மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஜூலை 2021

சைக்கிள்கள் எங்கே? - காங்கிரஸ் பேரணி சொல்லும் மெசேஜ்!

சைக்கிள்கள் எங்கே? - காங்கிரஸ் பேரணி சொல்லும் மெசேஜ்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தொடர் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து இந்தியா முழுவதும் ஜூலை 7 முதல் 17 வரை போராட்ட வாரமாக அறிவித்திருக்கிறது காங்கிரஸ்.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தலின்பேரில் 8ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் - கையெழுத்து இயக்கம், 12ஆம் தேதியன்று மாவட்டங்களில் சைக்கிள் பேரணி, 15ஆம் தேதி கொரோனா தடுப்பூசி வழங்குவதில் மோடி அரசின் தவறான கொள்கைகள், எரிபொருள் விலை உயர்வினால் ஏற்பட்ட பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து சென்னையில் பெரிய அளவில் பேரணி என முடிவெடுக்கப்பட்டது.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் சைக்கிள் பேரணிகளை நேற்று நடத்தியது காங்கிரஸ் கட்சி. தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கும்பகோணத்தில் நேற்று (ஜூலை 12) மாலை சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. தமிழக காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு பொதுச் செயலாளர் ஓ.வி.எம். வெங்கடேசன் தலைமையில் நடந்த இந்த சைக்கிள் பேரணியில் காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.கே.முரளிதரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்த பேரணி பற்றி நம்மிடம் பேசிய ஓ.வி.எம். வெங்கடேஷ், “பிரதமர் மோடி தலைமையிலான அரசின் தவறான முடிவுகள், மக்கள் நலனில் அக்கறையற்ற செயல்பாடுகள் காரணமாக பெட்ரோல், டீசல் விலை நூறு ரூபாயையும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆயிரம் ரூபாயையும் தொட்டுவிட்டது.

எள்ளளவும் மக்களைப் பற்றி சிந்திக்காமல் வெற்று சர்ச்சைகளிலும், ஆபத்தான விளையாட்டுகளிலும் ஈடுபட்டிருக்கும் மோடி அரசு, நிர்வாக ரீதியாக படுதோல்வி அடைந்துவிட்டது. இதை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி அறிவிக்கப்பட்டது.

அதன்படி நாங்கள் கட்சியினரிடம் சைக்கிளில் வரும்படி சொல்ல, அதன் பின்னர்தான் இன்னொரு வகையிலும் மோடி அரசின் தோல்வி ஒன்று தெரிந்தது. இந்த பேரணிக்காக நாங்கள் சைக்கிள்களைத் தேடியபோதே சைக்கிள் பயன்பாடே பெரும்பாலும் இப்போது இல்லை. இதுவும், அரசின் தவறான கொள்கை முடிவுகளுக்கு ஓர் உதாரணமாகவே இருக்கிறது. ஏழை எளிய மக்கள் மட்டுமல்ல; எல்லாருமே சில வருடங்கள் முன்புவரை சைக்கிள் வைத்திருந்தார்கள். ஆனால் டூவீலர்களின் உற்பத்தியில் உள்ள கவனத்தைக் கொஞ்சம்கூட சைக்கிள் உற்பத்தியில் இந்த அரசு காட்டவில்லை. அதனால்தான் சைக்கிள் உற்பத்தியும் பயன்பாடும் பெரும் சரிவை சந்தித்துள்ளது. சைக்கிள் பயன்படுத்தியபோது பலரும் ஆரோக்கியமாக இருந்தார்கள். இப்போது வீட்டுக்கு வீடு டூவீலரை இ.எம்.ஐ.யில் வாங்கி பெட்ரோல்-டீசல் விலை உயர்வு ஆரோக்கியமின்மை என இரு வகையிலும் அவதிப்படுகிறார்கள்.

கும்பகோணம் டவுனில் சைக்கிளே கிடைக்காத நிலையில் சுற்று வட்டார கிராமங்களுக்குச் சென்று சைக்கிள்களை வாடகைக்கு எடுத்து வந்தோம். சைக்கிள் வாடகையைவிட அவற்றை எடுத்து வருவதற்கான பணம் அதிகமானது. மக்கள் பயன்பாட்டில் இருந்து சைக்கிள்கள் வெகுவாகக் குறைவது சுற்றுச்சூழலுக்கும், நம் ஆரோக்கியத்துக்கும் நல்லதல்ல. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்கும் அதேநேரம் சைக்கிள் பயன்பாட்டிலும் அரசு அக்கறை காட்ட வேண்டும்” என்று தெரிவித்தார்.

தமிழகம் முழுக்க நாம் விசாரித்ததில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் இதையே கூறுகிறார்கள். சைக்கிள் வாடகை 700 ரூபாய் என்றால் அதை லாரியில் வைத்து நகரங்களுக்கு எடுத்துவர 2,000 ரூபாய் ஆகியிருக்கிறது. மேலும் நகரங்களில் பலர் உடற்பயிற்சிக்கான சைக்கிளையே வைத்திருப்பதால் அதையும் காங்கிரஸ் பேரணியில் பயன்படுத்தினார்கள்.

சென்னையில் மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியை மாநிலத் துணைத் தலைவர் கோபண்ணா தொடங்கி வைத்தார். சைக்கிள்கள் தட்டுப்பாடு காரணமாக சென்னை காங்கிரஸார் திடீரென உத்தியை மாற்றினார்கள். அதாவது டூவீலர்களுக்கு பதிலாக சைக்கிளை தேடுவதற்குப் பதில்.... பெட்ரோல், டீசல் விலை உயர்வை இன்னும் நேரடியாக சொல்லும் வகையில் டூவீலர்களை தள்ளிச் செல்லும் பேரணி என்று அதை மாற்றிவிட்டார்கள்.

ஆக, நேற்று நடந்த காங்கிரஸின் சைக்கிள் பேரணியை ஓர் எதிர்க்கட்சியின் போராட்டம் என்ற வகையில் மட்டுமல்ல, சில பத்து ஆண்டுகளுக்கு முன் நம் அன்றாட வாழ்வின் அங்கமாக இருந்த சைக்கிள்களின் மறைவை எடுத்துக் காட்டும் சாட்சியாகவும் இருக்கிறது.

இதற்கிடையே சில அதி தீவிர காங்கிரஸார், “சைக்கிள் சின்னம் தமாகாவோட சின்னம். அதனாலதான் அதை எங்கேயும் காணோம்” என்று பேரணியிலேயே கமெண்ட் அடித்து சிரித்துக் கொண்டிருந்தனர்.

-ஆரா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

செவ்வாய் 13 ஜூலை 2021