மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஜூலை 2021

ஸ்டேன் சாமி, யூர்கன் கோனிங்: மக்களாட்சியை மதிப்பிடுவது எப்படி?

ஸ்டேன் சாமி, யூர்கன் கோனிங்: மக்களாட்சியை மதிப்பிடுவது எப்படி?

ராஜன் குறை

சென்ற வாரம் பொதுவாக அரசியல் குறித்து அலட்டிக்கொள்ளாத படித்த உயர் மத்திய தர வர்க்கத்தினரைக் கூட பெருமூச்சு விடவைத்தது யேசு சபை பாதிரியாரும், பழங்குடியினர் நலனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவருமான ஸ்டேன் சாமியின் சிறை வாச மரணம். இவரும் பீமா கொரேகான் எல்கர் பரிஷத் வழக்கில் UAPA (Unlawful Activities Prevention Act) என்ற கொடூரமான சட்டத்தில் கைது செய்யப்பட்டு, எந்த வழக்கு விசாரணையும் நடைபெறாமல், குற்றமும் நிரூபிக்கப்படாமல் இரண்டு ஆண்டுகள் சிறையில் வாடியவர். எண்பத்து நான்கு வயதான முதியவர். பார்கின்சஸ் டிசீஸ் என்னும் நரம்புத்தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டவர். தண்ணீரைச் சிந்தாமல் குடிக்க முடியவில்லை என்பதால் தனக்கு ஒரு ஸ்டிராவுடன் கூடிய கோப்பையை வழங்க வேண்டும் என்று வழக்காடி பெற்றவர். இப்படிப்பட்ட ஒரு முதியவர்தான் அரசுக்கும், பிரதமருக்கும் எதிராக சதி செய்கிறார் என்று கூறி தேசிய புலனாய்வு நிறுவனம் பிணையில்கூட விடுப்பு வழங்காமல் சிறையிலேயே கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைய வைத்தது. சென்ற ஆண்டு இதே ஜூலை மாதம் மற்றொரு முதியவரான கவிஞர் வராவர ராவை பிணையில் விடுதலை செய்யக் கோரி மின்னம்பலத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். (மனசாட்சியின் கைதிகள்). ஸ்டேன் சாமியின் மரணம் ஒரு அரசு நிறுவன படுகொலை என்பதை குறித்து ஏராளமான கட்டுரைகளும், கண்டனங்களும் தேசிய, சர்வதேச ஏடுகளில் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்தக் கட்டுரையின் தலைப்பில் ஸ்டேன் சாமிக்கு நேர் எதிரிடையான இன்னொரு நபரின் பெயரை இணைத்துள்ளேன். யூர்கன் கோனிங். இவர் பெல்ஜிய ராணுவ வீரர். தீவிர வலதுசாரி. நியோ நாஸி; இனவெறி கோட்பாடுகளின் ஆதரவாளர். இவரை கொரோனா காலத்தில் பெல்ஜியத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு கோபப்படுத்தியது. அதனால் ராணுவ ஆயுதக் கிடங்கிலிருந்து நாலு ராக்கெட் லான்ஞ்சர், மெஷின் கன் எல்லாம் களவாடிக் கொண்டு தலைமறைவானார்.

மக்களின் சுதந்திர வாழ்வை கொரோனா பெயரால் அரசாங்கம் கட்டுப்படுத்தலாமா என்று சினம் கொண்டவர், அந்த ஊரடங்கைப் பரிந்துரைக்கும் நுண்கிருமியியல் நிபுணர் மார்க் வான் ரான்ஸ்ட் என்பவரைக் கொல்லப் போவதாக அறிவித்தார். மருத்துவரும் அவரது குடும்பமும் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். மூன்று நாடுகளின் ராணுவம் கோனிங்கைத் தேடுவதில் ஈடுபடுத்தப்பட்டன. அவர் ஓர் அடர்ந்த காட்டுப்பகுதியில் சென்று மறைந்துவிட்டார். பெல்ஜியன் ராம்போ என்று அழைக்கப்பட்ட இவருக்கு ஆதரவாகப் பொதுமக்கள் ஊர்வலங்கள் நடத்தினர். இவருக்கு ஆதரவான முகநூல் பக்கத்தில் ஐம்பதாயிரம் பேர் சேர்ந்த பிறகு அரசு அதை தடை செய்தது. ஒருவழியாக கடந்த ஜூன் 20ஆம் தேதி ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் துர்நாற்றம் வருவதை ஒருவர் சொல்ல, அந்த இடத்தில் அழுகிய நிலையில் கோனிங்கின் பிணம் கண்டுபிடிக்கப்பட்டது.

பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக தன் உயிரை ஈந்த ஸ்டேன் சாமிக்கும், வலதுசாரி இனவெறியன் கோனிங்குக்கும் என்ன தொடர்பு? இரண்டு மரணங்களும் கடந்த இருபது நாட்களில் நிகழ்ந்தவை என்பதைத் தவிர எந்த தொடர்பும் இல்லையே? ஏன் இப்படி அபத்தமாக இருவர் பெயரையும் இணைத்து மக்களாட்சியை மதிப்பிட துணிகிறேன்? இதன் மூலம் நாம் எதையேனும் புதிதாகச் சிந்திக்க முடியுமா? முயன்று பார்ப்போம்.

மக்களாட்சியும், முதலீட்டியமும்

மக்களாட்சி என்றவுடன் நாம் தனி நபர் சுதந்திரம், எல்லோரும் இந்நாட்டு மன்னர், சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம், மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து தங்களை தாங்களே ஆண்டுகொள்ளும் சுயாட்சி என்றெல்லாம் பல விழுமியங்களைத்தான் சிந்திக்கிறோம். அந்த லட்சியங்களின் அடிப்படையில் அரசியல் கட்சிகளை ஓயாமல் குறை சொல்கிறோம். ஆனால் இந்த விழுமியங்களுடன் சேர்ந்து இன்னொரு முக்கியமான விழுமியமும் பிறந்தது. அது தனி நபர் சொத்துரிமை என்பது முற்றானது என்பதும், அது வம்சாவழியானது என்பதும் ஆகும். அதனால் முதலீட்டாளர்கள் தொழில்களில், வர்த்தகத்தில் முதலீடு செய்து லாபம் ஈட்டினால் அது அவர்களது தனிச்சொத்தாகவும், அவர்களுக்குப் பிறகு அவர்கள் வம்சாவழியினர் சொத்தாகவும் இருக்கும். எனவே முதலீட்டியமும், மக்களாட்சியும் தோன்றியபோது பழைய நிலபிரபுத்துவம், மன்னராட்சி போன்றவை மாறினாலும் முற்றாக மறையவில்லை. பல நாடுகளில் அரசியல் நிர்ணய சட்டத்துடன் கூடிய மன்னராட்சி (Constitutional Monarchy) என்பது உருவானது. நிலபிரபுகளெல்லாம் முதலீட்டாளர்களாகவும் மாறினார்கள். அதிகாரக் குவிப்பு என்பது முதலீட்டிய குவிப்பாக மாறியது. கோடீஸ்வரருக்கும் ஓர் ஓட்டுதான், ஏழை விவசாயக் கூலிக்கும் ஓர் ஓட்டுதான் என்றாலும், கோடீஸ்வரரால் பணம் செலவு செய்து பிரச்சாரம் செய்ய முடியும். அவர் நன்கொடை கொடுத்து கட்சிகளை வெற்றி பெற வைக்க முடியும்.

இதனால் தவறென்ன, லாபம் என்றொரு ஊக்கம் இருந்தால்தானே ஒருவர் துணிச்சலாக தொழிலில் ஈடுபடுவார், பலருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவார், தொழில்முனைவோர் செல்வத்தை உருவாக்குபவர்கள் என்று இந்த முறையை ஆதரிப்பவர்கள் சொல்வார்கள். ஆனால் இப்படி செல்வத்தைக் குவிக்கும் பல கார்ப்பரேட் அமைப்புகள் லாபத்துக்காக மக்களின் வாழ்வாதாரத்தையே சிதைக்கும்போது அதை யாரும் தடுக்க முற்படுவதில்லை. குறிப்பாக நவீன சமூகமாக மாற்றம்பெறாத ஆதிவாசி குழுக்கள், பழங்குடி சமூகங்கள் அவர்கள் எளிமையாக இயற்கையுடன் இணைந்து வாழ்ந்துவந்த இடங்களிலிருந்து அகற்றப்பட்டு அவர்கள் நிலங்கள் கனிம வளங்களைத் தோண்டுவதற்காக கையகப்படுத்தப்படுகின்றன. ஆனால் அந்த வளங்களில் அவர்களுக்கு எந்த பங்கும் தரப்படுவதில்லை.

அவதார் திரைப்படத்தில் பண்டோரா என்ற கிரகத்தில் நவி என்ற பழங்குடியினரை அவர்கள் வாழ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தி அங்கே நிலத்தடியில் உள்ள எரிபொருளை எடுக்க மனிதர்கள் முயல்வார்கள். பூமியிலும் அதைத்தான் மனிதர்கள் முந்நூறு ஆண்டுகளாக செய்து வருகிறார்கள். அமெரிக்க, ஆப்பிரிக்க, ஆசிய கண்டங்களில் ஐரோப்பியர்கள் தங்கள் முதலீட்டிய நடைமுறையால், அதன் தொழில்நுட்பத்தால் பூர்வகுடிகளை அப்புறப்படுத்தியும், கொன்றும் அவர்கள் நில வளங்களைச் சுரண்டி பெரும் தொழில் சாம்ராஜ்யங்களை உருவாக்கினார்கள். இன்றளவும் அதைச் செய்து வருகிறார்கள். இது திரைக்குப் பின்னால் நடைபெறும் செயல்; திரைக்கு முன்னால் மக்களாட்சி, சம உரிமை, சமத்துவம், இத்யாதி தத்துவங்களைச் சொல்வார்கள். இந்த மக்களாட்சி என்ற வடிவம்தான் இதுவரை உருவான அரசியல் வடிவங்களில் முற்போக்கானது என்பதால் பல உன்னதமான தலைவர்களும், சிந்தனையாளர்களும் அதில் ஈடுபடத்தான் செய்கிறார்கள். நாமும் செய்யத்தான் வேண்டும். ஆனால் மக்களாட்சி ஒருபுறம் நிலத்தை சமன் செய்ய, செய்ய, முதலீட்டியம் மற்றொருபுறம் ஆழ குழி பறித்து பெரும் மேடு பள்ளங்களை உருவாக்குகிறது. இந்த முரண்பாட்டின் இருவேறு வெளிப்பாடுகள்தான் ஸ்டேன் சாமியும், கோனிங்கும். முதலில் இந்த பெல்ஜியம் மற்றும் கோனிங் குறித்து தெரிந்துகொள்வோம்.

(Congo paintings by Sammy Baloji.)

பெல்ஜியமும், காங்கோவும்

பெல்ஜியம் என்றொரு நாட்டை பிற ஐரோப்பிய நாடுகள் எல்லாம் சேர்ந்து 1830ஆம் ஆண்டுதான் உருவாக்கின. அதற்கு முன்னால் டச்சு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில்தான் இந்தப் பகுதி இருந்தது. பெல்ஜியத்தில் பேசப்படும் டச்சு மொழி ஃபிளமிஷ் எனப்படுகிறது. அவர்கள் டச்சு ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற போராடியதால் இங்கிலாந்து முதலிய நாடுகள் தலையிட்டு பெல்ஜியம் என்ற தனி நாட்டை உருவாக்கின. பிரஸ்ஸல்ஸ் அதன் தலைநகரம். சிறிய நாடாக இருந்தாலும் ஐரோப்பிய தொழிற்புரட்சியில் பங்கேற்று வளமிக்க நாடாக உருவாக தலைபட்டது பெல்ஜியம். ஐரோப்பிய நாடுகளுக்கு எல்லாம் காலனீய ஆட்சிப் பகுதிகள் உலகெங்கும் இருந்ததால் பெல்ஜியத்திற்கும் ஒரு நிலப்பகுதி தேவைப்பட்டது. ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டினை தன்னுடைய தனிப்பட்ட காலனீய ஆதிக்கத்திற்குள் கொண்டுவந்தார் பெல்ஜிய மன்னர் இரண்டாம் லியோபால்ட் (1835-1909). காங்கோவிலுள்ள ஆப்பிரிக்க பழங்குடிகள் மீது மிக கொடூரமான அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்ட மன்னர் ரப்பர், தந்தம் உள்ளிட்ட பொருட்களை பெருமளவில் அங்கிருந்து சுரண்டி எடுத்து வந்தார். சட்டபூர்வமாக பெல்ஜியத்தின் காலனீயாக காங்கோ மாறுவதற்கு முன்னரே பல லட்சம் பழங்குடியினர் கொல்லப்பட்டார்கள். அடிமைகளின் கரங்கள் துண்டிக்கப்பட்டன. இந்த படுகொலைகளை குறித்து இன்றும் வரலாற்று ஆசிரியர்கள் விவாதித்து வருகிறார்கள். காங்கோவின் மீதான பெல்ஜியத்தின் ஆதிக்கம் 1960 வரை நீடித்தது. அதன் பிறகும் ஐரோப்பிய முதலீட்டியத்தின் பிடியிலிருந்து காங்கோ விடுதலை பெற்றதாகக் கூற முடியாது.

இந்த வரலாற்று பின்புலத்தில் இன்றைய பெல்ஜியத்தை அணுகலாம். அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை ஒரு கோடியே பதினைந்து லட்சம். கிட்டத்தட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் மக்கள் தொகைதான். ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி தமிழ்நாட்டைவிட இரண்டு மடங்கு அதிகம். வளமான வாழ்க்கைதான். ஆனால் அரசியல் ரீதியாக பெரும் குழப்பம் நிலவுகிறது. மக்கள் தொகையில் அதிகம் பேர் டச்சு/ஃபிளமிஷ் மொழி பேசுகிறார்கள். அதற்கடுத்து ஃபிரெஞ்சு மொழி பேசுபவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். கொஞ்சம் பேர் ஜெர்மன் மொழி பேசுபவர்கள். ஃபிரெஞ்சு மொழி பேசும் பகுதி வளர்ச்சியில் பின் தங்கியிருப்பதாகக் கருதப்படுகிறது, அதனால் மூன்று மொழி பேசுபவர்களுக்கும் தனித்தனி நாடாளுமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக உள்ள நாடாளுமன்றத்திலும் நிலையான அரசு இல்லை. பல்வேறு வலதுசாரி, இடதுசாரி, பிரிவினைவாத கட்சிகள் உள்ளன. மொத்தத்தில் பெல்ஜியம் ஒரு செயல்படாத, தோல்வியுற்ற அரசாங்கத்தைக் கொண்டிருப்பதாக எகானிமிஸ்ட் பத்திரிகையில் வெளியான கட்டுரை கடுமையாக சாடுகிறது. இந்த அரசியல் குழப்பத்தில் மிக முக்கியமான அங்கம் இனவெறி போக்குகள் அதிகரிப்பது. ஆப்பிரிக்க, ஆசிய நாட்டவர் குடியேற்றம் இனவெறியாளர்களால் வெறுக்கப்படுகிறது.

பொருளாதார வளமும், கல்வியறிவும் உள்ள ஒரு கோடி பேரை கொண்ட சிறிய நாட்டில் இத்தகைய அரசியல் குழப்பமும், இனவெறியும் நிலவுவதை எப்படிப் புரிந்துகொள்வது? அந்த நாட்டின் வரலாறே காங்கோவில் நடத்திய கொடுமையான காலனீய ஆட்சியால், இரக்கமற்ற சுரண்டலால் கறைபட்டது என்பதுடன் இதை எப்படி இணைத்துப் பார்ப்பது? இந்த கட்டுரையினுள் இந்தக் கேள்விகளை மேலும் விரிவாக விவாதிக்க இடமில்லை என்பதால் இந்த ஆழமான முரண்பாடுகளை மட்டும் கவனத்தில் கொண்டு மேலே செல்வோம்.

ஸ்டேன் சாமி ஏன் அரசின் விரோதி ஆனார்?

ஸ்டேன் சாமி போல அமைதி வழியில் தொண்டாற்றுபவர் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக, அவர்கள் வாழ்வாதாரங்களுக்காகப் போராடுகிறார். அதே சமயம் மாவோயிஸ்டுகளும் பழங்குடி மக்களை கார்ப்பரேட் நிறுவன சுரண்டல்களுக்கு எதிராக அணி திரட்டுகிறார்கள். அதனால் அரசு பழங்குடி மனித உரிமை, மாவோயிச கிளர்ச்சி எல்லாவற்றையும் ஒன்றாகக் குழப்பி எல்லாவற்றையும் அரசுக்கும், தேசத்திற்கும் எதிரானதாக சித்திரிக்கிறது.

ஒரு வகையில் யோசித்தால் நகரங்களில் வாழ்பவர்களுக்குப் பொருளாதார வளர்ச்சியில் இருக்கும் ஈடுபாடு பழங்குடி, ஆதிவாசி மக்களின் உரிமைகளில் இருப்பது சாத்தியமில்லை. தூத்துக்குடி போன்ற ஒரு நகரத்திலேயே வேதாந்தா கார்ப்பரேஷனின் சுற்றுச்சூழலுக்கு கேடு பயக்கும் ஸ்டைர்லைட் ஆலைக்கு எதிராக கடுமையாக போராட வேண்டி வந்தது. ஜாலியன் வாலாபாக் படுகொலை போல மக்கள் மீது போலீஸ் கண்மூடித்தனமாக சுட்டு பதிமூன்று பேர் மரணமடைந்த பிறகுதான் அந்த ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஒரு வளர்ச்சியடைந்த நகரத்திற்கே இதுதான் கதி என்றால் பழங்குடி மக்கள் வசிக்கும் மலைக்காடுகளில் கார்ப்பரேட் நிறுவனம் என்ன செய்தாலும் யார் கேட்கப் போகிறார்கள்? மனித உரிமை குழுக்கள் கேட்பார்கள். மாவோயிஸ்டுகள் போராடுவார்கள். அதனால் அனைவரும் ஒன்றுதான் என்று அரசு சித்திரிப்பது சுலபம்.

ஸ்டேன் சாமி கைது செய்யப்பட்ட எல்கர் பரிஷித் வழக்கில் பிரதமரைக் கொல்ல, கலவரம் செய்ய சதி என்பதற்கான போலி தரவுகள் எல்லாம் கைதானவர்களின் மடிக்கணினியில் வெளியிலிருந்து விஷமிகளால் வைரஸ் போல பதிவேற்றம் செய்யப்பட்டது என்பதை சர்வதேச தடயவியல் நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், இந்தியாவின் தேசிய புலனாய்வு நிறுவனம் அதை கேட்பதாக இல்லை. இந்தியாவில் உள்ள மனித உரிமை அமைப்புகள், சிந்தனையாளர்கள், உலக அளவிலான மனித உரிமை அமைப்புகள், நோம் சாம்ஸ்கி போன்ற கல்வியாளர்கள் எல்லோரும் இந்த கைதிகளை பிணையில் விடுவித்து வழக்கை நடத்தச் சொன்னால்கூட மத்திய அரசு கேட்பதாக இல்லை. எந்த விசாரணையும் இல்லாமல் இந்த வழக்கில் பொதுமன்றத்தில் நன்கு அறியப்பட்ட பதினொரு பேர், ஆனந்த் டெல்டும்ப்டே, சுதா பரத்வாஜ், ரோனா வில்சன் உள்ளிட்டோர் ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொய் குற்றங்கள் என்று விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என்பது தெரியவில்லை. இப்போது ஒருவர், ஸ்டேன் சாமி சிறைவாசத்திலேயே இறந்துவிட்டார்.

இதுதான் மக்களாட்சிக்கு முதலீட்டியம் மாட்டும் நுகத்தடி. அதற்குத் தேவையான வளங்களை முதலீட்டியம் சுரண்டியெடுப்பதை மட்டும் யாரும் தடுக்க முடியாது. தடுக்க நினைப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள். காங்கோவில் என்ன நடந்ததோ, அதேதான் ஜார்கண்ட் மலைகளில், காடுகளில் நடக்கிறது. ஒரிஸாவில், சட்டீஸ்கரில் நடக்கிறது. இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன. அந்தப் பகுதியில் வாழும் பழங்குடியினர் அப்புறப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் வாழ்வுரிமையும், வாழ்வாதாரங்களும் மதிக்கப்படுவதில்லை. அவர்களுக்காக குரல் கொடுப்பவர்களை நீதிமன்றத்தாலும் காக்க முடிவதில்லை; ஊடகங்கள், பொது மன்றத்தாலும் காக்க முடிவதில்லை; வெகுஜன கட்சிகளாலும் காக்க முடிவதில்லை. அவதார் திரைப்படத்தில் மட்டும்தான் கதாநாயகன் பண்டோரா கிரகத்து நவி பழங்குடியினரின் உடலில் கூடுவிட்டு கூடுமாறி ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடிக்கிறான். சினிமாவில் மட்டும்தானே அதெல்லாம் சாத்தியம். நடைமுறை வாழ்க்கையில் மக்களாட்சியின் கொல்லைப்புறத்தில் வீசும் இந்த கவிச்சி நாற்றத்தைக் கண்டுகொள்ளாமல் நாம் முன்னறையில் வளர்ச்சியின் “பலன்களை” அனுபவிக்க வேண்டியதுதான். நமது உரிமைகளும் பறிக்கப்படும் வரை.

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: [email protected]

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

திங்கள் 12 ஜூலை 2021