப்பாவின் உருவபொம்மை எரிப்பு!

'விரைவில் மேகதாது அணை கட்டும் பணி’: எடியூரப்பாவின் உருவபொம்மை எரிப்பு!

மேகதாது அணை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது. இருந்தபோதிலும் இந்த அணை கட்டுவதற்கு தீவிரம் காட்டி வரும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மேகதாது உட்பட அனைத்து நீர்வளத் திட்டங்களுக்கும் ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சர் அனுமதி வழங்க உறுதி அளித்ததாகத் தெரிவித்தார்.

காவிரி ஆற்றுப்படுகையின் மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு கடந்த சில ஆண்டுகளாக முயன்று வருகிறது. ஆனால் இத்திட்டத்துக்குத் தமிழகத்திலிருந்து விவசாயிகள், அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக கடந்த ஜூலை 6ஆம் தேதி, தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், ஒன்றிய நீர் வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக அரசின் அனுமதி இல்லாமல், மேகதாது அணை திட்டத்துக்கு ஒப்புதல் தர மாட்டோம் என ஒன்றிய அமைச்சர் உறுதி அளித்ததாகக் கூறினார்.

இந்நிலையில், “காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின், முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமான பணியையும் மேற்கொள்ளக் கூடாது. கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது.

இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளைத் தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், அனைத்து கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும்” என்று முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தச்சூழலில் ஒன்றிய அமைச்சர் செகாவத், ஜல் சக்தி திட்டம் தொடர்பாக, பெங்களூருவில் அம்மாநில முதல்வர் எடியூரப்பா, உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, நீர்ப்பாசனத் துறை அமைச்சர் மதுசாமி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மேகதாது அணை கட்ட எடியூரப்பா அனுமதி வழங்குமாறு கேட்டுள்ளார். இதற்கு, இவ்விவகாரம் குறித்து ஆராய்ந்து உரிய முடிவெடுக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் தெரிவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மேகதாது திட்டம் உட்பட நிலுவையில் உள்ள அனைத்து திட்டங்களையும் ஆய்வு செய்வதாக எடியூரப்பாவுக்கு மீண்டும் உறுதியளித்தேன். மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் நீதி கிடைக்கும் வகையில் முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

எடியூரப்பா கூறுகையில், தமிழகத்தைப் பற்றிப் பேச விரும்பவில்லை. மேகதாது அணை கட்ட அனைத்து உரிமையும் உண்டு. விரைவில் அதற்கான பணிகளைத் தொடங்கவுள்ளோம். மேகதாது உட்பட நிலுவையில் உள்ள அனைத்து நீர்ப்பாசன திட்டங்களுக்கும் அனுமதி வழங்குவதாக ஒன்றிய அமைச்சர் உறுதி அளித்தார் என்றார்.

எடியூரப்பாவின் உருவபொம்மை எரிப்பு

எடியூரப்பாவின் மேகதாது அணைக் கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தஞ்சாவூரில், காவிரி உரிமை மீட்புக் குழுவினர் போராட்டம் நடத்தினர். தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு நடந்த போராட்டத்தில் எடியூரப்பாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

அதோடு, மேகதாதுவில் அணை கட்டுவதற்கான தொடக்கநிலைப் பணிகள் நடைபெறுகிறதா என்பதை அறிய உண்மை கண்டறியும் குழுவைத் தமிழக அரசு அனுப்ப வேண்டும். தொடக்கநிலை நடைபெற்றால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தடை ஆணை பெற வேண்டும்.

ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை, இப்பணியைத் தொடங்கக் கூடாது எனக் கர்நாடக அரசுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். கர்நாடகத்துக்கு எதிரான பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும்” என்று காவிரி மீட்புக் குழுவினர் வலியுறுத்தினர்.

மேலும் எடியூரப்பாவுக்குக் கண்டனம் தெரிவித்து, அவரது உருவபொம்மையையும் தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதுபோன்று கும்பகோணம், வெள்ளாம்பெரம்பூர், நடுக்காவேரி உள்ளிட்ட இடங்களிலும் எடியூரப்பாவின் உருவ பொம்மை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.

திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே எடியூரப்பாவின் உருவ பொம்மையை எரிப்பதற்காகக் காவிரி மீட்புக் குழுவினர் எடுத்து வந்தனர். ஆனால் அந்த பொம்மையை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

காவிரி உரிமை மீட்புக் குழுவின் திருச்சி அமைப்பாளர் மூ.த.கவித்துவன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

-பிரியா

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

4 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

செவ்வாய் 13 ஜூலை 2021