‘சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசி’: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

politics

கொரோனா மூன்றாம் அலை வருமென மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். அதே சமயத்தில் மூன்றாம் அலையிலிருந்து தற்காத்துக் கொள்ளத் தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.

ஆனால் தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஒரு சில தினங்களாகத் தடுப்பூசி முகாம்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்துக்கு ஒரு கோடி தடுப்பூசிகளைச் சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 13) பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கடந்த ஜூலை 8ஆம் தேதி வரை, 18- 44 வயது பிரிவினருக்காக 29,18,110 தடுப்பூசிகள் இந்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. 1,30,08,440 தடுப்பூசிகள் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காகப் பெறப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கான கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாததால், மாநிலம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் தடுப்பூசிக்கான தேவையைப் பூர்த்தி செய்வது மிகவும் கடினமாக உள்ளது. தடுப்பூசி ஒதுக்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரி செய்து, தேவையான தடுப்பூசிகளை வழங்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசிகள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய சுகாதாரத் துறை தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், 18-44 வயதுடையவர்களுக்காக, அனைத்து மாநிலங்களுக்கும் சமமாகத் தடுப்பூசிகள் பிரித்து ஒதுக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்துக்கு போதுமான தடுப்பூசிகள் ஒதுக்கப்படுவதில்லை. உதாரணமாக, தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தகுதியான 1000த்தில் 302 பேருக்குக் கிடைக்கும் அளவுக்கு மிக குறைவாக தான் ஒதுக்கப்படுகிறது. ஆனால் குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களைப் பொறுத்தவரை முறையே, 533, 493, 446 என்ற அளவில் வழங்கப்படுகிறது.

எனவே தமிழகத்தில் தடுப்பூசி தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ஒரு கோடி தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக அளித்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *