மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஜூலை 2021

நீட்டுக்குத் தயாராவதில் தவறில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட்டுக்குத் தயாராவதில் தவறில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வுக்குத் தமிழ்நாடு மாணவர்கள் தயாராவதில் தவறு இல்லை என்றும், நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு அரசின் உறுதியான கொள்கை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று (ஜூலை 12) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நாடு முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும். தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் இன்று (ஜூலை 13) மாலை 5 மணி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் 198 நகரங்களில் நீட் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

கொரோனா காலம் என்பதால் தேர்வு நடத்தப்படும் நகரங்கள் மற்றும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து தேர்வு நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று சைதாபேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நீட் தேர்வு வேண்டாம் என்பதே திமுக அரசின் உறுதியான கொள்கை. அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக ஆட்சியில் திமுகவின் உறுதுணையோடு, சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட தீர்மானம் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இந்தத் தகவலைகூட அதிமுக சட்டமன்றத்தில் கடைசி வரை சொல்லவில்லை.

இந்தச் சூழ்நிலையில் திமுக அரசு நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான உறுதியான, சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த காலங்களில் உயர்கல்வி தொடர்வதற்காக கொண்டுவரப்பட்ட நுழைவுத் தேர்வைத் தவிர்ப்பதற்காக திமுக அரசு குழு அமைத்து நுழைவுத்தேர்வு வராமல் தடுத்தது. அதுபோன்று தற்போது நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. அதன்பின்னர், தமிழ்நாடு அரசின் தெளிவான முடிவு அறிவிக்கப்படும். நீட் தேர்வு படிக்க வேண்டுமா என அனைவரும் கேள்வி கேட்கின்றனர். நீட் தேர்வுக்கு மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதே எனது மற்றும் அனைவரின் விருப்பமாகும்.

மாணவர்களுக்கு நீட் தேர்வால் சிறிதளவேனும் பிரச்சினை ஏற்படக் கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று, நீட் தேர்வுக்கு எதிரான அரசின் சட்டப் போராட்டமும் தொடர்ந்து நடைபெறும். இருப்பினும், நீட் தேர்வுக்கு தமிழ்நாடு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும். தேர்வுக்குத் தயாராவதில் தவறு ஒன்றும் இல்லை. படித்தாலும், அழியக் கூடிய விஷயம் இல்லை கல்வி. அரசு கைவிட்டுவிட்டது என்ற எண்ணம் வரக் கூடாது என்பதற்காகவே நீட் பயிற்சி அளித்து வருகிறோம்.ஆனால் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டுமென்பதே அரசின் 100 சதவிகித நோக்கமாகும்” என்று தெரிவித்தார்.

-வினிதா

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

செவ்வாய் 13 ஜூலை 2021